கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகரில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து, ஒரு குடம், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, இந்தாண்டு பருவ மழை பொய்த்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் வறண்டுள்ளன. கோத்தகிரிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், ஈளாடா தடுப்பணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது; இதனால், கோத்தகிரி நகரப் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கடந்த 20 நாட்களாக தண்ணீர் பொது வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியாரை நாடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், தனியாரிடம் ஒரு குடம் தண்ணீர், ஐந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் வரை, தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியுள்ளது.
கோத்தகிரி கிளப் ரோடு, டானிங்டன், ராம்சந்த் உள்ளிட்ட பல பகுதிகளில், காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல், ஏழைகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கோத்தகிரி கிளப்ரோடு பகுதியில் வசிக்கும் பாபு கூறும்போது, ""முன்பெல்லாம், வறட்சி நாட்களில் தட்டுப்பாடு ஏற்படும்போது, லாரிகளில் தண்ணீர் தரப்பட்டு வந்தது. தற்போது, பேரூராட்சி நிர்வாகம் அத்தகைய ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால், ஐந்து ரூபாய் கொடுத்து, ஒரு குடம் தண்ணீரை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது,'' என்றார்.
கோத்தகிரி பேரூராட்சித் தலைவர் வாப்பு கூறுகையில், ""ஈளாடா தடுப்பணை வற்றியதால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை பூர்த்தி செய்ய, தண்ணீர் பாலம் நீர் ஆதாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. லாங்க்வுட் சோலை மற்றும் பட் மைதானம் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில் இருந்தும், தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.