IFS officer kept under compusary leave | பின்னணியில் மரக்கடத்தல்... பரபரக்கும் வனத்துறை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (3)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்த ஐ.எப்.எஸ்., அதிகாரி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அதே வேளையில், அத்துமீறலில் ஈடுபட்ட வன அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, களக்காடு முண்டந்துறை ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், ஆனைமலை புலிகள் காப்பகம், பரப்பில் பெரியது மட்டுமின்றி, அரிய வகை தாவரங்கள் மற்றும் வன உயிரினங்களை உள்ளடக்கிய மிக முக்கியமான காப்பகமாகும். மொத்தம் 958 சதுர கி.மீ., பரப்பிலுள்ள இந்த காப்பகத்தில், இரு வனக்கோட்டங்களும், ஆறு வனச்சரகங்களும் உள்ளன. இவற்றில், டாப்ஸ்லிப் பகுதியை உள்ளடக்கிய உலாந்தி வனச்சரகம், சுற்றுலா விடுதிகள், யானைகள் முகாம் மற்றும் தேக்கு மரங்களைக் கொண்ட, மிக முக்கியமான வனச்சரகமாகும்.
வெறும் 75 சதுர கி.மீ., பரப்பை மட்டுமே உடைய இந்த வனச்சரகத்தில், ஆங்கிலேயர் காலத்திலேயே வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள், வானுயர்ந்து நிற்கின்றன. கிட்டத்தட்ட ஆறாயிரம் ஹெக்டேர் பரப்பில், பல்லாயிரக்கணக்கான தேக்கு மரங்கள் இங்கே உள்ளன. புலிகள் காப்பகத்தில் நடக்கும் அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சுற்றுலாவுக்கு அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் பரபரப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால், டாப்ஸ்லிப் வனப்பகுதி, கடந்த சில நாட்களாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால், இதே உலாந்தி வனச்சரகத்தில் வனத்துறை அலுவலர்களால் நடத்தப்பட்டுள்ள பல்வேறு அத்துமீறல்கள் குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படாதது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறமிருக்க, இந்த விவகாரத்தை திசை திருப்பப்படுவதாக புகார் கிளம்பியுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் உதவி வனப்பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ராகுல் என்ற இளம் ஐ.எப்.எஸ்., அதிகாரி, காப்பகப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான தேக்கு மரங்கள் கடத்தப்பட்டதை நேரடியாக ஆய்வு செய்து கண்டு பிடித்தார். வனப்பகுதியில் அனுமதியின்றி கற்கள் எடுக்கப்பட்டதையும் கண்டறிந்தார். அவரது ஆய்வில், 1,400க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள், அங்கிருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது. இதே வனச்சரகத்தில், இரண்டு தடுப்பணைகள் (செக்டேம்) கட்டியதிலும் வன விதிகள் மீறப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மொத்தம் 35 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த தடுப்பணைகள் மற்றும் 7 கி.மீ., சாலை அமைக்க, சேத்துமடை சோதனைச்சாவடி வழியாக 75 சிமென்ட் மூட்டைகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மணல், கற்கள் எதுவுமே கொண்டு சென்றதாக, வனச்சோதனைச் சாவடி ஆவணங்களில் பதிவுகள் இல்லை. இதனால், மணல் மற்றும் கற்கள், வனப்பகுதியிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. வனப்பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து மணலும், பாறைகள் மிகுந்த பகுதியிலிருந்து பாறைகளும் எவ்வித அனுமதியுமின்றி எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சில இடங்களில் மிகச்சமீபமாய் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதையும், உதவி வனப்பாதுகாவலர் தனது ஆய்வின் போது கண்டறிந்துள்ளார். வனப்பாதுகாப்பு சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் அப்பட்டமாக மீறி நடந்த இந்த அத்துமீறல்கள் குறித்து, கடந்த ஜூனில் அவர் அறிக்கை கொடுத்துள்ளார். இதற்கு ஆதாரமாக, பல போட்டோக்களையும் கொடுத்துள்ளார். அப்போதைய கள இயக்குனர் (பொறுப்பு) மனோஜ் குமார் சர்க்கார், இந்த அறிக்கையுடன் தனது கருத்தையும் சேர்த்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அறிக்கை அனுப்பினார்.

