"இலங்கை பிரச்னையில், என்ன மாதிரியான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை, அங்கு வசிக்கும் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். அதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையிலும், ஐ.நா., மனித உரிமை குழுவிலும், இந்தியா கொண்டு வர வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக, சென்னையில் சில தினங்களுக்கு முன், "டெசோ' மாநாடு நடத்தி முடித்துள்ள நிலையில், நேற்று டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்தனர். டி.ஆர்.பாலு தலைமையில், கனிமொழி உட்பட அந்தக் கட்சியின் எம்.பி.,க்கள் அனைவரும் பிரதமரின் பார்லிமென்ட் அலுவலகத்தில், மதியம் ஒரு மணியளவில் அவரை சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்னை சம்பந்தமாக, விரிவான கோரிக்கை மனு ஒன்றை, பிரதமரிடம் அளித்தனர்.
கோரிக்கை மனு:
அந்த கோரிக்கை மனு, சென்னை, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. ஈழம் என்ற வார்த்தையை, தவிர்த்து விட்ட போதிலும், அதை வலியுறுத்தும் அர்த்தத்திலேயே, கோரிக்கை மனு அமைந்திருந்தது. மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, என்னவாக இருக்க வேண்டும் என்பதை, அந்த மக்களின் விருப்பத்தின்படியே, முடிவு செய்ய வேண்டும். அதற்கான தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா கொண்டு வர வேண்டும். இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலான, அரசியல் தீர்வு வரைவு தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை குழுவிலும், இந்தியா கொண்டு வர வேண்டும். இந்த தீர்மானங்களுக்கு, உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட, தன்னிடம் உள்ள அனைத்து ராஜதந்திர யுக்திகளையும், இந்தியா பயன்படுத்திட வேண்டும்.
அகதிகளுக்கு குடியுரிமை:
தமிழகத்தில் குடியிருக்கும், இலங்கைத் தமிழர்களின் நிலைமையை மேம்படுத்திட, அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கான, அடிப்படை உரிமைகளை அளித்திட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிடவோ அல்லது இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையையோ அளிக்க வேண்டும். இலங்கையில், இன்னமும் சிறைகளில் வாடும் அரசியல் தமிழ் கைதிகளை விடுதலை செய்யவும், புலம் பெயர்ந்த தமிழர்களை, மீண்டும் தாயக மண்ணிற்கே வந்து, குடியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிதைக்கப்படாமல் காக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக வசதிகள் ஏற்படுத்தவும், புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான, மருத்துவ வசதிகளை செய்து தரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை, இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
பயிற்சி கூடாது:
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியா 500 கோடி ரூபாய் வரை அளித்தது. அந்தப் பணம், ஒழுங்காக செலவு செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க, இந்தியா சார்பில், ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும், இந்த சந்திப்பின் போது தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு பேசியது. இலங்கை ராணுவத்தால், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, கச்சத்தீவை இந்தியா, மீண்டும் தன் ஆதிக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். தனுஷ்கோடி அல்லது மண்டபம் ஆகிய இடங்களில், இந்திய கடற்படை பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்தையும் கேட்ட பிரதமர், "இந்த கோரிக்கைகள் குறித்து ஆவன செய்வதாக உறுதியளித்தார்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞானதேசிகன் பார்முலாவாச்சே...:
