
புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீடுகளை முற்றுகையிடச் சென்ற, அன்னா ஹசாரே குழுவின், முன்னாள் உறுப்பினர் கெஜ்ரிவாலையும், ஹசாரேயின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களையும், போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி யடித்தும் கலைத்தனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்புஏற்பட்டதாக, சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய கணக்கு தணிக்கைஅலுவலக (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இந்தப் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பா.ஜ., தலைவர் நிதின் கட்காரியின் வீடுகளை, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக, கலைக்கப்பட்ட அன்னா ஹசாரே குழுவின், முன்னாள் உறுப்பின ரான கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.ஹசாரேயின் ஆதரவு பெற்ற,"ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும் கூறினார். ஆனால், இந்தமுற்றுகைப் போராட்டத்திற்கு, டில்லி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இருந்தாலும், "அறிவித்தபடி போராட்டம் நடைபெறும்' என, கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
ஊர்வலமாக சென்றனர் :
இந்நிலையில், ஹசாரே ஆதரவாளர்களும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும், நேற்று காலை, டில்லி ஜந்தர்மந்தரில் கூடினர். அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், மணீஷ் சிசோடியா உட்பட பலர் பேசிய பின், அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீடு உள்ள ஜன்பத் சாலை, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரியின் வீடு உள்ள துக்ளக் சாலை ஆகியவற்றுக்கு, மூன்று குழுக்களாகப் பிரிந்து, ஊர்வலமாகச் சென்றனர்.பிரதமர் வீட்டிற்கு செல்லும் பாதையில், பல இடங்களில், போலீசார் தடைகளை ஏற்படுத்தியிருந்தாலும், முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றவர்களை, போலீசார் முதலில் தடுத்து நிறுத்தவில்லை. பிரதமரின் வீடு அருகே தான், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.முற்றுகைப் போராட்டம் நடத்துவதை கைவிட்டு, கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அதைக் கேட்க அவர்கள் மறுக்கவே, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; தண்ணீரை பீச்சியடித்தனர். பின்னர் பலத்தை பிரயோகித்து அவர்களை அகற்றினர்.பிரதமர் வீட்டின் முன் மட்டுமின்றி, சோனியா மற்றும் நிதின் கட்காரி வீடுகளை முற்றுகையிடச் சென்றவர்களையும், இதேபோல் பலத்தை பிரயோகித்து, அகற்றி, சிறிது நேரம் தங்களின் காவலில் வைத்திருந்து, பின், போலீசார் விடுவித்தனர்.
மீண்டும் போராட்டம்:
முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்று, போலீசாரால் பிடிக்கப்பட்ட கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் சிலர் கூறுகையில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னையில், பா.ஜ.,வும், காங்கிரஸ் கட்சியும் எப்படி கைகோர்த்து செயல்படுகின்றன என்பதை, நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாங்கள் எங்கள் பணியைச் செய்து விட்டோம்' என்றனர்.
பின்னர் மீண்டும் பேசிய கெஜ்ரிவால் கூறுகையில்
, ""மீண்டும் இதே போன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம்,'' என்றார்.
கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக, டில்லியின் மத்திய பகுதியில் உள்ள ஆறு மெட்ரோ ரயில் நிலையங்கள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பின்னர் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டது. ஆறு ரயில் நிலையங்களும் நேற்று வழக்கம் போல செயல்பட்டன.