ஜூன் 20, ஜூலை 10 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் மூன்று அறிக்கைகள் அனுப்பப்பட்டன. இதற்கிடையில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளரான ராகேஷ் வசிஸ்ட், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஜூன் 16 அன்று ஆய்வு செய்து திரும்பினார். அவர் எதற்காக ஆய்வுக்கு வந்தார் என்பது பற்றி எந்தத் தகவலும் தரப்படவில்லை. ஆனால், அவர் வந்து சென்று பல நாட்களாகியும், மரக்கடத்தலுக்குக் காரணமான வன அலுவலர்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை; நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த உதவி வனப்பாதுகாவலர் மீது பகீர் புகார்கள் கிளம்பியுள்ளன. ஆழியாறு வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் சந்திரன் என்பவரை அவர் கன்னத்தில் அறைந்ததாக போலீசில் புகார் தரப்பட்டது. அவர் மீது நடவடிக்கை கோரி, தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் போர்க்கொடி தூக்கியது. வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சங்கமும் களத்தில் குதித்தது. ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கள இயக்குனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. ராகுலின் வாகனம் முற்றுகையிடப்பட்டது. துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென கள இயக்குனர் உறுதி அளித்ததால் போராட்டம் கை விடப்பட்டது. ராகுலை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, ஓர் அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தியது. இதன் எதிரொலியாக, சம்மந்தப்பட்ட உதவி வனப்பாதுகாவலர், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அநேகமாக, அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று வனத்துறை வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. இந்த நடவடிக்கை, ஐ.எப்.எஸ்., வட்டாரங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மரக்கடத்தல் மற்றும்

அனுமதியற்ற கல்குவாரி என பலவிதமான அத்து மீறல்களை அரங்கேற்றிய வன அலுவலர்களைக் காப்பாற்றவே, இந்த பிரச்னை திசை திருப்பப்பட்டுள்ளதாக ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். ஐ.எப்.எஸ்., அதிகாரி மீது கூறப்படும் புகார்களில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், அவரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு தரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மரக்கடத்தல், கல்குவாரி பற்றி அவர் தந்த ஆதாரப்பூர்வமான அறிக்கை மீது, வனத்துறை மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்குக் காரணம். யானை முகாமுக்கு எரிபொருளுக்காகவும், வன கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டவுமே, கீழே விழுந்திருந்த தேக்கு மரங்கள் எடுக்கப்பட்டதாக சம்மந்தப்பட்ட வன அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், பல இடங்களில் தேக்கு மரங்கள், அடியோடு வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஓராண்டுக்கு முன்பு, இந்த மரங்களும், சில மாதங்களுக்கு முன்பு, கற்களும் வெட்டி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இங்கு பணியிலிருந்த கள இயக்குனர், மாவட்ட வன அலுவலர், வனச்சரகர் உள்ளிட்ட அனைவரும் இதுதொடர்பாக விசாரிக்கப் பட வேண்டியது அவசியம். யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது வனத்துறை மேலிடத்தின் பொறுப்பாகும். ஐ.எப்.எஸ்., அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, கீழ்மட்ட வனத்துறையினரைப் பாதுகாக்க உதவுவதாக இருக்கலாம்; தவறான அலுவலர்களை அது காப்பாற்றி விடக்கூடாது என்பதே சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இரு அதிகாரிகள்; ஒரே பதில்! மரக்கடத்தல் விவகாரம் வெளியில் வந்தபோது, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனராக பொறுப்பு வகித்த மனோஜ் குமார் சர்க்காரிடம் இதுபற்றி கேட்டபோது, ""நான் பொறுப்பிலிருந்தபோது,

Advertisement

எனக்கு வந்த தகவல்களை மேலிடத்துக்கு அறிக்கையாக அனுப்பி விட்டேன்; அதுபற்றி இப்போது எதுவும் கருத்துத் தெரிவிக்க முடியாது,'' என்றார். தற்போதுள்ள கள இயக்குனர் ராஜிவ் ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்டபோது, ""நான் இப்போதுதான் பொறுப்பு ஏற்றுள்ளேன். நான் வருவதற்கு முன்பே அது தொடர்பான அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. விசாரணை நடப்பதால், அதுபற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கையில் இருந்து தப்பவே முடியாது என்பது மட்டும் உறுதி,'' என்றார். மேலும் அவர் கூறுகையில், ""யானைகள் முகாமில், காஸ் அடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், விறகுகள் இனி தேவைப்படாது. காப்பகப் பகுதியில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். உதவி வனப்பாதுகாவலர் ராகுலிடம் கேட்டபோது, அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார்.
