குறிச்சி: கோவையில், 60 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவத்தில், அதிரடி திருப்பமாக, நகையை திருடி நாடகமாடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர். போலீசையே திசைதிருப்பிய பெண்ணின் செயலை பார்த்து, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது வீட்டில் வசிப்பவர் நவநீதகண்ணன். இவரது மனைவி சுப்புத்தாய்,46. கடந்த 17ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சுப்புத்தாயை, இரு வாலிபர்கள், கட்டிப்போட்டு, 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக, போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போத்தனூர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தினார். அப்போது, அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த, 21 சவரன் நகை மற்றும், 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருட்டு போயிருப்பது தெரிந்தது. கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்துக்கு வந்து, கதவு மற்றும் பீரோக்களில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையின் போது, சுப்புத்தாய் சந்தேகமளிக்கும் வகையில் பதிலளித்தார். இதையடுத்து, அவரது நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். மேலும், கைரேகை சோதனை முடிவில், சுப்புத்தாயின் கைரேகையும், பீரோக்களில் பதிந்திருந்த கைரேகையும் ஒத்துப்போனது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சுப்புத்தாயை நேற்று கைது செய்தனர்.
சுப்புத்தாய் போலீசாரிடம் கூறியதாவது: எனது வீட்டு நகைகள் அடமானத்தில் உள்ளன. மகள் கல்லூரியில் படித்து வருகிறாள். கணவர், வேலைக்கு செல்வதில்லை. மகளின் படிப்புச் செலவை சமாளிக்கவும், நகைகளை மீட்கவும் என்ன செய்வதென தெரியாமல் தவித்தேன். அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் பெண், வெளியே செல்லும்போது, அதிகளவு நகைகளை அணிந்து செல்வார். எப்போதும் வீட்டை பூட்டி, சாவியை ஜன்னல் ஓரம் வைத்து செல்வார். சம்பவத்தன்று அவர்கள் மதுரைக்கு சென்று விட்டனர். அவர்களது மகன்களில் ஒருவர் கல்லூரிக்கும், மற்றொருவர் வேலைக்கும் சென்று விட்டனர். அதன் பின், அவர்களது வீட்டு சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவிலிருந்த, 21 பவுன் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் திருடினேன். நகைகளை எனது வீட்டினுள் கொண்டு வந்து வைத்தேன். பின்னர், கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து, என்னை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக, அனைவரையும் நம்ப வைக்க முடிவு செய்தேன். எனது கை, கால்களை, ஒயரால் கட்டிக்கொண்டு, மயங்கி கிடந்ததாக நடித்தேன். போலீசார் விசாரணையை சமாளிக்க தெரியாமல் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு சுப்புத்தாய் தெரிவித்துள்ளார். இதன் பின், சுப்புத்தாயை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், காவலில் வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.