யார் பொறுப்பு? - மித்ரபூமி சரவணன்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
யார் பொறுப்பு? - மித்ரபூமி சரவணன்

சென்னையிலே பிறந்து வளர்ந்தவன் என்ற போதிலும், இப்போதுள்ள பரபரப்புடன் ஈடு கொடுப்பது மிகப்பெரிய சவாலாக ஆகிவிட்டது. வேலை நிமித்தமாக, ஐந்து ஆண்டுகள் சென்னையில் இருந்து ஒதுங்கி இருந்தது, இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஒரு சொகுசு காரில் பயணமாகட்டும் அல்லது அதற்கு நேர்மாறாக ஒரு பாதசாரியாக செல்வதாகட்டும், சென்னையில் வசிப்பதற்கு பொறுமை மிக, மிக அவசியமாகி விட்டது. பொறுமையில்லாத, பொறுப்பில்லாத, போலியான, பொய்யானதாக நகரம் மாறி வருகிறதோ என்ற ஐயத்தை தவிர்க்க முடியவில்லை. சாலை உபயோகிப்பாளராக, பல பரிமாணங்களில் பார்க்கையில், இந்த மாற்றங்கள் புலப்படுகின்றன.

இந்த மாற்றங்களின் மையமாக பொறுப்பு என்பது தான் செயல்படுகிறது. நகரத்தின் நிலைக்கு யார்தான் பொறுப்பு? என்ற கேள்விக்கு, விடை கிடைத்தாலொழிய நாளைய சென்னையை செம்மைப்படுத்த முடியாது.ஒவ்வொருவரும் காரணம்:

இங்கு வசிக்கும், சாலைகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த நகர சீரழிவிற்கு, ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக அமைகின்றனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, தங்களுக்காகவே சாலைகள் அமைக்கப் பட்டு இருக்கின்றன என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. சாலையில் மற்றவர்களை மிகவும் அலட்சியப் படுத்துவதும், வாகனங்களை முறையற்ற வகையில் சாலையில் நிறுத்துவதும், பின்னர் நிறுத்துவதற்கு இடமேயில்லை என்று அங்கலாய்ப்பதும், வாடிக்கையான நிகழ்வு. இதில், மற்றவர்களை பயமுறுத்தும்,"பிக்-அப் - டிராப்', பி.பி.ஓ., மற்றும் கணினிப்பூங்கா, சொகுசு வாகனங்களை பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்திலேயே தங்களுக்குதான் நேரம் மிக முக்கியமானது என்பது போல் அவசரம் காண்பிப்பார்கள்.


ஆட்டோக்கள்:

மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்வது என்பது, ஏதோ சர்க்கசில் சாகசம் செய்வது போலத்தான் தோன்றும். "மீட்டருக்கு மேல்' என்பது போய், மீட்டரையே பார்க்காத நிலை வந்து விட்டது. பேரம் பேசுவதே சுமுகமான சூழ்நிலைக்கு வேட்டு வைத்து விடுகிறது. இது தவிர, பேருந்து நிலையங்களில் சாலையை அடைத்துக் கொண்டு நிறுத்துவது; சாலை முனைகளில், 50 மீட்டருக்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று, மோட்டார் வாகன சட்டத்தில் சொல்லப் பட்டு இருந்தாலும் அங்கேயே, "ஆட்டோ ஸ்டாண்டு'களை உருவாக்கி, அந்த பகுதியையே தங்களுடைய அடாவடித்தனத்தால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது; பிற ஆட்டோ ஓட்டுனர்களை, "சவாரி' ஏற்ற விடாமல் தடுத்து விரட்டியடிப்பது போன்றவை, நகரில் அன்றாட நிகழ்வுகள். ஷேர் ஆட்டோக்களின், ராஜ்யமே தனி தான். புளிமூட்டைகளை போல் பயணிகளை ஏற்றி சென்றால் தான், அவர்களை பொருத்த வரை நல்ல, "சவாரி!' நினைத்த இடத்தில் நிறுத்தி, மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்வதில், இவர்களுக்கு, அலாதியான குஷி. பயணிகளுக்கும் இது சவுகர்யமான ஒரு விஷயமாக இருப்பதால், மற்றவர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை.


