டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல் வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த, 43 தேர்வு மையங்களிலும் தீவிரமாகக் கண்காணிக்க, பறக்கும் படையினருக்கு, டி.ஆர்.ஓ., ராமர் உத்தரவிட்டார். அரூரை அடுத்த கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேர்தல் தனி தாசில்தார் கமலநாதன், துணை தாசில்தார் கருப்புச்சாமி ஆகியோர், தேர்வு அறைகளை கண்காணித்தனர்.அப்போது, வாலிபர் ஒருவர், கூடுதல் விடைத்தாள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை ஒப்பிட்டு பார்த்ததில், குரூப்-2 தேர்வுக்கான விடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். முறைகேடு குறித்து, டி.ஆர்.ஓ., ராமருக்கு, அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
விலை என்ன?எஸ்.பி., அமீத்குமார் சிங் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர், அரூர் அடுத்த முத்தானூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார், 35, என்பது தெரிய வந்தது. இவர், வினாத்தாளை, திருவண்ணாமலை மாவட்டம், தானிபாடியில் உள்ள தன் தங்கை வீட்டின் அருகே இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தனிடம், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெற்றதாகக் கூறினார்.போலீசார், தானிபாடியில் உள்ள ஆசிரியர் விவேகானந்தனிடம் விசாரித்த போது, வினா மற்றும் விடைத்தாள்களை, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கராஜ், குமார் ஆகியோரிடம் வாங்கியது தெரிய வந்தது. போலீசார், விவேகானந்தன், ரங்கராஜ், குமார் ஆகியோரை, கம்பைநல்லூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது, முத்தானூரைச் சேர்ந்த அருண், அரூரைச் சேர்ந்த பூபேஸ், மற்றொருக்கு நபருக்கும் விற்பனை செய்ததாக, அவர்கள் கூறினர். போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சுரேஷ்குமார், விவேகானந்தன், ரங்கராஜ் ஆகிய மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் ஆசிரியர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில், கையால் எழுதப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் அடங்கிய 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் கிடந்ததாக, ராஜாகண்ணு என்பவர் கண்டெடுத்து கலெக்டரிடம் ஒப்படைத்தார். தனிப்படை போலீசார், திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ரங்கராஜ், 40, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இவர், தேர்வு வினாத்தாளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பணம் கொடுத்து வாங்கி வந்து, ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குரூப்-2 கேள்வித்தாள் "லீக்'ஆனது எங்கே? குரூப்-2 கேள்வித்தாள் கட்டுகள், அச்சடிக்கப்பட்ட இடத்தில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வழியில் திருடப்பட்டிருக்கலாம் என, தேர்வாணைய வட்டாரங்கள் கருதுகின்றன.
பள்ளி பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள்களாக இருந்தாலும் சரி, டி.ஆர்.பி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களாக இருந்தாலும் சரி, எதுவுமே தமிழகத்தில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கப்படுவதில்லை. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தான், கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.அதன்படி, குரூப்-2 கேள்வித்தாளும், பக்கத்து மாநிலம் ஒன்றில் தான் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கும், அச்சகங்களை மாற்றுவது கிடையாது. குறிப்பிட்ட அச்சகங்களில் தான், கேள்வித்தாள் அச்சடிக்கப்படும். அச்சடித்து முடிக்கப்படும் கேள்வித்தாள்கள், பார்சல் செய்யப்பட்டு, சீலிடப்படும்.
பின், அங்கிருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கோ அல்லது துறை தலைமை அலுவலகத்திற்கோ கொண்டு வரப்படுகிறது. இப்படி, அச்சகங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வழியில், வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, தேர்வாணையம் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை. எனவே, தமிழகத்திற்கு வரும் வழியில், கேள்வித்தாள் திருடப்பட்டிருக்கலாம் என, தேர்வாணையம் சந்தேகிக்கிறது.
ஈரோட்டில் சிக்கிய தனக்கொடி, தன் கணவர் செந்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் இருந்து, கேள்வி-பதில் அடங்கிய தாளை வாங்கி வந்ததாக தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகியான ராசியப்பன், ஒரு காலத்தில் தேர்வாணையத்தில் வேலை பார்த்துள்ளார். எனவே, கேள்வித்தாள் எங்கு அச்சிடப்படுகிறது, எந்த வழியாக வருகிறது என்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாக இருக்கும்.
மேலும், அவருக்கு தேர்வாணையத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், கேள்வித்தாள், "லீக்' ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் முழு விசாரணை நடத்த உள்ளது. விரைவில் நியமிக்கப்பட உள்ள ஐந்து பேர் கொண்ட குழு, கேள்வித்தாள் தயாரிப்பில் துவங்கி, அச்சடித்து, தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்தது வரை, ஒவ்வொரு இடத்திலும் என்ன நடந்தது என்பதை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய உள்ளது. அப்போது முழு விவரமும் தெரியவரும்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஊழலை தடுக்க , நம் நாட்டில் எத்தனை அவதாரம் எடுத்தாலும் முடியாது ?ஒருவர் சுய நலத்திற்காக ஒரு லட்சம் பேர் பதிக்கப்பட்டு விட்டார்கள் . இப்படி போன்ற உழல் பெருச்சாளிகள் இவ்வுலகில் இருப்பதை விட இறப்பதே மேல். அவன் செய்யும் தவறு அவனையும் அவன் குடும்பத்தையும் என்றும் அவமான பார்வையுடன் இவ்வுலகம் பார்க்கும். இது உலக நீதி . இப்படிக்கு தமிழன் பாண்டியராஜன் ,சவுதி அரேபியா .
