நெல்லூர்:டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த, "தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்' ரயிலில், நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியான எஸ்-11 பெட்டியில் மட்டும் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், 32 பேர், உடல் கருகி, பரிதாபமாக பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரயிலில் மர்மமான முறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கு, விஷமிகளின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என, ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
டில்லியிலிருந்து சென்னைக்கு தினசரி, "தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 28ம் தேதி இரவு 10 மணிக்கு, டில்லியிலிருந்து புறப்பட்டது. ஆக்ரா, குவாலியர், ஜான்சி, போபால், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும். இந்த ரயில் நேற்று நள்ளிரவில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 12.15 மணிக்கு வந்தது. சில நிமிடங்களுக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி விரைந்தது.
110 கி.மீ., வேகம்:
மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில், அதிகாலை மூன்று மணிக்கு, நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால், ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ரயிலின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடன் கூடிய, எஸ்-11 பெட்டி, திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த பெட்டிக்குள் ஒரே புகை மண்டலமாகக் காணப்பட்டது. பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பலருக்கு இந்த விபரீதம் குறித்து தெரியவில்லை.அப்போது, ரயில், நெல்லூர் ரயில்வே ஸ்டேஷனை கடந்து கொண்டிருந்தது. நெல்லூரில், தமிழ்நாடு எக்ஸ்பிரசுக்கு நிறுத்தம் இல்லை என்பதால், ரயில் அங்கு நிற்கவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் பணியிலிருந்த துணை மேலாளர், ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து, தீப்பற்றி எரிவதையும், புகை மண்டலமாகக் காட்சி அளிப்பதையும் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவருக்கும், உயர் அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது.
அலறல்:
எஸ்-11 பெட்டிக்கு பக்கத்து பெட்டிகளில் இருந்தவர்கள், அலறியடித்துக் கொண்டு வெளியில் குதித்தனர். தீப்பற்றிய பெட்டிக்குள் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த பயணிகளை, காப்பாற்ற முயற்சித்தனர். அந்த பெட்டியின் கதவுகள், இறுக மூடப்பட்டிருந்ததால், திறக்க முடியவில்லை. இதனால், அதிலிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதற்குள், தீ மள மளவென எரிந்து, புகை மண்டலம் அதிகரித்தது. பெட்டிக்குள் சிக்கியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர், உள்ளேயே மயங்கி விழுந்தனர்.
32 பேர் பலி:
சிறிது நேரத்தில், தீயணைப்பு படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள், பெட்டியின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகியிருந்தன. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த 72 பேரில், 32 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, நெல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடம் முழுவதும், போர்க்களம் போல் காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியின், மேல் படுக்கையில் படுத்திருந்த சிலர், படுத்த நிலையிலேயே உடல் கருகி இறந்து கிடந்த காட்சி, கண்களைக் குளமாக்கும் வகையில் இருந்தது. மீட்கப்பட்ட சிலர், தீக்காயங்களால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல், கதறி அழுதது, பரிதாபத்தை ஏற்படுத்தியது. பல உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண முடியவில்லை.
சதி?
விபத்து குறித்து அறிந்ததும், ரயில்வே அமைச்சர் முகுல் ராய் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:விபத்தில் இறந்தவர்களுக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து, சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக, முன்னதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விபத்து நடந்த விதத்தையும், நேரில் பார்த்தவர்கள் கூறும் தகவல்களையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, சதிச் செயல் காரணமாக, இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகள் சிலரும், விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த லெவல் கிராசிங்கில் பணியிலிருந்த கேட்மேனும், ரயிலில் வெடிச் சத்தம் போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர். சதிச் செயல் நடந்துள்ளதாக, உறுதியாகக் கூற முடியவில்லை என்றாலும், அதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
விசாரணை:
ஆனாலும், விசாரணை நடத்தாமல், எதையும் கூற முடியாது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில், எளிதில் தீப்பற்றி எரியக் கூடிய வகையிலான பொருட்கள் எதுவும் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக, உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு மற்றும் மத்திய பிராந்தியம்) டி.கே.சிங் தலைமையிலான குழு, இதுகுறித்து விசாரணை நடத்தும்.
இழப்பீடு:
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், சிறிய அளவில் காயமடைந்தோருக்கு, தலா 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படும்
.இவ்வாறு முகுல் ராய் கூறினார்.தீ விபத்தில் இறந்தவர்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், ஆந்திர
முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எஸ்-11 பெட்டியில்இருந்தவர்கள் யார்?விபத்தில் இறந்த பலரது
உடல்களை, அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில், அந்த பெட்டியில் இருந்த
72 பேரில், 11 பேர் டில்லியிலிருந்தும், 11 பேர் போபாலில் இருந்தும்,
வாரங்கல் மற்றும் விஜயவாடாவில் இருந்து 28 பேரும் பயணித்ததாக, ரயில்வே
முன்பதிவு அட்டவணையின்படி தெரிய வந்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்படாத
டிக்கெட் வாங்கியிருந்த பயணிகளும், இந்த பெட்டியில் பயணித்திருக்கலாம்
என்றும் கூறப்படுகிறது.
