கொட்டிவாக்கம்: வீட்டின் பின் பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த நபரின் குரல்வளையை அறுத்து படுகொலை செய்தனர். கொலையை திசை திருப்பும் நோக்கத்தில் பீரோவில் இருந்த 30 சவரன் நகைகளை அப்படியே வைத்துவிட்டு 12 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாயை மட்டும் கொள்ளையடித்துள்ளனர். கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொட்டிவாக்கம், இளங்கோநகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம், 52. கார் டிரைவர். இவரது மனைவி ராணி. இவர்களின் மூத்த மகன் கோபி. பெரும்பாக்கத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் தியாகராஜன். மெரைன் இன்ஜினியர். இவர் தென்னாப்ரிக்காவில் வேலை செய்கிறார்.கடந்த மாதம் திருமணம் நடந்தது. மனைவியுடன் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுவிட்டார்.கொட்டிவாக்கம் வீட்டில் மனைவியுடன் விநாயகம் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பினார். பின், சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு படுக்க சென்றார். வீட்டின் முன்பக்க அறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ராணி படுத்துக் கொள்வார். ராணியின் குறட்டை சப்தம் காரணமாக விநாயகம் இரண்டாவது அறையில் படுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு விநாயகம் வழக்கம் போல படுக்க சென்றார். நேற்று காலை 4.45 மணிக்கு ராணி எழுந்து அறைக்கு வந்தார். அறை முழுவதும் காஸ் வாசம் வீசியது. சமையல் அறை சென்று பார்த்தபோது, சிலிண்டர் திறந்து கிடந்தது. அதை மூடினார். அப்போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. சந்தேகமடைந்த ராணி கணவர் படுத்திருந்த அறையை திறந்து பார்த்தார். அங்கு விநாயகம் ரத்த வெள்ளத்தில் பிணமாககிடந்தார். அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக மகன் கோபிக்கு அலைபேசியில் விவரத்தை கூறினார். அவர் விரைந்து வந்து பார்த்து போலீசாருக்கு தெரிவித்தார்.
அடையாறு, துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்த்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் பின் பக்கமாக வந்து கதவை கத்தியால் கிழித்து தாழ்பாளை திறந்துள்ளனர். பின், விநாயகம் அறைக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். திடீரென விழித்துக் கொண்ட விநாயகம் கொள்ளையர்களுடன் போராடியுள்ளார். அதன் பின், அவரின் குரல்வளையை அறுத்து கொலை செய்துள்ளனர். அவர் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகள், பீரோவில் இருந்த எட்டு சவரன் மதிப்புள்ள தங்க ஆரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். பின், தடயவியல் நிபுணர்கள் விரல்ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் பின்புறம் வழியாக கெனால் ஓரம் ஓடி நின்றது.
குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராணி இட்லி மாவு வியாபாரமும், வட்டி தொழிலும் பார்த்துவந்துள்ளார். மாவு வாங்க ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அவர்களில் யாராவது இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும்; விநாயகத்தின் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவர் மூன்று ஆண்டுகள் வாடகை தராமல் இருந்துள்ளார். அதனால், அவருடன் ராணி தகராறு செய்துள்ளார். மேலும், அவர் வசித்த வீட்டுக்கு பூட்டு போட்டுள்ளார். இதன் காரணமாக கொலை நடந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த கொலை நடக்கவில்லை என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. கொள்ளையடிக்க வந்தவர்கள் பீரோவில் இருந்த பணம் மற்றும் எட்டு சவரன் தங்க நகைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். அதிலிருந்த 30 சவரன் நகைகளை விட்டு சென்றுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்திருந்தால் அந்த நகைகளையும் எடுத்திருக்க வேண்டும். எனவே, கொள்ளை நோக்கத்துடன் கொள்ளையர்கள் வரவில்லை என போலீசார் கருதுகின்றனர். வீட்டின் பின் பக்கத்தில் இரண்டு கதவுகள் உள்ளன. இரண்டாவது கதவில் எங்கு தாழ்பாள் உள்ளது என்பதை பார்த்து அந்த இடத்தில் மட்டும் கத்தியால் கிழித்து தாழ்பாளை திறந்துள்ளனர். அதேபோல, உள்பக்க கிரில் கதவை கையைவிட்டு தாழ்பாளை நீக்கியுள்ளனர். இதனால், அந்த குடும்பத்திற்கு நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.