பசுமை நிறைந்த, போக்குவரத்து நெருக்கடி இல்லாத, தெருவில் குப்பை தேங்காத, 100 சதவீத தெருவிளக்குகள் எரியும், மழைக்காலங்களில் எந்த பாதிப்பும் இல்லாத... இப்படி ஒரு சென்னையைப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சென்னை மாநகர மக்களின் விருப்பமும் இதுதான்.
சென்னை மாநகருக்கென தனிப்பெருமைஉண்டு. மாநகரம் உருவாகி, 373 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை இருக்கிறதா என்றால், இல்லை. அதற்கான ஸ்டாலின் மேயராக இருந்தபோதும், நான் இருந்தபோதும் பல முயற்சிகளை செய்துள்ளோம். திறந்த வெளி நிலங்கள், ஆக்கிரமிப்பு இடங்கள் எல்லாம் மீட்கப்பட்டு, பூங்காவாக, விளையாட்டுத் திடலாக மேம்படுத்தப்பட்டன. இந்த பூங்காக்கள் எல்லாம், ப ராமரிப்பு இல்லாமல் மோசமாக மாறி வருகின்றன. மேலும், சென்னையிலும், விரிவாக்க பகுதிகளிலும் புதிய பூங்காக்களையும் உருவாக்குவது அவசியம்.
போக்குவரத்து நெரிசல் பிரச்னை:
சென்னையில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நெரிசல் அறவே குறைய வேண்டும். ஏற்கனவே, புதிதாக ஒன்பது மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் இதுபோன்று மேம்பாலங்களை உருவாக்குவது அவசியம். சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
பஸ், ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதற்கேற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, வடசென்னையில் திருவொற்றியூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் இதை நீட்டிக்க வேண்டும். இந்தப் பணிகள் நிறைவடையும் போது, ஓரளவு நெரிசல் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. மோனோ ரயில் காட்சி ரயிலாகத்தான் இருக்குமே தவிர, போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீர்க்க வழிவகுக்கும் என, நான் நம்பவில்லை.
வெள்ளத்தில் மிதக்கும் நிலை:
மழை வந்தால், சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. 1996ல், 3,300 கி.மீ., சாலைகளில், 615 கி.மீ., தூரத்திற்குத்தான் மழைநீர் கால்வாய் இருந்தது. இதற்கு தீர்வு காண வேண்டுமென, ஆலோசித்துதான், ஜவஹர்லால் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், 1,448 கோடி ரூபாய் பெறப்பட்டு, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுப்பணி துறையும், மாநகராட்சியும் பணிகளை செய்து வருகின்றன.
இந்த பணிகளை தொய்வின்றி முடிக்க வேண்டும். இருக்கும் மழைநீர் கால்வாய்களையும் முறையாக தூர்வாரினால், மழைக்கால பாதிப்புகள் நிச்சயம் குறையும். இதுபோன்று, விரிவாக்க பகுதிகளிலும் போதிய கட்டமைப்புகள் அவசியம். இதற்கு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.
பிரதான பிரச்னை:
சென்னையின் பிரதான பிரச்னை, குப்பைதான். வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்க வேண்டும். தெருவில் குப்பை இருக்கும் நிலை கூடாது. ஒன்பது இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்களை மூடப்போவதாக மாநகராட்சி அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. அதற்காக, குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டுமே தவிர, தொகுப்பு மையங்கள் என அவற்றை மூடி மறைத்து வைக்கக்கூடாது. நான்கு, ஐந்து நாட்கள் குப்பை அகற்றாவிட்டால், நிலைமை சிக்கலாகும்.
தனியார் மூலம் குப்பை அகற்றுவதிலும் குளறுபடி இருந்து வருகிறது. குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரித்தல் போன்ற, மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு நாங்கள் பொறுப்பில் இருந்தபோது, நல்ல துவக்கத்தைக் கொடுத்துள்ளோம். திட்டத்தில் எந்த சிக்கலும் வராத வகையில் செயலாற்ற வேண்டும். குப்பை விவகாரத்திற்கு தீர்வு காண, அரசும் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.
வாடகை நிர்ணயம்:
சென்னையில் வசிக்கும் ஒருவர், சொந்த வீடு வாங்குவது என்பது கனவுதான். வாடகையும் பெரிய அளவில் உள்ளது. சாதாரண மக்களும் வசிக்கும் வகையில், வாடகையை கட்டுக்குள் வரும் வகையில், அரசும், வாடகை கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, பகுதிக்குத் தகுந்தாற்போல், வாடகை நிர்ணயம் செய்தால், இந்த சிக்கல் தீரும். குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை கட்டித்தர அரசு முயற்சிக்கலாம்.
இப்படி, எல்லா நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற, பசுமை நிறைந்த, நெரிசல் இல்லாத, மழைக்காலத்தில் பாதிக்காத சென்னை வேண்டும். இப்படி ஒரு சென்னையை தான், நான் மட்டுமல்ல, மற்றவர்களும் எதிர்பார்க்கின்றனர். சென்னையை சேர்ந்தவன் என்ற முறையில், இதற்கான என் பங்களிப்பை தர முயற்சித்துள்ளேன்; தொடர்ந்து செய்வேன்.
கட்டுரையாளர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.