பிரதமர் உடனான, தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்திப்பு குறித்து, தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது: சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பில், இலங்கை பிரச்னை என்பது மனுவாக அளிக்கப்பட்டதோடு சரி. சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயம் குறித்தே, எம்.பி.,க்கள் பேசினர். "தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, நடவடிக்கை எடுங்கள்' என, கேட்டபோது, "இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேசினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமே' என, பிரதமர் பதில் அளித்துள்ளார். தவிர, சீனாவின் ஆதிக்கம், இலங்கையில் அதிகமாகி விடும் என்றும், மன்மோகன் சிங் திரும்ப திரும்ப தெரிவித்துள்ளார். "மீனவர்களைத் தாக்குவது இலங்கை ராணுவம், அதற்கு போய் இரு நாட்டு மீனவர்களும் பேசினால், சரியாகி விடுமா' என, சில எம்.பி.,க்கள் கேட்டுள்ளனர். பிறகு வெளியில் வந்த அவர்கள், "இது ஞானதேசிகன் பார்முலாவாச்சே. இதைச் சொல்வதற்கு பிரதமர் எதற்கு' என, சில எம்.பி.,க்கள் நொந்து கொண்டனர். இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில், காந்தி சிலை எதிரில், இன்று காலை, 10 மணிக்கு, இலங்கை பிரச்னைக்காக, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழன் சாகடிப்பதை நிறுத்த முடியாது என்று அந்த ............. மறைமுகமாக சொல்கிறான். நாமளும் சொரணை கெட்டுபோய் அதுக்கு கமெண்ட் எழுதிக்கிட்டு இருக்கிறோம். எவனுக்கென்ன சாகப்போகிறது தமிழன் மட்டும் தான். இத்தாலிக்காரிக்கோ கன்னடத்துக்காரிக்கோ தமிழனை ப்பற்றி அக்கறை இல்லை. தமிழ் மட்டுமல்ல தமிழனும் இனி மெல்ல இல்லை வேகமாகவே சாவான். இது உறுதி என் சொரணை கேட்ட சகோதரர்களே என்னைக்கு நாம் போராட்டமென தெருவில் இறங்குகிரோமோ என்று நாம் வீரத்தமிழன் என நிரூபிக்கிரோமோ அன்று தான் நாம் நாமாக வாழ முடியும். கடிதம் எழதுகிறார்கள். ஈமக்கிரியை கடிதம். தமிழனுக்கு தமிழ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு. வெளிநாட்டில் இருக்கும் நான் வீட்டுக்கு எதாவது என்றால் மனது பதை பதைக்கிறது. அட பாவிங்களா ஒரு இனமே அழிவதற்கு காரனமாகிவிட்டு யாருக்கடா எழுதுகிறீர்கள் கருமாந்திர கடிதம். இதில் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி நண்பர்களும் நன்றாகவே தூங்கிகொண்டிருக்கிரார்கள். எங்கேயாவது கலவரம் என்றால் நேரலை ஒளிபரப்பு, எச்க்ளுசிவ் செய்திகள் என்று ரொம்ப பரபரப்பு காட்டும் ஊடக சொந்தங்கள் நமக்கு ஒன்று என்றால் தூங்கிவிடுகிறார்கள். ஊடகம் ஒரு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஒன்று. மக்களை சிந்திக்க வைக்கவும் செய்யும். புத்தியை மழுங்கடிக்கவும் செய்யும். இதில் இரண்டாவதை நன்றாகவே செய்கிறார்கள். நம்ம மந்திரிகளை பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும். அடாடாடா ரொம்ப பக்தி நிறைந்தவர்கள். அவர்களுடைய பெற்றோர் காலில்கூட அதனை தடவை விழுந்திருக்க மாட்டார்கள். அம்மா வீட்டில் கிளம்பினால் இவர்கள் வீட்டு வாசலில் படுத்து அங்க பிரதட்சணம் செய்தவரே தலைமை செயலகத்துக்கு செல்வார்கள். இங்கே இப்படி என்றால் தாத்தா வீட்டில் அவர்கள் குடும்பம் தவிர யாருமே ஒருபடி முன்னேறினால் தெய்வ குத்தம் வந்துரும். கூடி உட்கார்ந்து கும்மி அடித்திவிடுவார்கள். ஆனால் தமிழனுக்கு பிரச்சனை என்றால் கடிதம் எழுதுவார்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் மாநாடு நடத்துவார்கள். அத்தோடு நிருத்திகொள்வார்கள். அப்புறம் எப்படி கொள்ளை அடிப்பது என்ற விவாதம் தொடரும். இப்படி யாருமே நம்மை கண்டுகொள்ளாமல் நாம் செத்தால் கூட கவலைப்படாமல் இருக்கும்போது நமக்காக நாம் தானே போராடவேண்டும். இதுக்கு அவன் என்னை காப்பாற்ற வரவில்லை இவன் வரவில்லை என்ற புலம்பல் ஏன். நாம் வீரத்தமிழர்கள் தான் என்பதை நினைவு படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போது இல்லை என்றால் எப்போது ???????
பபிதா தேனீ :- இந்த மாதிரி மக்களை ஏமாற்றி இன்னும் எத்தனை காலம் தான் உங்க பொழப்ப ஓட்ட போறிங்களோ தெரியல? நீங்க எங்களை ஏமாற்றி கொள்ளை அடிச்சு வைச்சு இருக்குற பணத்தை எல்லாம் வைச்சு புதுசா ஒரு நாடே இந்த தமிழீன மக்களுக்கு உருவாக்கி தரலாம். அத வேனும்ன கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்களேன். எங்கள் முதுகுக்கு பின்னால் நின்று கத்தியால் குத்தி விட்டு முகத்துக்கு நேரே இது என்ன நலம் விசாரிப்பு என்று என் தமிழன் பேசும் குரல் உங்கள் காதில் மட்டும எப்படி விழாமல் போனது? இது தங்களது முதிர்வினை காட்டுகிறதா ? இல்லை நடிப்பு திறமையை காட்டுகிறதா? முதிர்வென்றால் சென்று ஓய்வெடுங்கள். நடிப்பென்றால் சினிமா துறை இன்னும் நன்றாகதான் போய் கொண்டு இருக்கின்றது. அதில் சென்று உங்கள் திறமை காட்டுங்கள். அரசியலில் இருந்து இனியும் எங்களை ஏமாற்ற முடியாது...
ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தால் எல்லாம் நடந்து விடும் என்று முடிவு செய்வது சரியல்ல. ஐநா பவர் இல்லாத ஒரு பொம்மை யை போன்ற அமைப்பு. வல்லரசுகளின் கை பாவைதான் இந்த ஐநா. அத்தி பூத்தார் போல் ஐநாவால் செய்ய பட்ட காரியங்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்ள வேண்டாம். மீனவர் பிரச்சனை, ஈழ தமிழர் பிரச்சனை தீர்க்க நாம் மத்திய அரசு மூலம் முயல்வதே ஆக்க பூர்வமான ஒரே வழி. திமுக இந்த மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி, அமைதி வழியில் கூட்டணி தர்மம் மீறாமல் நிச்சயம் சாதிக்கலாம். ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஒட்டு மொத்தமாக எம்பிக்கள் ரஜினாமா செய்வது, உண்ணாவிரதம் மேற்க்கொள்வது போன்ற செயல்கள் எந்த பலனும் தராது. மாறாக எடுத்த காரியம் நிறைவேறாமல் போவதோடு எதிர் மறையான பலன்களை கொடுத்து விடும். அதனால் தொடர்ந்து பல்வேறு வழிகளில் மத்திய அரசை வலியுறுத்தி அல்லது நேரில் எடுத்து கூறி திமுக நிச்சயம் வெற்றி பெறலாம். வாழ்த்துக்கள்.
ஐநாவால் உருவாக பட்ட நாடுகளே அதிகம். ஐநா சிலரின் கை பாவை என்றால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா ரஷ்ய முக்கிய நாடுகள் எதிர்த்து குரல் கொடுத்தன, வேண்டா விருப்பாக இந்தியா விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானத்திருக்கு எதை எப்படி செய்தது என்று தெரியும், இலங்கை இதற்க்கு அளித்த பதில் இந்தியாவின் ஆதரவு தீர்மானத்திற்கு சாதகமாக் இருக்கலாம் அனால் எங்களுக்கு பாதகம் இல்லை என்று இந்தியாவின் ஆதரவு தங்களுக்கே என்பதை யும் இந்தியா இல்லாமல் அங்கு போர் ஒன்று வெற்றி கிட்டிருக்க வாய்ப்பிலை என்பதையும் ஒத்து கொண்டார்கள இல்லையா, எனவே மத்திய அரசு தமிழர்களுக்காக் எப்படி நடந்து கொண்டு உள்ளது கொண்டு இருகின்றது கட்ச தீவை பெறுவார்களா இல்லையா, ஐநாவிற்கு கை பாவை என்கிற போர்வை வேண்டாம், வல்லரசுகளில் ஒன்று தீர்மானத்தை கொண்டு வந்ததே பெரிய விஷயம் இலங்கையை பொறுத்த வரையில் இந்தியா ஒரு செல்லா காசு எப்பொழுது இலங்கை சீனாவிடம் மண்டிஇட்டதோ சீனா சீண்டி தான் விடும் தமிழர்களாகிய நாமே திசை திருப்பும வேலையில் இறங்கி விட்டால் ஐநா போன்ற அமைப்புகள் யாரையும் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாம் நடந்து விடும் என்கிற நம்பிக்கையை விட நடக்க வேண்டியதிற்கு ஐநா பொறுப்பாளியாக்க்கி விட்டால் இலங்கை முதலில் கட்டு படும், இலங்கை கட்டு பட்டால் சீண்டு கோழிகளும் சிண்டு முடிவர்களும் ஓரம் கட்ட பட்டு ஈழம் தமிழர்களுக்கு உலக அளவில் ஈரம் பிறக்கும், ஐநாவில் தீர்மானம் வந்த போது தான் அதற்க்கு பதில் என்ன செய்வது என்பதை பற்றி நமது பார்லிமென்ட் சிறிது தும்மல் சதம் கேட்டது, இலங்கையில் உள்நாட்டு போர் மனித உரிமை மீறல் நடந்த போது சாட்டிலைட் படங்கள் மூலம உளவு அமைப்புகள் அங்கு நடந்த கொலைகளின் எண்ணிக்கையை வெளி இட்டன, இந்திய சாட்டிலைட் படங்கள் எதாவது காடினவ்வா தெரியவில்லை டெசோ சென்றது சரியான வழி ஐநா நடவடிக்கைகள் எடுக்க இது போன்ற தீர்மானங்களும் அவசியம், இதில் திமுக வெற்றி தோல்வி என்று ஒன்றும கிடையாது, டேசொவில் திமுகவின் பங்கு ஏதும் இல்லை இது கட்சியின் விருப்பம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் முழு வேண்டுகோள் முன்வைப்பு . ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.