சென்னை:சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவ மனையில், இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய அவல சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கொந்தளிப்படைந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறை பிரசவம்:
அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர், ரஞ்சித் குமார், 28, துப்புரவு தொழிலாளி. இவருடைய மனைவி, மலர், 26. இவர் பிரசவத்திற்காக, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரத்தில், இவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இரு நாட்களுக்கு முன்பு, குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால், "இன்குபேட்டரில்' மருத்துவர்கள் வைத்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை இறந்தது.
எலிக்கு இரை:
மாலையில், குழந்தை இறந்தது தொடர்பாக, மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர், குழந்தையின் சடலத்தை, பெற்றோர் பார்க்க சென்ற போது, அதன் இடது கன்னம் முழுவதும் எலிகள், கடித்து குதறியிருப்பதாக தெரியவந்தது.இதை அடுத்து நேற்று காலை, மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு சேர்க்கப் பட்டு இருந்த, மற்ற பெண்களின் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார சீர்கேடு:
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களின் குடும்பத்தினர், மருத்துவமனை சூழலால் பெரும் அல்லல்படுவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேதனையுடன் குறிப்பிட்டனர்.இது குறித்து, சிலர் கூறுகையில், "தனியார் மருத்துவமனை போல், இங்கு அதிகளவில் பணம் வசூலிக்கின்றனர். பெண்ணை பிரசவ வார்டில் சேர்ப்பதில் இருந்து, வீட்டிற்கு அழைத்து செல்வதற்குள், 5,000 ரூபாயாவது செலவாகி விடும். இருப்பினும் பாதுகாப்பான சூழல் இல்லை. இறந்த குழந்தைக்கே இந்த நிலை என்றால், அங்கு, அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் நிலை என்னாவது? அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கே உரிய லட்சணத்துடன், இந்த மருத்துவமனையும் காட்சியளிக்கிறது. எங்கும், மருத்துவக் கழிவு மற்றும் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால், மருத்துவமனைக்குள் எலிகள் தாராளமாக நடமாடுகின்றன. நாய்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன."மருத்துவமனை வளாகத்துக்குள் சுகாதாரத்தை ஏற்படுத்தினால் தான், இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்,' என, இங்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் கூறுகின்றனர்.
பிரேத பரிசோதனை:
இதுகுறித்து, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) ரமேஷ் கூறும்போது,"" இச்சம்பவம் குறித்து, மருத்துவ கல்வி துணை இயக்குனர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் கன்னத்தில், எலி கடித்ததால் காயம் ஏற்பட்டதா அல்லது அதன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் இவ்வாறு ஏற்பட்டதா என்பது விசாரணையில் தான் தெரிய வரும். இதற்கிடையில், பெற்றோர் அளித்த புகாரின் காரணமாக, வீடியோ பதிவுடன், குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் வழங்கப்படும்,'' என்றார்.
10 முதல் 1,000 வரை :
*மருத்துவமனைக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றால், நோயாளியானாலும், அவரைப் பார்க்க வந்தோர் ஆனாலும்,10 ரூபாய் கொடுக்க வேண்டும்.
*நோயாளியை "ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்ல வேண்டும்என்றால் 300 ரூபாய் லஞ்சம்.
*பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்வதற்குக் கூட, ஆண் குழந்தை என்றால் 1,000 ரூபாயும், பெண் குழந்தை என்றால் 500 ரூபாயும் கொடுக்க வேண்டும்.