இதற்கெல்லாம் ஒரே வழி, தேர்வு முறைகளை கணிப்பொறி மயமாக்குவது மட்டுமே. அதாவது, தேர்வெழுத விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளக் குறியீடு (User-id & Password) தந்துவிட்டு எத்தனை மணிக்குத் தேர்வு தொடங்குகிறதோ அதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக சிஸ்டத்தை அரசாங்கமே திறந்து விடலாம். தேர்வு எழுதுவோர் எங்குவேண்டுமானாலும் இருந்து கொண்டு தேர்வெழுதலாம். மேலும், மனிதத் தவறுகள் மிகப் பெருமளவு தவிர்க்கப்படும். தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அச்சடிக்கும் செலவுகள், கண்காணிப்பாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய ஊதியம், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவும் முற்றிலுமாக மிச்சமாகும்.
கேள்வித்தாள் அவுட் ஆன அடுத்த நிமிடத்திலேயே விடை கண்டுபிடிப்பது கடினம்.தேர்வாணையத்தில் வேலைப்பார்ப்பவர்களால் தான் எளிதில் விடை எடுக்க முடியும்.எனவே இந்த கேள்வித்தாள் வெளியானதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்
உள்ளேயே இருக்கும் கருப்பு ஆடுகளை முதலில் வெளியேற்றுங்கள் அடுத்து தேர்வு நடத்தலாம்
இப்போ விஷயம் வெளியே வந்து விட்டது அதனால் தடை செய்கிறார்கள் இதே அவர்கள் மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்து இருந்தால் ?
ஏற்கனவே இந்த தேர்வாணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை காசு கொடுத்தால் வேலை நிச்சயம் என்று தான் எண்ணுகிறார்கள்
அரசியல் வாதிகளையே குறை சொல்லும் நம் சமூகமே ஊழலில் மூழ்கி திளைக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆசிரியர்கள், ஒரு காலத்தில் தேர்வாணையத்தில் வேலை செய்தவர்கள் என்று தெரிய வரும்போது அரசியல் வாதிகளை மட்டும் சொல்லி பயன் இல்லை. ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு செயல்படுவது, கள்ள காதலால் கொலை செய்வது என்று நம் மக்களும் தவறு செய்ய பயப்படுவது இல்லை. கோர்ட் போனால் வருடக்கணக்கில் தீர்வு கிடைப்பது இல்லை. இதனால் பயமே இல்லாமல் போய் விட்டது. எப்படியும் பெயிலில் வந்து விடுவோம் என்ற நம்பிக்கை. இல்லை என்றால் வழக்கை இழுகடித்து தப்பித்து கொள்ளலாம் என்ற தைரியம். இந்த சூழ்நிலைக்கு நீதி துறையும் ஒரு காரணம். உடனுக்குடன் தீர்ப்பு வந்தால் மக்கள் மனதில் பயம் இருக்கும். திரு நட ராஜ் போல் ஒரு நல்ல ஒய்வு பெற்ற அதிகாரி வராமல் இருந்தால் விசயம் அமுங்கி இருக்கும். இவ்வளவு நாள் தேங்கி இருந்த சாக்கடை உடைந்து வெளி வருகிறது. இது நல்ல அறிகுறி... இதுவரை உடனுக்குடன் உண்மை நிலையை வெளியிட்ட தினமலருக்கு நன்றி. இந்த தேர்வு எழுதுபவர்கள் லட்சகணக்கில் இருக்கும். லட்சகணக்கான மக்கள் நலனை கருதி தினமலர் தொடர்ந்து நடு நிலையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும். தேர்வாணையத்தில் உள்ள பிரசினைகளை சரி செய்ய நினைக்கும் திரு நட ராஜுக்கு ஆதரவு கொடுங்கள். நல்ல மனிதரின் முயற்சிக்கு தோள் கொடுப்போம்.
இந்த தேர்வுகளை ரத்து செய்து எம்ப்ளாய்மெண்டில் பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் அவரவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு காலி பணியிடங்களை நிரப்பலாம். மேலும் துறை தேர்வு வைத்து அவரவர்கள் திறமைக்கேற்றவாறு பணி வழங்கலாம். மேலும் பொது பிரிவினருக்கு வயது ஒரு தடையாக உள்ளது. திறமை இருந்தும் பணி செய்ய இயலாமல் உள்ளது. இதற்கு என்று தான் தீர்வு ?...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.