ஓசூர்: திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து, ஓசூர் வழியாக தினமும், 200 லாரிகளில் கர்நாடகாவுக்கு மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தல் மூலம் கோடி கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பதாலும், போலீசாருக்கு நிரந்தர கவனிப்பும் கிடைப்பதால் கண்டுகொள்வதில்லை.
கர்நாடக மாநிலத்தில் ஆறுகள், நதிகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரப் பகுதியில் மணல் வெட்டி எடுக்க, அம்மாநில பொதுப்பணித் துறை, போலீசார் நிரந்தர தடை விதித்து, மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஸ்தம்பிப்பு: இதனால், அம்மாநிலத்தில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூரு, ஆணைக்கல், சந்தாபுரம் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட அம்மாநில முக்கிய நகரங்களில் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத் தொழில், தற்போது, தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் மணலை முழுமையாக நம்பியுள்ளது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் ஒரு லாரி மணல், கர்நாடகாவில், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மணல் கடத்தல் மூலம் கொள்ளை லாபம் கிடைப்பதால், தமிழக, கர்நாடக எல்லையோர மணல் புரோக்கர்கள், ஓசூர், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், ஆம்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் மிக பெரிய நெட் வொர்க் அமைத்து, தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக கர்நாடகாவுக்கு, 24 மணி நேரமும் மணல் கடத்துகின்றனர். தினமும் ஓசூர் வழியாக, கர்நாடகாவுக்கு தமிழக எல்லையை கடந்து, 150 முதல், 200 லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. இவற்றை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை, போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், புரோக்கர்களின் கவனிப்பால் மணல் கடத்தலை தடுக்காமல் கடத்தலுக்கு துணை போகின்றனர்.
குவிப்பு: ஆம்பூர், கரூர், திருச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து கடத்தப்படும் மணல், ஓசூரில் விற்பனை செய்வதாக, பில் போட்டு, ஓசூர் அருகே டி.வி.எஸ்., கூட்டு ரோடு அருகே ஒரு இடத்திலும், குருபரப்பள்ளியில் ஒரு இடத்திலும், மணல் புரோக்கர்கள் குடோன் அமைத்து, ஆயிரக்கணக்கான டன் மணலை குவித்து வைக்கின்றனர். இந்த மணலை, காலை முதல் இரவு வரை கர்நாடகாவுக்கு லாரிகள் மூலம் கடத்துகின்றனர். எல்லையோர போலீசாரின், "கிரீன்' சிக்னல் கிடைத்ததும், மூன்று, நான்கு லாரிகள் சேர்ந்து, கர்நாடகாவுக்கு மொத்தமாக மணலை கடத்துகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் அனைத்து மணல் லாரிகளும், எல்லையை கடந்து கர்நாடகாவுக்கு செல்வது, சிப்காட் போலீஸ் அதிகாரி ஒருவர் கையில் தான் உள்ளது. அவர் ஒரு லாரிக்கு, 2,000 ரூபாய் வீதம் வசூல் செய்து விட்டு, மணல் லாரிகளை பாதுகாப்பாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணல் கடத்தல் மூலம் கோடிக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பதாலும், நிரந்தர "கவனிப்பும்' கிடைப்பதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு, ஓசூர் வழியாக மணல் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இயற்கை வளம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய அறிவு இருக்கும் நபரை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து அரசு ஊழியர் ஆக்கினால், அவர் நேர்மையான அதிகாரி ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அரசு ஊழியர் வேலைவாய்ப்பிலும் லஞ்சம். சே.. என்ன ஒரு கேவலமான நிலையில் உள்ள நாடு இது? தினமும் 20,000 லாரிகள் என்றால் எவ்வளவு மணல் நம் மாநிலத்தில் இருந்து போகிறது? என்னய்யா இது, அதிகாரிகள் சுயநலமிகளாகவே இருந்துவிட்டு போகட்டும், இருப்பினும் அவர்களுக்கு ஓரளவேனும் சூடு சொரனையே இல்லையா? இதனால் நமது மாநிலத்திற்கு எவ்வளவு இழப்பீடு என்று தெரியாதா? இயற்கை வளம் குன்றி நமது மாநிலம் எவ்வளவு மெலிந்து போகும், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடியாதவர்களா நமது அதிகாரிகள்? அரசு, இதனைபற்றி விழிப்புணர்வு தரும் குறும் படங்களையோ, வகுப்புகளையோ எடுக்க ஆவன செய்ய வேண்டும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டும். இது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கம் பயன் படும்படி இருக்கவேண்டும். ஆண்டாண்டுக்கு மழை பொய்த்து வரும் இந்த நிலையில் மரங்கள் மற்றும் ஆற்று மணல் மிகவும் அவசியம். கிடைக்கும் சிறிதளவு மழை நீரையும், சூரிய வெப்பத்தினால் ஆவியாகாமல் நிலத்தின் அடியில் நீரினை அதிக அளவிற்கு கொண்டு செல்ல உதவுவது ஆற்று மணல் தான். இதனைப்பற்றி பேச இன்னும் எவ்வளவோ இருக்கிறது. படித்த அனுபவமிக்க அதிகாரிகளுக்கு இவையெல்லாம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
ஒருமீட்டர் ஆழம் என்ற அளவில்தான் ஆற்றுமணல் அள்ளப்பட வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதி.ஆனால் அதிகார வர்க்கம் ஆற்றுமணலை மூன்று மீட்டர் ஆழம் வரை ,பொக்லின் இயந்திரம் மூலம் கொள்ளை அடிக்கிறது.இந்த முறைகேடு ஒருபக்கம் மக்களுக்கு தெரியாமல் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.ஆற்றுமணல் ஆட்சியாளர்களை பொறுத்த வரை அள்ள அள்ள குறையாத அமுத சுரபி.தமிழக கனிம வளத்தை ஆட்சியாளர்களே சுரண்டி கொள்ளையடிப்பது வேதனைக்குரியது.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டுகொள்ளையால் தமிழக ஆறுகள் அனைத்தும் மணலின்றி கட்டாந்தரையாக மாறிவருகிறது . இந்நிலையில் மணல்கொள்ளை தொடருமாயின் ,நிலத்தடி நீரும் வறண்டு போய், மனித உயிர்கள் வாழ தகுதியற்ற பாலைவனமாக, தமிழகம் எதிர்காலத்தில் மாறிவிடும் என்பது உறுதியிலும் உறுதி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.