புதுடில்லி:நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை, டில்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டது ஆகிய, மத்திய அரசின் நடவடிக்கைகளில், முறைகேடு எப்படி நடந்தது என்பது குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் விளக்கியுள்ளது.
மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அரசுக்கு எப்படி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து கூறியுள்ளதாவது:
தனியார் நிறுவனங்கள் லாபம்:
கடந்த 2005லிருந்து, 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல், சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 - 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, கணக்கிட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிட்டு, இந்த முடிவுக்கு வந்துஉள்ளோம்.
ரிலையன்சுக்கு சலுகை:
மத்திய பிரதேசத்தில் உள்ள சாசன் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மின் நிலையத்துக்காக, விதிமுறைகளை மீறி, உபரியாக உள்ள நிலக்கரிகளை எடுத்துக் கொள்ள, அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக லாபம் அடைந்துள்ளது. குறிப்பாக, மொகெர், மொகர் அல்மொக்ரி, சட்ராசல் ஆகிய மூன்று சுரங்கங்களில், கூடுதலாக உள்ள நிலக்கரிகளை பயன்படுத்திக் கொள்ள, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, ஏல நடைமுறையை மீறும் செயலாகும்.
நூறு ரூபாய் குத்தகை:டி
ல்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதிலும், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டில்லி விமான நிலையம், தற்போது அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டில்லி விமான நிலைய ஆணையம் லிட்.,டும் (டி.ஐ.ஏ.எல்.,), ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, விமான நிலைய பொறுப்புகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக, இந்த நிறுவனங்களுக்கு, 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டு குத்தகையாக, அந்த நிறுவனங்களுக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து, 60 ஆண்டுகளுக்கு, இந்த நிலத்தின் மூலம், டி.ஐ.ஏ.எல்.,லும், ஜி.எம்.ஆர்., நிறுவனமும், 1,63,557 கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆண்டுக்கு, வெறும் 100 ரூபாய் மட்டுமே, குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விமான நிலைய மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களும், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம், கட்டணம் வசூலித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மேம்பாட்டுப் பணிகளுக்காக, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, எந்த விஷயமும் இடம் பெறாத நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள், 3,415 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. இந்த தொகையும், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு:
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தனக்குள்ள அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆய்வுக்கு அனுப்பப்படும். அந்த குழு பரிந்துரைக்கும் விஷயங்களை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மதிப்பீடு சரியல்ல-அமைச்சர் குமுறல்
:நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிடுவதற்காக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் பயன்படுத்திய மதிப்பீட்டு முறை, சரியானது அல்ல. நாட்டுக்குத் தேவையான நிலக்கரித் திட்டங்கள் முழுவதையும், கோல் இந்தியா நிறுவனத்தால் மட்டுமே, நிறைவேற்றிட முடியாது. நிலக்கரித் துறையில், வளர்ச்சியை விரைவு படுத்தவும், தேவையை நிறைவேற்றவும், தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன் அடிப்படையில் தான், தனியார் நிறுவனங்களுக்கு, சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.
ஐ.மு.கூட்டணி ஆட்சியில், இதுவரை பல மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில், மிகப் பெரிய ஊழல், தற்போது நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும், புதிய ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும் போது, அவை, அதற்கு முந்தைய ஊழல்களை விட, பெரிய அளவில் இருப்பது, ஆச்சர்யம் அளிக்கிறது.
சுஷ்மா சுவராஜ்பா.ஜ., மூத்த தலைவர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முஹம்மத்.....என்ன ஆளுங்க நீங்க....இந்த காசு இந்நேரம் எங்கெல்லாமோ போயி தஞ்சம் அடைஞ்சிருக்கும். கருப்பு பணத்தை கண்டுக்க மாட்டேன், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் பதுக்கி வைத்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரமாட்டேன், வெளிநாட்டில் இந்திய பணத்தை பதுக்கி வைத்த பண முதலைகளின் பெயரை வெளியிட மாட்டோம் என்று சொன்னவர் இன்று ஜனாதிபதி. இந்தியா உருப்படுமா ???...
நிலக்கரி மெகா சீரியல் ஆரம்பம், கபில் சிபல் மறுப்பு, நாராயணா சாமி காட்டம், டிக் விஜய் சிங் கடும் புகார், எதிர்கட்சிகள் அமளி, சிபிஐ விசாரணை, நீதிபதி கடும் கண்டனம், சிறையில் அடைப்பு, சிறையில் தனி கழிவறை இல்லை, குளிர் தாங்கமுடியாமல் அமைச்சர் அவதி, இவரர்களால் மற்ற சிறைக் கைதிகளுக்கும் இவர் உண்ணும் அதே உணவு வழங்க ஏற்பாடு, ஆறுமாதம் இந்த நாடகங்கள், பின்பு நீதிபதி ஓய்வு, ஜாமீனில் வெளியே வருதல், கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்ப்பு, இதுதான் நடக்கப் போகிறது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லே வந்தே மாதரம்
டாட்டா நிறுவன தலைவர் "அரசுத்துறைகளில் லஞ்சம் கொடுத்தே அனுமதி பெற வேண்டிஉள்ளது" என்பதையும் "இத்தகைய சூழல் நியாயமாக தொழில் செய்ய நினைக்கும் தொழிலதிபர்களுக்கு பெரும் சிரமாக உள்ளது மேலும் தொழில் போட்டியின் காரணமாக சில சமயம் இத்தவறுகளுக்கு உடன்பட வேண்டிஉள்ளது" எனும் பொருளில் தன் ஆலோசகர் குழுவில் வருத்தத்துடன் கூறியது நினைவுகூரத்தக்கது.மத்திய அமைச்சர் ஒருவர் மாபெரும் தொழிலதிபரை மிரட்டிய வரலாறும்,அதே மத்திய அமைச்சர் மற்றுமொரு தொழிலதிபரை தொழிலை விட்டே விரட்டிய கொடுமையையும்,அது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருவதையும் நம் சக காலத்திலே நாம் கண்டிருக்கிறோம்.
ஒரு விஷயம் தெளிவு. வாக்களிப்பது இளிச்சவாயர்களாகிய நாம். உண்மையில் ஆட்சி செலுத்துவதோ பெரும் தொழிலதிபர்கள். இவர்களை எதிர்த்துக்கொண்டு நேர்மையாக யாரும் ஆட்சி செய்யமுடியாது. இன்னும் சொல்லப்போனால் மந்திரிசபை அமைப்பதிலிருந்தும் இலாக்கா ஒதுக்கீடு, கொள்கை முடிவுகள் வரை இவர்களது இஷ்டமே.(மந்திரிசபை கேபினட்டின் தீர்மான ஒரிஜினலே ரிலையன்ஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ரெய்டில் கிடைத்தது என்றால் பாருங்களேன்).ஊடகங்களும் இவர்களை கடுமையாக விமர்சிக்கமுடியாத நிலைமை எனவே இவர்கள் அந்நிய நிறுவனங்களுடன் சேர்ந்து சுரண்டியது போக மிச்சம்மீதியே நமக்கு பிச்சையாகக் கிடைக்கும் நிலைமை கண்ணீர் விட்டோம் வளர்த்தோமிந்த சுதந்திரத்தை. ,இப்போது எதனால் காக்கப்போகிறோமோ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.