சென்னை:ஆதீனத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க, "மதுரை ஆதீனம் அறக்கட்டளை'யை அருணகிரிநாதரும், நித்யானந்தாவும் உருவாக்கியது முறையானது அல்ல என்றும், ஆதீனகர்த்தராக செயல்பட நித்யானந்தாவுக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை என்றும், இந்து சமய அறநிலையத் துறை பதிலளித்துள்ளது. மதுரை ஆதீனத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கையும், சட்டப்படியாக இல்லை எனவும் கூறிஉள்ளது.
மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஐகோர்ட் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மனு அனுப்பினார்.
முறையல்ல...:
தனது மனுவை பரிசீலித்து பைசல் செய்யக் கோரி, ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
மதுரை ஆதீனம், இந்து பொது மத நிறுவனம். அறநிலையத் துறை சட்டத்தின் கீழான பட்டியலில், மதுரை ஆதீனம் இடம் பெற்றுள்ளது. ஆதீனத்தின் தலைவராகவும், அறங்காவலராகவும் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். ஆதீனத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க, மதுரை ஆதீனம் அறக்கட்டளையை அருணகிரிநாதரும், நித்யானந்தவும் உருவாக்கியுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, இது முறையானது அல்ல.இந்த அறக்கட்டளையை உருவாக்கிய பின், தனது வாரிசாக நித்யானந்தாவை நியமிப்பதாக, கர்நாடகாவில் உள்ள "நோட்டரி பப்ளிக்' முன், ஒரு மனுவை அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தில் இடமில்லை :
ஆதீனத்தின் சொத்துகளை நிர்வகிக்க, தனது சட்டப்பூர்வ வாரிசாக செயல்பட, நித்யானந்தாவுக்கு தகுதியுள்ளது என்றும், இந்தச் சொத்துகளின் மீது அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் மனுவில், அருணகிரிநாதர் கூறியுள்ளார்.குறிப்பிட்ட காரணங்களுக்காக தவிர, மற்றபடி மடத்தின் அறங்காவலரை நீக்க, சட்டத்தில் இடமில்லை. அறங்காவலர் பதவி காலியாகும் போது, வாரிசு உரிமையில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடியாக அந்த காலியிடத்தை நிரப்ப முடியாமல் போனாலோ, உதவி கமிஷனர் அதற்கான ஏற்பாட்டை செய்யலாம்.மதுரை ஆதீனத்தின் அறங்காவலராக அருணகிரிநாதர் மட்டுமே செயல்படுகிறார். தற்போது, மடத்தின் தலைவராக, ஆதீனகர்த்தராக செயல்பட, நித்யானந்தாவுக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை. அறங்காவலர் பதவி காலியானால் மட்டுமே, அவர் செயல்பட முடியும்.
பதவி காலி இல்லை:
எனவே, அறங்காவலர் பதவி காலியாக இல்லை. மதுரை ஆதீனத்தை உடனடியாக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரக் கோரி, மனுதாரர் அளித்த மனுவில் தகுதியில்லை. அது சட்டப்படியானதாகவும் இல்லை. இருந்தாலும், சட்டப்படி அவர் தனது குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு பதில் அளிக்கப் பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.