புதுடில்லி : புனே குண்டுவெடிப்பு திட்டமிட்ட செயல் எனவும், இது
பயங்கரவாதிகளின் சதி இல்லை என உறுதியாக கூற முடியாது எனவும் மத்திய உள்துறை
செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்தில் இருந்து
கைப்பற்றப்பட்ட வெடிக்காத 2 வெடி பொருட்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை
நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது. பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த குண்டு வெடிப்புகள் நேற்றிரவு 7.28 முதல் 7.35 மணிக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், இந்த குண்டு வெடிப்புகள் பயங்கரவாதிகளால் நடத்தப்படவில்லை என, புனே போலீஸ் கமிஷனர் குலாப்ராவ் பால் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேசிய புலனாய்வு ஏஜன்சி மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், டில்லி, மும்பை பகுதியிலிருந்து தேசிய புலனாய்வு அமைப்பினரும் புனே விரைந்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுசில்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளான நேற்றே இந்த சம்பவம் நடந்துள்ளது, அவருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. புனேயில், கடந்த 2010ம் ஆண்டு, ஜெர்மன் பேக்கரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளுக்கு தொடர்பு: இந்த குண்டுவெடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதால், பயங்கரவாதிகளின் பங்கும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், வெடிபொருட்களை கொண்டு சென்ற நபரை, போலீசார் தங்கள் காவலில் எடுத்துள்ளனர். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். முழு விசாரணைக்கு பின்னே எது ஒன்றையும் குறிப்பிட்டு கூற இயலும் என்றார்.
நாடு முழுவதும்: இதனிடையே, புனேயில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சென்னை, டில்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டேல், நேற்று, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜ., கண்டனம்: புனேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், மத்திய அரசுக்கு ஒரு அபாய அறிவிப்பு, இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என, அக்கட்சி தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.