*செவிலியர்களில் சிலர் எந்நேரமும் அலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
*இதனால் மருந்துகள் கொடுப்பதிலும் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
*நேற்று முன்தினம் மூன்று குழந்தைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சரி, இம்மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள், இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? யார் மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? யார் அரசு அலுவல்களில் தூய்மையாக வேலை செய்ய வேண்டும்? = இதில் கருத்து வேறுபாடே இல்லை. அரசு ஊழியர்கள்தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அரசு கீழ் மட்ட ஊழியர்கள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் மேல் மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் சரியாக இல்லை என்றால், முதல்வர் அவர்களை நீக்க வேண்டும். மொத்தத்தில் கடை நிலை ஊழியர்களும், அதிகாரிகளும்தான் இதற்கெல்லாம் காரணம். அவர்கள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால், அரசு, தயவு தாட்சண்யம் இன்றி, அவர்களை தண்டிக்க வேண்டும். நம் முதல்வர் இதை 2001 - 2006 ல் இதை சரியாக செய்தார். பலன்? அரசு NGO க்களும், இடது சாரி கொள்கையர்களும், சமுதாய எதிரிகளும், சிறுபான்மையினரும், ஒன்று சேர்ந்து அதிமுகவை 2006 ல் தோற்கடித்தார்கள். அரசு ஊழியர்கள் தேர்தலில் தில்லு முல்லு செய்து, கருணாநிதியையும் சிதம்பரத்தையும் ஜெயிக்க வைத்தார்கள். ஆகையால் நம் நாட்டில் சட்டம் கடுமையாக இல்லாததால் தேர்தல் முறை சரியில்லாததால், இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். மக்கள் வோட்டுக்கு பணம் வாங்காமல், லஞ்சம் கொடுக்காமல், நேர்மையாக இருந்து தவறு செய்யும் அரசு ஊழோயர்களையும் அரசியல் வாதிகளையும் அடக்கினால்தான் நாடு உருப்படும்.
எல்லோரும் அரசியல் வாதிகளையும், அமைச்சரையும் மட்டும் குறை சொல்லுகிறீர்கள், அதுக்கும் முன்னாள்.. அந்த அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார துறையில் உள்ளவர்கள் தான் பொறுப்பு... எந்த அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள் ? அதுவும் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் பேசுவதற்கே பயமாக இருக்கும்... ஏன் என்றால் அவர்களின் "அன்பான புன்னகையுடன்" கூடிய பதில்.... இவர்களை எல்லாம் அந்த ஆண்டவன் தான் அவனுடைய "Judgement day " அன்று தண்டிக்க வேண்டும். இந்த மாதிரி நோயாளிகளிடம் பணம் புடுங்குவதை விட பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கலாம்....
அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை விட வார்ட் பாய்,பணிப்பெண்கள்,செவிலியர்கள் இவர்களின் அராஜகம் தாங்கமுடியாது இவர்கள்தான் உண்மையான வழிப்பறிக் கொள்ளைக்காரன்கள்.மருத்துவமனைக்கு மக்கள் நிச்சயமாக சந்தோசமான மனநிலையில் வருவதில்லை எவ்வளவு மன வருத்தத்துடன் வருகிறார்கள் அவர்களிடம் பணம் பறிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனம். அதுவும் லஞ்சத்தை அதிகாரமாகத் தான் கேட்பார்கள். இதை கண்காணிக்க அங்கு எந்த மேல்மட்ட அதிகாரிகளும் இல்லை. அவர்கள் மேல்மட்ட அளவில் லஞ்சம வாங்கிகொண்டிருப்பதால் மொத்த நிர்வாகமும் மகா மட்டமாக இருக்கிறது. லஞ்ச வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அவர்களை பணி இடைநீக்கம் செய்வதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக வேலையை விட்டே அனுப்பினால்தான் மற்றவர்களுக்கு கொஞ்சம் புத்தி வரும்.இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். மக்களும் லஞ்சம கேட்பவர்களிடம் உச்சபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுங்கள் மற்றவர்களும் உங்கள் பின்னாடி வருவார்கள் ஏனென்றால் எல்லோரும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்
நல்ல சிறப்பான மருத்துவமனை.., உரிய அலுவலக நிர்வாக அதிகாரி சரியாக பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் பார்வைக்கு குறைகள் தென்பட்டால்.., உரிய மேல் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும் தாய்மார்கள் விழிப்புடன் குழந்தை பார்த்து கொள்ளவேண்டும் நகர மாநகராட்சி கூர்ந்து கவனித்து மக்கள் பணியாற்ற வேண்டும்.., பொதுமக்கள் மாநகராட்சி தகவல் பலகை தகவல் தொலைபெசி எண்ணை அறிந்து புகார் செய்யவேண்டும் மாநகராட்சி நிர்வாகம் தகவல் பலகை E .B.அலுவலகம்., பேருந்து நிலையம், காவல் நிலையம் போன்ற இடங்களிடம் வைக்கவேண்டும் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தின் கவலைபோக்க வேண்டும்- பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.