விருதுநகர்: விருதுநகரில் 10 லட்ச ரூபாய் கள்ளநோட்டு அடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மரகத கற்களை காட்டி ரூ. 2 லட்சம் ஏமாற்றியவர் களுக்காக கள்ளநோட்டு தயாரித்ததாக கைதான பாலன் தெரிவித்துள்ளார். விருதுநகர் ஏழு கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் நெய்விளக்கு வியாபாரி பாலன், 47.
கட்டையாபுரம்பகுதியை சேர்ந்த வீடியோகிராபர் கார்த்திகேயன், 35. ராமர் தெருவை சேர்ந்த அனு பிரிண்டர்ஸ்
உரிமையாளர் ராமர், 39. இவர்கள் மூவரும் இன்டெர்நெட்டில் இந்திய ரூபாய் நோட்டை "டவுன் லோடு' செய்தனர்.
இதனை பாலன் வீட்டில் வைத்து கம்யூட்டரில் கார்த்திகேயன் ஸ்கேன் செய்து, ரூ. ஆயிரம் மதிப்புடைய தாள்கள் ரூ. 10 லட்சத்தை கள்ளநோட்டாக தயாரித்தனர். "ஏ 4 சீட்' மூலம் தயாரிக்கப்பட்ட இந்த கள்ள நோட்டை, பாலன் தனது நண்பர் அனு பிரிண்டர்ஸ் உரிமையாளர், ராமர் மூலம் கட் பண்ணி வாங்கியுள்ளார். இது குறித்து பஜார் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து பாலனை,போலீசார் கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு "சைன்' டூவீலரில் வந்த பாலன், கார்த்திகேயனை நிறுத்தி போலீசார் வாகனை சோதனை செய்தனர். அப்போது ரூ. ஆயிரம் மதிப்புடைய கள்ள
நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாலன், உடனிருந்த கார்த்ததிகேயனை போலீசார் கைது செய்து பஜார் ஸ்டேஷனில் விசாரித்தனர். அதில் கள்ளநோட்டை சீர்படுத்தி கொடுக்க உதவியாக இருந்த ராமர் என்பவரையும் சேர்த்து கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கம்யூட்டர், பிரிண்டர், கட்டிங் மிஷின் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
எஸ்.பி.,நஜ்மல் கோதா கூறுகையில், "கள்ளநோட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்ததால் உடனே மூவரை கைது செய்தனர். இவர்கள்"சீட்டிங்' செய்ய முயற்சித்துள்ளனர், மேலும் விசாரித்து வருகிறோம்' என்றார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாலன் திண்டுக்கல்- நத்தம் ரோட்டிலுள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலுக்கு மனைவி உமாவுடன் சாமி கும்பிட சென்றார். அப்போது இதே ஊரை சேர்ந்த மாணிக்கம், மூக்கையன் இருவரும் நாக மரகதகற்களை காட்டி பாலனை, ரூ. 2 லட்சம் ஏமாற்றியுள்ளனர். தற்போது அதே நபர்கள் மீண்டும் கற்கள் விற்பது குறித்து பாலனை தொடர்பு கொண்டுள்ளனர். தன்னை மீண்டும் ஏமாற்ற நினைக்கும் இவர்களை பழி வாங்க கள்ள நோட்டுக்களை அடித்ததாக தெரிவித்துள்ளார்.' என்றார்.