சேலம்: சேலத்தில், ஆடிப் பண்டிகையையொட்டி, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், போஸ்டர்களில், முதல்வர் படத்துடன், கட்சியில் உள்ள நிர்வாகிகளின் படத்தையும் போட்டு, முதல்வர் உத்தரவை மீறி உள்ளனர்.
தமிழக அமைச்சர்கள், மாவட்டந்தோறும் ஆய்வுக்கு செல்லும்போது, அங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தங்களின் போட்டோ இடம் பெறவில்லை, பெயர் இடம் பெறவில்லை என, கூறி அமைச்சர்களிடத்தில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் கடுமையான உத்தரவை வழங்கினார். அதில், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில், என்னுடைய படத்தை தவிர, அமைச்சர், எம்.எல்.ஏ., நிர்வாகிகள் போட்டோக்களை போடக்கூடாது; வேண்டுமென்றால் பெயர்களை மட்டும் வெளியிட்டுக் கொள்ளலாம் என, கூறியிருந்தார். சேலம் மாவட்டத்தில், முதல்வரின் உத்தரவை யாரும் மதிக்கவில்லை. பெரும்பாலான விளம்பர பேனர்களில், பெயர் இடம் பெற முடியாத அளவில், போட்டோக்கள் நிரம்பியுள்ளன. சேலத்தில், தற்போது ஆடிப்பெருவிழா நடந்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர், போஸ்டர்களில், முதல்வர் படத்தை காட்டிலும், அமைச்சர், எம்.எல்.ஏ., மாநகராட்சி கவுன்சிலர்களின் போட்டோக்கள் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. முதல்வர் உத்தரவையும் அ.தி.மு.க.,வினர் யாரும் மதிப்பதில்லை, என எதிர்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.