பலத்த மழை பெய்தும் தீப்பிடித்த மர்மம் என்ன?தீ விபத்தில்
சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மணிகண்டன் கூறியதாவது:
டில்லியில் இருந்து ரயில் புறப்பட்டதில் இருந்தே, பெரும்பாலான இடங்களில்
பலத்த மழை பெய்தது. ஆந்திராவிலும் மழை பெய்தது. இதனால், பயணிகள், ஜன்னல்
கண்ணாடிகளை மூடியிருந்தனர். குளிர்ந்த காற்று வீசியதாலும், மழை
பெய்ததாலும், பெரும்பாலான பயணிகள், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
நெல்லூரைக் கடந்ததும், ரயில் திடீரென நின்றது. நான், குளிர் சாதன வசதியுடைய
பெட்டியில் இருந்தேன். வேகமாக வெளியில் வந்து பார்த்தபோது, எஸ்-11
பெட்டியில், தீ, மள மளவென எரிந்து கொண்டிருந்தது.புகையும் அதிகமாக
இருந்ததால், யாரும் அருகில் செல்ல முடியவில்லை. ரயில் வந்த வழித்தடத்தில்,
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ரயில் பெட்டிகளின் வெளிப்புறம்
முழுவதும், ஈரமாக இருந்தது. அப்படி இருந்தும், எஸ்-11 பெட்டியில்,
தீப்பற்றி எரிந்தது, ஆச்சர்யமாக இருந்தது. மின் கசிவால் தீப்பற்றி
எரிந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், ரயிலின் மற்ற பெட்டிகளில் விளக்குகள்
எரிந்து கொண்டிருந்தன. "ஏசி' பெட்டிகளில், "ஏசி' தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருந்தது. தீ விபத்துஏற்பட்ட பெட்டிக்கு அருகில் இருந்த, எஸ்-12 பெட்டியில் பயணித்த ராணுவ வீரர் ஒருவர், மொபைல் போன் பேசுவதற்காக எழுந்தபோது, எஸ்-11 பெட்டியில் அலறல் சத்தம் கேட்டதாகவும், இதற்கு பின், அவர் தான், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தியதாகவும், என்னுடன் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் விபத்து குறித்து தெரிந்து கொள்வதற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு தகவல் மையம்:தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து, பயணிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்திற்கு, 044-2535 7398, 2533 0825 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிந்து கொள்ளலாம். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள், விஜயவாடா மற்றும் நெல்லூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து, தகவல் தெரிந்து கொள்வதற்கு, ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே தகவல் மையத்திற்கு, 0866-2575038, 2576924 என்ற தொலைபேசி எண்களிலும், நெல்லூர் தகவல் மையத்திற்கு, 0861-2345863, 2345864, 2345865, 2345866 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் பணிபுரிந்த நான்கு இன்ஜினியர்கள் பலி:ரயில் விபத்தில், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய, அவினாஷ், ஷாலினி, அஸ்வினி, பல்லவி ஆகிய நான்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், உடல் கருகி இறந்தனர். இவர்களில், அவினாஷ் தன் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பதற்காக, சொந்த ஊரான வாரங்கல்லுக்கு வந்து விட்டு, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த பயணமே, இவரின் கடைசிப் பயணமாக அமைந்து விட்டது.
மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்கள் :ரயில் விபத்தில் பலியான நான்கு பேரின் உடல்கள், முற்றிலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போய் இருந்தன. இவர்கள், ஆண்களா, பெண்களா என்பதையே கண்டறிய முடியாத அளவுக்கு, உடல்கள் கருகிப் போயிருந்தன. இதையடுத்து, இந்த நான்கு உடல்களையும், மரபணு சோதனைக்கு அனுப்பவுள்ளதாக, ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
5 பேருக்குசென்னையில் சிகிச்சை :தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.11, பெட்டியில் பயணம் செய்து தப்பித்த,போபாலை சேர்ந்த உபேந்திரசவுத்ரி, 24. திவாகர், 35. ஓம்பிரகாஷ், 25. வினய்சிங் சந்தல், 26. சர்தார், 35. ஆகிய 5 பேருக்கும் கை மற்றும் கால்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை சென்னை வந்தனர். இவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சர்தார், திவாகர் இருவரும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விட்டனர். உபேந்திர சவுத்ரி, வினய்சிங் சந்தல், ஓம்பிரகாஷ் ஆகியோர் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பியதால், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ பற்றிய பெட்டியில் ஏதோ வெடிப்பது போல பயங்கர சத்தம் வந்தது-டிக்கெட் பரிசோதகர்
Advertisement
தகவல்:""தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றிய பெட்டியில் ஏதோ வெடிப்பது போல
சத்தம் வந்தது,'' என்று ரயில் டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் டிக்கெட் பரிசோதகர் சாம்பசிவ ராவ் கூறும் போது, ""தீ விபத்து ஏற்பட்ட போது எஸ்-11 பெட்டியில், பயங்கரமாக ஏதோ வெடிப்பது போல சத்தம் வந்தது. அதனை தொடர்ந்து
பெட்டி முழுவதும் தீ பரவியதால், பயணிகள் வெளியில் வரமுடியவில்லை. பெட்டி
முழுவதும் புகை சூழ்ந்து விட்டதால், தீயை அணைத்த பிறகே உள்ளே இறந்தவர்களின்
சடலம் மீட்கப்பட்டது. மீட்புப் பணிக் குழுவினர் பெட்டியை சோதனை செய்தபோது,
மண்ணெய் கேன் ஒன்றும் இருந்துள்ளது. விஜயவாடாவிலிருந்து முன்பு பதிவு
செய்யாத பயணிகள், ரயிலில் சிலர் ஏறியதாகவும் பயணிகள் தரப்பில் பேசப்பட்டது.
