சென்னை: திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், நாய், பூனை, எலி பிடிக்கும் வேட்டை, நேற்று துவங்கியது.
சென்னை, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், இறந்த பச்சிளம் குழந்தையின் கன்னத்தை, எலி கடித்துக் குதறிய விவகாரத்தின் எதிரொலியாக, அரசு மருத்துவமனை வளாகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு முடிவுகளை நேற்று முன்தினம் அறிவித்தார். அவற்றை, மாநகராட்சி சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தும் நடவடிக்கைகளை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் துவக்கி உள்ளன.
வேட்டையில் சிக்கிய 27 நாய்கள்:
முதல்கட்டமாக, தேனாம்பேட்டை மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் 10 பேர், இரு குழுக்களாக, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தை, நேற்று முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவமனை சுற்று வட்டாரப் பகுதிகளில் திரிந்த, 12 நாய்கள் மற்றும் நேற்று முன்தினம் இப்பகுதியில் பிடிபட்ட 15 நாய்கள் உட்பட அனைத்தும், "புளூகிராஸ்' போன்ற தன்னார்வ அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வேட்டையில் ஒரு பூனையும் பிடிபட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள எலி பொந்துகளை கண்டறிந்து, அவற்றில் எலி ஒழிப்பு மருந்துகள் மற்றும் எலி பிடிக்கும் வலைகளை வைக்கும் பணிகளையும், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனை நுழைவாயிலை ஒட்டியிருந்த, உணவகங்கள், டீ கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. ""வளாகத்தில் இருந்த மருத்துவக் கழிவுகள், குப்பை அகற்றப்பட்டுவிட்டன. புதிய கட்டடத்தில் இயங்கிய வந்த இரு டீ கடைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., இளங்கோ தெரிவித்தார்.
இரு வாரங்களுக்கு...:
""மருத்துவமனை வளாகத்தில், உணவகம் இல்லை. எலி ஒழிப்பு மற்றும் நாய் பிடிக்கும் பணிகள் நாளை (இன்று) துவங்குகின்றன,'' என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றில், இப்பணிகள் இன்று துவங்கும் என தெரிகிறது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, ""மண்டல வாரியாக, அரசு மருத்துவமனைகள், காய்கறி, மீன் சந்தைகள் ஆகிய இடங்களில், எலி, பூனை, நாய் வேட்டை, இரு வாரங்களுக்கு தொடரும். பிடிபடும் நாய்களுக்கு, இனவிருத்தி தடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும்,'' என்றார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, பதிலளிக்க, மருத்துவமனை முதல்வர் கனகசபை மறுத்துவிட்டார்.
ஸ்டான்லியில் "தக்காளி பொறி':
ஸ்டான்லி மருத்துவமனையில் எலி பிடிக்கவும், தேன்கூடுகளை களையும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று எலி பிடிக்க மாநகராட்சி சார்பில் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் எலி விஷம் தடவிய தக்காளி மற்றும் தேங்காய் வைக்கப்பட்டது. இவர்களுடன் மருத்துவமனை சுகாதார அதிகாரிகளும் இணைந்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி பணியாற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கூறுகையில், ""எலி விஷம் தடவிய தக்காளி, வளாகத்தின் வெளியே மட்டும் வைக்கப்படுகிறது. இது மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வைப்போம்,'' என்றனர். ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் நேற்று மட்டும் பத்து நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டன. சுகாதார நடவடிக்கையில் அவ்வப்போது ஏற்படும் பின்னடவை தடுக்க, துப்புரவு பணியாளர்கள் தினமும் காலை ஏழு மணி, மதியம் ஒரு மணி மற்றும் மாலை நான்கு முதல் ஐந்து மணி ஆகிய மூன்று நேரங்களிலும் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பணிஏய்ப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும், மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவிலும், தலைமை மருத்துவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தவறாமல் தங்கள் பணியை செய்கிறார்களா என கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்." நாயையும் எலியையும் பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டால் உங்கள் பிரச்னை முடிந்து விடுமா ? நிரந்தரத் தீர்வு என்ன என்று யோசிக்கவே மாட்டீர்களா? கீழிருந்து மேலே வரை தற்காலிக தீர்வுகளிலேயே கவனம் செலுத்தினால் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது எப்போது?
எலிகளுக்கு பொறி வைப்பது போல், ஊழல் பெருச்சாளிகளுக்கும் பொறி வைத்து பிடிக்கும் பணியை அரசு செய்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியது என்றோ ஒருநாள் மனிதனை குதறும் எலிகள் மட்டுமல்ல அன்றாடம் மக்களை குதறி கொள்ளை அடிக்கும் ஊழல் பெருச்சாளிகளும்தான். எலிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுத்த அரசு, ஊழல் பெருச்சாளிகள் விஷயத்திலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மக்கள் நிச்சயம் அரசை பாராட்டி போற்றுவர்....
எல்லா விசயத்திலும் அடி பட்ட பின்னர்தான் புத்தி வருகின்றது. அவரவர் வேலையை ஒழுங்காக செய்தால் இது போன்ற நிலைமை வராது அல்லவா? இதற்கு பொய் எல்லாம் முதல்வர் அறிக்கை விட வேண்டுமா? சுகாதாரத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? நீச்சல் குளத்தில் பையன் விழுந்து இறந்தானே அதற்கு முதல்வர் எந்த விதமான அறிக்கையையும் விடவில்லையே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.