நேர்மைக்கு பரிசா? பெயர் கூற விரும்பாத ஐ.எப்.எஸ்., அதிகாரி கூறுகையில், ""யானைகள் முகாமுக்கு விறகுக்காக எடுக்கப்பட்டிருந்தாலுமே, அதற்கும், கல்குவாரியிலிருந்து கற்கள் எடுத்ததற்கும் யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? இதுபற்றி ஆதாரப்பூர்வமாக அறிக்கை கொடுத்த பின்னும், இதுவரை சம்மந்தப்பட்ட வன அலுவலர் மாற்றப்படவில்லை; அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கண்டு பிடித்த ஐ.எப்.எஸ்., அதிகாரியை கட்டாய விடுப்பில் அனுப்புகிறார்கள். இப்படிச் செய்தால், நாளை எந்த அதிகாரிதான் நேர்மையாக பணி செய்ய முடியும்?,'' என்றார்.
திசை திருப்பும் முயற்சியில்லை! தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநிலத் தலைவர் நஸீர் கூறியதாவது: காட்டுக்குள் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை விறகுக்காக பழங்குடியினர் எடுத்துச் செல்வது, காலம் காலமாக நடக்கிறது. அதைத்தான் இவர் மரக்கடத்தல் என்கிறார். பிரச்னையை திசை திருப்ப, போராட்டம் நடத்தியதாகக் கூறுவது அப்பட்டமான பொய். துறைரீதியாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களுக்கு தண்டனை தரட்டும். அதற்கும், வன அலுவலரைத் தாக்கியதற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஐ.எப்.எஸ்., அதிகாரி ராகுல், வனக்காப்பாளரைத் தாக்கியது மறுக்க முடியாத உண்மை. சம்பள பற்றாக்குறை, வேலைப்பளு, பாதுகாப்பின்மை என வேட்டை தடுப்புக் காவலர்கள் அனைவரும் கடும் விரக்தியில் உள்ளனர். அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், குற்றவாளிகளைப் போல நடத்தியுள்ளார் இந்த அதிகாரி. இப்போதே இப்படி என்றால், எதிர்காலத்தில் இவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை நினைக்கவே அச்சமாகவுள்ளது. இவ்வாறு நஸீர் தெரிவித்தார்.
"அவர்களென்ன அக்யூஸ்ட்டா?' ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் கீழ்மட்ட வன அலுவலர் ஒருவர் கூறுகையில்,"இங்கு எத்தனையோ ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். யார் மீதும் இவர் மீது கூறியதைப் போல புகார்கள் இல்லை. இந்த அதிகாரி, அப்படி நடந்து கொண்டார் என்பதே உண்மை,'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ""வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு போதிய யூனிபார்ம் இல்லாததால், இரவில் அவர்கள் சாதாரண உடையில்தான் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களைப் பிடித்து "அக்யூஸ்ட்' போல உட்கார வைத்து படமெடுத்தார் இவர். புலிகள் காப்பகத்துக்குள் தனது கேரள நண்பர் ஒருவரை அனுமதியின்றி அழைத்து வந்து, அவரது முன்னிலையில், கீழ் நிலை வன அலுவலர்களை "கள்ளமார்' என்று கேவலமாகப் பேசியுள்ளார். இதுபோல, எந்த அதிகாரியும் இதற்கு முன்பாக நடந்து கொண்டதில்லை,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Govindarajur Rajarethinam - Tiruchirappalli,இந்தியா
06-ஆக-201220:18:56 IST Report Abuse
Govindarajur Rajarethinam கனிம வளம் கொள்ளை, மணல் கொள்ளை, பள்ளி மாணவர்களின் scholarship தொகையில் ஊழல் இது போதாது என்று தற்பொழுது வனத்துறை ஊழல் இவற்றிற்கு காரணம் என்ன? தமிழ் நாடு எங்கே செல்கிறது?
Rate this:
Share this comment
Cancel
Good Man - Doha,கத்தார்
06-ஆக-201200:32:02 IST Report Abuse
Good Man மரகடத்தலுக்கும் துறை மந்திரிக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகப் பட வைக்கிறது....போன ஆட்சியில் இருந்த மந்திரிகளின் நிலைமை இப்போ எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... தவறு செய்யும் மந்திரிகளே உங்களை திருத்தி கொள்ளுங்கள் அல்லது தமிழக மக்களால் திருத்தப்படுவீர்கள்..
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஆக-201203:24:40 IST Report Abuse
மதுரை விருமாண்டிதப்பு கண்டு பிடிச்சா உங்களையும் மம்மி இடமாற்றம் செஞ்சிருவாங்க.. இருக்கிறது இன்னமும் நாலு வருசத்துக்கும் கம்மி.. தாத்தா அடிச்ச அளவு கொள்ளை அடிச்சு அவரை பீட் பண்ண வேண்டாமா ??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.