வெட்ட வெளிச்சமான விரிசல்:
"ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின்உறுப்பினரும், கலைக்கப்பட்ட அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றிருந்தவருமான, கிரன் பேடி, நேற்றைய முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார்.காலையில் கூட, "அவர் ஜந்தர் மந்தருக்கு வருவார்' என, அரவிந்த் கெஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷனும் தெரிவித்தனர். ஆனால், நேற்றைய போராட்டத்தில் கிரன் பேடி பங்கேற்கவில்லை. பங்கேற்காதது தொடர்பாக, அவரின் கருத்தைக் கேட்க, நிருபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதும், அவர் பதில் அளிக்கவில்லை."நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக, ஆளும் கட்சியினரின் வீடுகளை மட்டுமே முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்' என, கிரன் பேடி கூறினார். ஆனால், கெஜ்ரிவால் இதை ஏற்கவில்லை. "பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி மற்றும் பா.ஜ., ஆளும் முதல்வர்களின் வீடுகளையும் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, கிரன் பேடி நேற்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சின்ன சின்ன அதிகாரிகள் முதல் பெரிய பெரிய அதிகாரிகள் வரை தண்டனை பெறும் பிரிவுகள் ஜன்லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.. இந்த மசோதாவை தானே உங்களது அபிமானமிக்க அரசியல் கட்சிகள் நிறைவேற்ற பயப்படுகின்றன.. உங்கள் கருத்தை படித்தால் சிறுபிள்ளைதனமாக உள்ளது. உங்களை போன்றவர்கள் எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வீட்டில் முடங்கி கிடப்பதால் தான் இப்படி நாட்டின் சொத்தை எல்லாம் கொள்ளை அடித்து கொண்டிருகிறார்கள் என்பது கூடவா தெரியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை அரசின் தயவில் இல்லை அதிகாரிகளின் தயவில் பணம் கொடுத்து வேலை பெற்றவராக கூட இருக்கலாம். அதனால் தான் உங்கள் சிந்தனை இப்படி போகிறது. உங்களை போல எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பது உங்களுக்கு தெரியுமா? தன்னுடைய பணியை துறந்து மழையிலும் வெயிலிலும் கிடந்து போராட வேண்டும் என்று அவருக்கு என்ன தலை எழுத்தா? சராசரி இந்திய குடிமகனுக்கு இருக்கும் ஆசை தான் அவருக்கும் இருக்கிறது, இந்திய வல்லரசாக நல்லரசாக ஆக வேண்டும் என்பது. இதற்காக அவரால் முடிந்த சிறு முயற்சி எடுக்கும் அவரை பாராட்ட மனம் இல்லை என்றாலும், கேவலமாக சித்தரிக்காதீர்கள்.....
சுரங்கங்களை பெற்றவர்கள் இதுவரை நிலக்கரி தோண்டத்துவங்கவில்லையாம்.அதனால் இழப்பில்லையாம். திருவாய் மலர்ந்திருக்கிறார் ப சி சண்டாளர்,அதாவது திருடிவிட்டு மாட்டிககொண்டபின் திருப்பிக் கொடுத்துவிட்டால் நல்லவர்களாம் CAG புகார் மட்டும் வராமலிருந்தால் அடியோடு தோண்டி முடித்திருப்பர். ஒரு கிராம் கரி கூட மீதமிருந்திருக்காது.,சுரண்டித்தள்ளியிரூப்பர்.திட்டம்போட்டு கொள்ளையடிக்க முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை ,விசாரணை நடத்தி என்ன பயன்? கிரிமினல் குற்றத்தை ஒப்புக்கொள்ளபோகிறார்களா? உண்மையான் திருடர்கள் காங்கிரசாரே ஹசாரே போலல்லாமல் யாரும் கேள்வி கேட்காமலிருந்தால் அவ்வளவுதான். ஒரே வருடத்தில் பாரதத்தை பழையபடி வெள்ளைக்காரர்களிடம் ஒப்படைக்க காங்கிரஸ்காரர்கள் தயங்கமாட்டார்கள்
போராட்டமெல்லாம் சரிதான்.ஆனா வீட்டை முற்றுகை இடுவது அராஜகம்.வன்முறை.ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம்,நாளை கேசரிவாள் வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகை இட்டால்??????கதை கந்தலாயிடுமில்லா.அதனால் போராட்டத்தை வீட்டுக்கெல்லாம் கொண்டு போகாதீர்கள்.போராட்டம் எந்த தனி மனிதனுக்கும் எதிரான தல்ல.ஒரு அமைப்புக்கு எதிரான போராட்டம்.அது புரியாம வாள் ..வாள்..நு...
போலிஸ் தடுக்காம இருந்திருந்தா இவங்கெல்லாம் பிரதமர் வீட்டுக்குள்ள போயி சோபாவுல கால் மேல் கால் போட்டு ஆட்டிட்டு இருந்திருப்பாங்களா ? இதனால ஊழல் எப்படி குறையும் ? விளம்பரம்தானே இவங்க நோக்கம் ? ஊழல் குறையனும்னா அப்துல் கலாம் மாதிரி நாட்டுல இருக்குற ஒவ்வொரு பள்ளிகூடத்துலயும் போய் ஊழலுக்கு எதிரா பிரச்சாரம் செய்யலாமே ? மனசு மாறுனா நாடும் மாறுமே ?
