காஞ்சிபுரம்: தனியார் பொறியியல் கல்லூரியில், உள் விளையாட்டரங்கு சுவர் சரிந்து விழுந்து, 10 பேர் இறந்த வழக்கில், கல்லூரி இயக்குனர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். விபத்துக்கு உள்ளான கட்டடம், எந்த அனுமதியுமின்றி, விதிமீறி கட்டப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, காவல் துறை வெளியிட்ட அறிக்கை:குன்னம் கிராமத்தில் அமைந்துள்ள, "ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பொறியியல் கல்லூரியில், கடந்த 6ம் தேதி, பல்நோக்கு விளையாட்டு உள்ளரங்கு இடிந்து விழுந்ததில், பணியில் இருந்த வெளி மாநில தொழிலாளர்கள், 10 பேர் இறந்தனர். காயமடைந்த இருவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இறந்தவர்களில், ஐந்து பேர் உடல், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. மற்றவர்களின் உடல்களையும், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.விதிமீறல்இந்த சம்பவம் குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பந்தப்பட்ட கல்லூரியை, ஜேப்பியார், அவரின் மருமகன் மரிய வில்சன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். கல்லூரியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், பல்நோக்கு உள் விளையாட்டரங்கு கட்டும் பணி, கடந்த மே மாதம் துவக்கப் பட்டது.இதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து, அனுமதி பெறவில்லை. உள் விளையாட்டரங்கு கட்டுவது குறித்து, உரிய முறையில் தேர்ச்சி பெற்ற, கட்டட அமைப்பு பொறியாளரிடம் வரைபடம் எதுவும் பெறப்படவில்லை.தங்கள் கல்லூரியில் படித்த, முன் அனுபவம் இல்லாத, சில பொறியாளர்களை பணியில் அமர்த்தி, வட மாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழகம் வந்துள்ள, கட்டுமானப் பணியில் அனுபவம் இல்லாதவர்களையும், இடைத்தரகர்கள் மூலம் பணிக்கு அமர்த்தி உள்ளனர். மேலும் ஸ்திரத் தன்மைக்கு, குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதும், ஸ்திரத் தன்மைக்கு தேவையான கால அவகாசம் கொடுக்காமல், தொடர்ந்து கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முயன்றதாலும், இந்த சம்பவம் நடந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்தது.கைது இடைத்தரகர்கள் மூலம், குறைந்த கூலிக்கு, வட மாநிலத்தவர்களைப் பணிக்கு அமர்த்தியதும், பணியாளர்களின் தினக் கூலியிலிருந்து கணிசமான தொகை பெறப்படுவதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு காரணமான, கல்லூரி இயக்குனர் மரிய வில்சன்,34, நாகர்கோவிலைச் சேர்ந்த பொறியாளர்கள், அருள் ஜெய அப்ரோஸ்,28, ராஜ்குமார்,28, குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன்,32, ஆகியோர், கைது செய்யப் பட்டு உள்ளனர்.இவ்வாறு, போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.