இரு சககர வாகனங்கள்:

இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் கதை சொல்லி மாளாது. ஒரு சாலையை பல பகுதிகளாக கூறு போட்டால், எல்லா பகுதிகளிலும் வியாபித்து இருப்பவர்கள் அவர்களே. நிறுத்து கோட்டிற்கு வெளியே நிற்பது, பாதசாரிகள், சாலையை கடக்க வழி இல்லாமல் பாதையை அடைத்துக் கொண்டு நிற்பது, ஒரு கையை விட்டு, தலையை சாய்த்துக் கொண்டு அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டி சாகசம் செய்வது, தலை கவசத்தை தலையில் மாட்டாமல் பல நேரங்களில் தரையில் உருட்டி விடுவது, பிற வாகனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சிறிய சந்து கிடைத்தாலும் வாகனங்களுக்கு இடையே புகுந்து, முந்திச் செல்ல எத்தனிப்பது என்று சொல்லி கொண்டே போகலாம். இதில் இளைஞர்கள், பந்தயங்களை நடத்தி மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதும் அடங்கும். சாலைகளிலிருந்து திரும்பும் போது சமிக்ஞைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் போடாமல், பின்னே வரும் வாகனங்களை தங்களுடைய "ரியர் வியு' கண்ணாடிகளில் பார்க்காமல் சட்டென்று திரும்பி விடுவது இதெல்லாம் சென்னைவாசிகளுக்கே கைவந்த கலை.


பாவப்பட்டவர்கள்:

மிகவும் பாவப்பட்டவர்கள் மிதிவண்டி ஓட்டுபவர்கள்தான் என்று நினைக்கத் தோன்றும். ஆனாலும், இப்போதெல்லாம் அவர்களும் சாலை விதிகளை மீறுவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விடுகின்றனர். நெருக்கடியான சாலைகளில் அவர்களுக்கு இடமே இல்லையென்றாலும், அவர்களும் மற்ற வாகனங்களுடன் போட்டிப் போட தயங்குவதில்லை. பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிள்களை அதிக உபயோகிப்பவர்களாக இருக்கின்றனர். அதில் பலர் "கட்' அடித்து ஓட்டுவது, பின்பக்கம் கவனிக்காமல் சட்டென்று ஒடித்து திரும்புவது மற்ற வாகன ஓட்டிகளை பல நேரங்களில் திக்கு முக்காட செய்து விடுகிறது. ஒரு வழிப்பாதைகளில் தவறாக செல்வது என்பது இவர்களுக்கு அலாதியான ஒன்று. இரவு நேரங்களில் சரியான முன்விளக்கு இல்லாமல் செல்வது அதிகரித்து விட்டது.


பாதசாரிகளின் நிலை:

பாதசாரிகளின் நிலைமைதான் அந்தோ பரிதாபம். பெரும்பாலான சாலைகளில் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகுவோர் இவர்களே, நடைபாதை கடைகள் ஒருபுறம், தாறுமாறான வாகன ஓட்டிகள் மறுபுறம், சாலை ஆக்கிரமிப்பாளர்கள் இன்னொருபுறம். இதையெல்லாம் தாண்டி சக பாதசாரிகளின் பொறுப்பில்லாத தனம் வேறு ஒருபுறம். இப்படியாக சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை பெரும்பாலும் மறந்து விடுகின்றோம். ஒவ்வொரு சாலை உபயோகிப்பாளரும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, குறைந்தபட்ச நேரத்திற்காவது ஒரு பாதசாரியாக இருந்தே ஆக வேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. மிக, மிக முக்கிய நபர்கள் சிலரைத் தவிர. அப்படியிருக்கையில் பாதசாரிகளுக்கு சக சாலை உபயோகிப்பாளர்கள் தக்க மரியாதையை தருகிறார்களா?

நடைபாதையில் உள்ள குப்பை தொட்டிகள், கதவுகள் இல்லாத ஆபத்தான மின் இணைப்பு பெட்டிகள், வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கேபிள்கள், சரியாக மூடாமல் அல்லது சீர்செய்யப்படாமல் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் பாதசாரிகளை பதம்பார்ப்பவைகளில் சில. ஆனாலும், பொறுப்பற்ற பாதசாரிகளும் இருக்கிறார்கள். நடந்து கொண்டே, சாலையை கடந்து கொண்டே, பேருந்தில் ஏறிக்கொண்டே என்று எல்லா நேரங்களிலும் அலைபேசியில் பேசுவது ஆபத்தாக முடியும் என்று உணர்வதில்லை.


ரயில்கள் நிலை:

சரி, இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு, மேம்பால ரயிலிலோ, புறநகர் ரயிலிலோ செல்லலாம் என்றால் அங்கேயும் பிரச்னைகள் தான் மேலோங்கி இருக்கின்றன. ஏறும் இறங்கும் வழியிலேயே நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் உள்ள சக பயணிகள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் வாசலிலே நின்று கொண்டு இடைஞ்சல் ஏற்படுத்துபவர்களும் பயணிகள் தானே? இருப்பதையே ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு, மெட்ரோ ரயில்களும், மோனோ ரயில்களும் வந்து என்ன பெரிசாக மாற்றத்தை கொண்டுவரப் போகிறது? இங்குள்ள பொறுப்பற்ற மக்களால் தான் சென்னை நகரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. சென்னைவாசியும், பொறுப்பேற்று, வழிமுறைகளை மாற்றிக் கொண்டால் தான் சென்னை நகர பொது வெளி மகிழ்ச்சிக்குரியதாக பயன்பாட்டுக்கு வரும்.

கட்டுரையாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.