பெங்களூரு: "எந்த அதிர்ச்சிக்கும் ஆளாக வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம்; உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம்' என, கர்நாடக பா.ஜ., அரசு, உத்தரவாதம் மற்றும் நம்பிக்கை அளித்தாலும், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பெங்களூருவிலிருந்து அவசர, அவசரமாக வெளியேறுவது மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர், மிரட்டலுக்கு பயந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் துவங்கி உள்ளனர். "அடுத்த வாரம் தங்கள் மீது தாக்குதல் நடக்கக் கூடும்' என்ற தகவலால் பீதியடைந்து, ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.மூன்றாவது நாளாக நேற்றும் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில், வடகிழக்கு மாநிலத்தவர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
15 ஆயிரம் பேர்:பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, மங்களூரு, குடகு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களும், தங்கள் ஊருக்கு செல்ல பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் வந்திறங்கினர். கடந்த இரண்டு நாளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகிழக்கு மாநிலத்தவர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.பெங்களூருவில், 2.75 லட்சம் பேர் வரை, வடகிழக்கு மாநிலத்தவர் வசித்து வருகின்றனர். இதில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர், பெங்களூருவிலிருந்து வெளியேறியுள்ளனர்."கர்நாடகாவை விட்டுச் செல்ல வேண்டாம், உயிர், சொத்துகளை காப்பாற்ற அரசு தயாராக உள்ளது' என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், உள்துறை அமைச்சர் அசோக், உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தும், செவி சாய்க்காமல் வடகிழக்கு மாநிலத்தவர் தங்கள் ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்."கர்நாடகா மாநில மக்களின் சார்பில், நாங்கள் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கிறோம். பாதுகாப்பு அளிக்கிறோம்' என, விளம்பரம் வாயிலாக அரசு நம்பிக்கை அளித்திருப்பினும், வடகிழக்கு மாநில மக்களிடம், எந்த விதத்திலும் நம்பிக்கை ஏற்படவில்லை.
"வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். "மாநிலத்தின் அமைதியை குலைக்கும் வகையில், எந்த தகவல்களும், அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம்' என, வடகிழக்கு மாநில பத்திரிகைகளுக்கும், அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதால், மேலும் ஒரு தனி ரயில் நேற்று கவுகாத்திக்கு இயக்கப்பட்டது. "பயணிகளின் வற்புறுத்தலுக்கேற்ப, மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பி விடப்பட்ட ரயில்:பெங்களூருவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக, பெங்களூரு - நாகூர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டு, அசாம் மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.தாக்குதல் பீதி காரணமாக, கர்நாடகாவில் உள்ள வடக்கு கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனால், வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிப்பாக அசாம் மாநிலம் செல்லும் ரயில்களில், கூட்டம் அலைமோதுகிறது.இதைச் சமாளிக்கும் பொருட்டு, ரயில்வே நிர்வாகம், பெங்களூரு - நாகூர் விரைவு ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்து, அந்த ரயிலை அசாம் மாநிலத்திற்கு சிறப்பு ரயிலாக இயக்கி வருகிறது.
இதனால், பெங்களூருவில் இருந்து நேற்று மாலை, 5:30 மணிக்கு, கடலூர் துறைமுகம் சந்திப்பிற்கு வர வேண்டிய நாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகூரில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பிற்கு, இன்று, 18ம் தேதி காலை, 8:10 மணிக்கு வர வேண்டிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவும் கூட வித்தியாசமாகத்தான் இருக்கிறது. கலைஞரில்லாத தமிழக பத்திரிகையுலகம் சூன்யம் என்பதை நினைவுறுத்தும் வகையில் சம்பந்தமில்லாத செய்திக்கும் கூட அவர் படத்தை பிரசுரித்திருக்கீர்கள், நன்றி. ஆனால் இச்செய்திக்கிடையேயும் கூட அவர் பாதிக்கக்கப்பட்டத்தை சம்பந்தப்படுத்தலாம். கடந்த ஆட்சியை கவிழ்க்க இதே மாதிரியான பொய்யான பல்க் எஸ் எம் எஸ் கள் தான் பயன்படுத்தப்பட்டன. அப்போதைய மத்திய தேர்தல் ஆணையரை கூட இதன் மூலம் குழப்பி தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. இக்குறும்செய்திக்கான தற்காலிக தடையை நிரந்தரமாக்க வேண்டும். நாட்டை குழப்பி மீன் பிடிக்க காத்திருக்கும் கும்பலுக்கான தீவிரவாத ஆயுதம் இது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.