பாசனத்திற்கு நீர் இல்லாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதி கேட்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பு தகவல்கள் சேகரிக்கும் பணியில், வேளாண் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் உள்ளிட்ட, 11 டெல்டா மாவட்டங்களில், 16 லட்சம் ஏக்கர் நிலம், பாசனத்திற்காக, காவிரியை நம்பியுள்ளன. ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த, 78 ஆண்டுகளில், இதுவரை, 15 ஆண்டுகள் மட்டுமே, ஜூன், 12ல், மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காவிரியில் உபரி நீர் வந்தால் தான், மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. கடந்தாண்டு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ஜூன் 6ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால், இம்மாவட்டங்களில், 12.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது, கடந்த, 2010 - 2011ம் ஆண்டு சாகுபடி பரப்பைவிட, 1.7 லட்சம் ஏக்கர் கூடுதலாக அமைந்தது.
மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்ட காலங்களில் எல்லாம், டெல்டா மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதால், விவசாயிகள், பெரும் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்தாண்டு கர்நாடகாவில், தென்மேற்குப் பருவமழை, கடந்த இரு மாதங்களில், எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு, தண்ணீர் வரவில்லை. கோடை தாக்கத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், இந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் கூட, சராசரியாக, 9 லட்சம் ஏக்கர் வரை, விவசாயம் செய்யப்படும். ஆனால், கிணற்று நீர் பாசனம், ஆழ்துளை குழாய் பாசனம் மூலம், ஒரு லட்சம் ஏக்கருக்கு குறைவாகவே, இந்தாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றிற்கு, 12 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக தொடர்ச்சியாக மின் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது. இதனால், பாசனம் செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதித்தது குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வறட்சியிலும், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை, உடனுக்குடன் செய்யுமாறு, வேளாண் துறையினருக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு, கடன் நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். டெல்டா விவசாயிகளுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், அவர் கணித்துள்ளார். இதே போல, டெல்டா விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என, மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு விவசாய சங்கங்களும், இந்த பிரச்னையை மையப்படுத்தி, களத்தில் இறங்க ஆலோசித்து வருகின்றன. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி விவரங்களைப் பட்டியலிடும் பணி துவங்கியுள்ளது. விவசாயம் பாதித்த நிலங்களின் விவரங்களை, வேளாண் துறையினரும், வருவாய் பாதித்த விவரங்களை, வருவாய் துறையினரும், சேகரித்து வருகின்றனர். இப்பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு வறட்சி நிதி கோரலாம் எனக் கூறப்படுகிறது.
கருணாநிதி ஒத்துழைப்பாரா? வறட்சியால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால், 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம், மாநில அரசு வறட்சி நிவாரண நிதி கேட்கும்போது, மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற முறையில், அந்த நிதியை பெற்றுத் தர, தி.மு.க., தலைவர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தானே புயல் பாதிப்பிற்கு போதுமான நிதி பெற்று தருவதில், கருணாநிதி அதிக முனைப்பு காட்டாத நிலையில், இதற்காகவாவது, தமிழக அரசு கேட்கும் நிதியை பெற்றுத் தர, கருணாநிதி ஒத்துழைப்பாரா என்ற கேள்வி, டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசிடம் எதுக்கு கேட்கணும்? அதைவிட, அதிக சொத்து கலைங்கரிடமே இருக்கு. அதை கேட்டால் தர மாட்டாரா? இப்பதான் இலங்கை தமிழருக்கு கொஞ்சூண்டு கில்லி கொடுத்துள்ளார். நாம் கேட்டால், நமக்காக அள்ளி கொடுக்க மாட்டாரா? நமக்காக மரியா, புகழ், கட்டிங் மாஸ்டர், குஞ்சுமணி இவர்கள் கேட்டு வாங்கி தருவார்கள் என்று நம்புவோம்.
செய்தியின் தலைப்பே தவறு.....ஏதோ ஜெயலலிதா கலைஞரின் ஆதரவை கேட்பது போலவும்..கலைஞர் அதற்கு ஒத்துழப்பாரா என்பது போலவும் உள்ளது....எதிர்கட்சிகளுடன் ஜெயா ஒத்துழைப்பாரா என்று தலைப்பு இருந்திருக்க வேண்டும்...இந்த பிரச்சனைக்காக ஜெயா எதிர்கட்சிகளின் கூட்டத்தை ஏன் கூட்டி..அவர்களின் கருத்துக்களை கேட்டு..அவர்களையும் டில்லி அழைத்து சென்று மத்திய அரசுடன் பேசி நிதியை பெற கூடாது?
அல்லிராணியாச்சே.. எல்லாரும் தனது காலடியில் விழுவதற்கு மட்டுமே வர வேண்டும் என்பவர், எப்படி அடுத்தவர்களிடம் ஆதரவும், அதற்கு கீழே ஒருபடி இறங்கி அவர்களிடம் கருத்தும் கேட்பார்... பாலபாடம் நடத்துவாங்களே... ஐயோ, இதைக் கேட்டாலே மம்மியின் உடம்பு முழுவதும் கூசிக் கொண்டு "யக்க்" என்று மம்மிக்கு வாந்தி வருவது போல் இருக்குமே......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.