சென்னை: "காலரா பிரச்னைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை விடத் தயாரா?'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை மாநகரில் வேகமாகப் பரவிவரும் காலரா நோயை கட்டுப்படுத்தாத சென்னை மாநகராட்சியைக் கண்டித்தும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காத நிர்வாகத்தைக் கண்டித்தும், தி.மு.க., சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: நான் மேயர் பதவி வகித்தபோது, மக்களின் சேவகனாகப் பணிபுரிந்தேன். குடிநீர் பிரச்னை ஏற்பட்டிருந்தால் எனக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியது கிடையாது.
சவாலுக்கு சவால் : இப்போதைய மேயரிடம் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகக் கூறினால், குடிநீருக்கும், மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். சென்னையில் வாந்தி, பேதி, காலரா பரவுகிறது என்று கூறினால், உரிய நடவடிக்கை எடுக்காமல் மறுப்பு சொல்வதிலேயே குறியாக உள்ளனர். காலராவை வைத்து அரசியலை நடத்தும் எண்ணம் தி.மு.க., வுக்கு கிடையாது. காலரா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகளே கூறுகின்றனர். காலரா இல்லை என, சவால் விட்டு மேயர் பேசுகிறார். அவருக்கு நாங்களும் பதில் சவால் விட்டு எங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. மக்கள் நலனில் அக்கறை எடுத்து கேட்கிறோம். எங்கள் சவாலை ஏற்க தயாரா?
வெள்ளை அறிக்கை : நாளையே அனைத்துக் கட்சி குழு அமையுங்கள். அதில் கட்சிக்கு ஒரு பிரதிநிதி, பத்திரிகைகளுக்கு ஒரு பிரதிநிதியை இடம் பெறச் செய்யுங்கள். நீங்கள் சொல்லும் பகுதிக்கு குழு வந்து பார்வையிடட்டும். அப்போது காலரா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். நாங்கள் சொல்லும் பகுதிக்கும் நீங்கள் வாருங்கள். காலரா இருப்பதை நிரூபித்துக் காட்டுவோம். காலரா இல்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறுகிறார். காலரா பிரச்னைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட அவர் தயாரா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
குஷ்பு ஆவேசம் : கண்டன ஆர்ப்பாட்டத்தில், "சென்னை மாநகராட்சி ஈக்கள், கொசுக்களின் இருப்பிடம்', "காலரா நோயின் பிறப்பிடம்' உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை நடிகை குஷ்பு உட்பட தி.மு.க, நிர்வாகிகள் ஆவேசமாக எழுப்பினர். சில தொண்டர்கள் கொசு வலைகளையும், கொசுக்களை விரட்டி அடிக்கக் கூடிய எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வந்தனர். மேடையில் முன் பகுதியில் கொளத்தூர் பகுதி தி.மு.க., சார்பில் கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.