விசாரணைக்கு பிறகு தான் உண்மை நிலை தெரிய வரும்,'' என்றும்
தெரிவித்துள்ளார். இந்த சந்தேகத்தை எஸ்-11 பெட்டியில் பயணம் செய்த ரயில்
பயணி நிஷாந்ஷாவும் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல்: தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-11 பெட்டியில், பயணம் செய்தவர்களின் முன்பதிவு
பட்டியலில் குளறுபடி உள்ளதால், இப்பெட்டியில் பயணம் செய்துஇறந்த பயணிகளின் அடையாளம் காணுவதற்கு அதிகாரிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-11 பெட்டியில், 72 பேர் பயணம் செய்துள்ளனர். நெல்லூர் அருகே விபத்து நடந்த பிறகு, அதில் பயணம் செய்து இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் போது, முன்பதிவு செய்யாத பயணிகளும் அதில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளில் முந்தைய நிலையங்களில் இறங்கியவர்கள் எத்தனை பேர், பயணத்தை ரத்து செய்தவர்கள் எத்தனை பேர் என்றும் உடனடியாக தெரியாத நிலையிலும், விபத்தில் அனைவரின் உடலும் முழுவதுமாக கருகிய நிலையில் உள்ளதாலும் உடனடியாக அடையாளம் காண முடியாமல் நேற்று இரவு வரை அதிகாரிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இந்த ரயில், விஜயவாடாவுக்கு பிறகு சென்னை சென்ட்ரலில் தான் நிற்கும் என்பதால், இதில் வந்த பயணிகள் தமிழகத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேர், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்றும் அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் சிரமப்படும் நிலை நேற்று இரவு வரை தொடர்ந்தது.
இதுவரை நடந்த ரயில் தீ விபத்துகள்* 1985 பிப்., 23: மத்திய பிரதேசத்தில் ராஜ்நன்கான் ரயில் தீ விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலி.
* 1990 ஏப்., 16: பாட்னா அருகே பாட்னா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலி.
* 1994 ஆக்., 26: ராஞ்சி அருகே மும்பை - ஹவுரா ரயிலில் தீ பிடித்ததில் 27 பேர் பலி.
* 2002 பிப்., 27: குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி ரயில் தீக்கிரையாக்கப்பட்டதில் 58 பேர் பலி.
* 2003 மே 15: லூதியானா அருகே கோல்டன் டெம்பிள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 36 பேர் பலி, 15 பேர் படுகாயம்.
* 2011 நவ., 22: டேராடூன் அருகே, ஹவுரா - டேராடூன் எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி.
* 2012 ஜூலை 30: நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், மின்கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி.
""தீ விபத்துக்குள்ளான பெட்டியின் கழிவறை அருகே மின் கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக விபத்து நடந்திருக்கக் கூடும். ரயில் நிறுத்தப்பட்டதும், பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. பெட்டியின் ஒரு கதவு, இறுக்கமாக மூடப்பட்டிருந்தது; அதை திறக்க முடியவில்லை. மற்ற கதவுகளின் வழியே, பயணிகள் அடித்துப் பிடித்து இறங்க முயற்சித்தனர். அதற்குள், தீ வேகமாக பரவி விட்டது.
-ஸ்ரீதர்நெல்லூர் கலெக்டர் ""தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 பேர் பலியானது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ரயில் விபத்துகள் நடப்பது மிகவும் மோசமானது. மத்திய அரசு செயல்படுகிறதா, இல்லையா என்பதை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கேட்க விரும்புகிறோம். இந்த விபத்துக்கு காரணம் என்ன, எங்கு தப்பு நடந்தது என்ற விவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-ரவிசங்கர் பிரசாத்,பா.ஜ., செய்தி தொடர்பாளர்.