ஒரு லட்சம் அப்துல் கலாம் பள்ளி கூடங்களுக்கு சென்று பாடம் நடத்தினாலும், நாட்டில் ஊழல் குறையாது. தாங்கள் கொடுப்பது, தலைவலிக்கு மூட்டுவலி மருந்து. கேஜ்ரிவாளிடம் குறை காண்பதை விட்டு, அவரை போன்று போராட்டத்தில் ஈடுபட முடியுமா என்று பாருங்கள். உங்களை போன்றவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்தாலே போதும். போராடுபவர்களை நக்கல் நய்யாண்டி செய்து போராட்டத்தை வலுவிழக்க செய்வதில் உங்களுக்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை. விளம்பரம் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கு. அதற்கு பத்து நாட்கள் பட்டினி கிடக்க தேவை இல்லை. அரசுக்கு எதிராக போராடினால், சிபிஐ வீடுபுகுந்து தூங்கவிடாமல் அடிக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்தும், கேஜ்ரிவால் போன்றவர்கள் போராடுகிறார்கள். வெள்ளைகாரர்கள் ஆட்சிக்கும் தற்போது நடக்கும் ஊழல் மிகுந்த ஜனநாயக ஆட்சிக்கும் ஒன்றும் அதிக வித்தியாசமில்லை. அரசின் சிபிஐ,போலீஸ்,கோர்ட், உள்துறை, உளவு துறை என்று அத்தனை இயந்திரங்களும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. அவைகள் ஜனநாயகத்திற்கு ஆதரவாக என்று செயபடுகின்றனவே அன்றே இந்தியா உண்மையான ஜனநாயக நாடாகும். அப்போது ஒரு சாதாரண குடிமகன் MLA ஆக முடியும். சீப் பப்ளிசிட்டி அடைவதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கு. அதற்கு காந்தி போன்று அறவழியில் ஈடுபட தேவை இல்லை. சுதந்திர போராட்டத்தையே உங்களை போன்ற ஜஸ்டிஸ் கட்சியினர் நக்கல் நய்யாண்டி செய்து வெள்ளைகாரர்களிடம் நற்பெயர் மற்றும் சீப் பப்ளிசிட்டி பெற பார்த்தவர்களே....
இதில் காந்திஜி யின் பெயரை இழுக்காதீர்கள்.காந்திஜி எங்கே,இந்த கூட்டம் எங்கே.அவர் தன்னலமற்ற தேச தந்தை.அவர் ஒருநாளும் யார் வீட்டையும் முற்றுகை இடவில்லை,இடுங்கள் என்றும் சொன்னதில்லை.கேசரிவால் கோர்ட் சம்மனுக்கு பிறகே அரசுக்கு செலுத்த வேண்டிய பிணை தொகையை செலுத்திய நேர்மையாளர்.எனவே மகாத்மா காந்திஜிக்கும் இவர்களுக்கும் சோனியாவுக்கும் காந்திக்கும் உள்ள உறவுதான்....
ஏம்பா குஞ்சுமணி, பள்ளிகூடத்துல படிக்கும்போது எல்லா குழந்தைகளும் நல்லா தான் இருக்காங்க.. பிறக்கும் போதே எந்த குழந்தையும் தீய எண்ணத்துடன் பிறக்கவில்லை. பள்ளிகூடத்திலே படிக்கும் போதும் எந்த ஆசிரியரும் தீய எண்ணங்களை கற்றுத்தரவில்லை. உமது கூற்றுப்படி பார்த்தால் ப.சிதம்பரம், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி ஆகியோர் படித்த பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள் சரி இல்லை போல அல்லவா தோன்றுகிறது. யார் அங்கே. உடனே அவர்கள் சிறு வயதில் படித்த பள்ளியை சென்று சோதனை இடவும். ஆர்டர் கொடுத்துடலாமா.. ஏன்யா இப்படி அறிவிலி தனமா பேசுற. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். அவர்கள் போராடினால் உங்களை போன்ற சிலருக்கு ஏன் வலிக்கிறது? நாய் வைக்கோலும் தின்னாது. தின்னுற மாட்டை தின்னவும் விடாது. போராட தான் முடியவில்லை. குறைந்த பட்சம் போராடுகிறவர்களை கேலி பேசாமலாவது இருங்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.