"நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; ரத்து செய்த பிறகே, சபையில் விவாதம் நடத்த வேண்டும்' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ., மற்றும் இடதுசாரிகள், ஏற்கனவே இந்தக் கோரிக்கையை விடுத்து வந்த நிலையில், இப்போது, முலாயம் சிங்கும் வலியுறுத்தியுள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்படுத்தியுள்ள சிக்கல், தொடர்கதையாக மாறி வருகிறது. இப்பிரச்னையை தீவிரமாக கிளப்பி வரும் பா.ஜ., "சுரங்க ஒதுக்கீடு ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவி விலக வேண்டும்; அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டும்; இவை இரண்டும் நடக்காத வரை, பார்லிமென்டை நடத்த விட மாட்டோம்' என, பிடிவாதம் காட்டி வருகிறது.
மசோதாக்கள் நிறைவேற்றம்:
இந்நிலையில், ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பின், பார்லிமென்ட் நேற்று கூடியது. எதிர்பார்த்ததைப் போலவே, லோக்சபா, ராஜ்யசபா என இரண்டுமே, அமளியில் சிக்கித் தவித்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும், லோக்சபாவில் நேற்று, பெரும் அமளிக்கு மத்தியில், மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, வேதியியல் ஆயுதங்கள் வரைமுறை சட்ட மசோதா; மற்றொன்று, "எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய அறிவியல் மருத்துவக் கழகம் தொடர்பான மசோதா. ஏற்கனவே எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஒப்புதல் வாங்கிய பிறகே, இந்த இரண்டு மசோதாக்களையும், சபையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இரண்டுமே, தாமதப்படுத்த முடியாத மசோதாக்கள் என்றும், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவசரம் குறித்து, எதிர்க்கட்சிகளிடம் எடுத்துச் சொல்லி, மத்திய அரசு ஒப்புதல் பெற்றிருந்தது. இதை ஏற்று, இந்த இரண்டு மசோதாக்களுக்கு மட்டும், எதிர்க்கட்சிகள் அனுமதியளித்ததால், பெரும் அமளிக்கு மத்தியில் அவை நிறைவேற்றப்பட்டன. காலையில், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன், நாள் முழுவதற்கும் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவும், மதியம், 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் கூடிய போதும், அமளி காணப்படவே, நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்:
நிலக்கரி ஊழலால், எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே, பார்லிமென்டில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலைமை, இப்போதைக்கு முடிவுக்கு வராது போலவே தெரிகிறது. அதே நேரத்தில், இந்த ஊழல் விவகாரத்தில், நேற்று புதிய திருப்பம் ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மா.கம்யூ., இ.கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி., பார்வர்டு பிளாக் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிஜூ ஜனதா தளத்திற்கும், அ.தி.மு.க.,விற்கும் அழைப்பு அனுப்பப்பட்ட போதும், அந்த கட்சிகள் சார்பில், யாரும் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங் கூறியதாவது: நிலக்கரி சுரங்க முறைகேடுகள் குறித்த, சி.ஏ.ஜி., அறிக்கை, நிறைய குறைகளைச் சொல்லியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ள, 142 நிலக்கரி சுரங்கங்களையும், மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்வதோடு மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான குழு மூலம், விசாரிக்க வேண்டும்; சுதந்திரமான விசாரணை மூலம், உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். இந்தக் குழுவை அமைக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே, பார்லிமென்டில் நிலக்கரி ஊழல் குறித்து விவாதம் நடத்த அனுமதிப்போம். இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.
முலாயம் சிங்கின் இந்த முடிவு, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யும்படி, பா.ஜ., கோரி வரும் நிலையில், இதை இப்போது, முலாயம் சிங்கும் வலியுறுத்த துவங்கியுள்ளார். இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு வரலாம் என, நம்பிக் கொண்டிருந்த காங்கிரசுக்கும், சற்றே பின்னடைவையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இருப்பினும், முலாயம் சிங் மீது, சி.பி.ஐ., வழக்குகள் இருப்பதால், அவரது நிர்பந்தம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அவர் நல்லவர் என்றே வைத்து கொள்வோம், அவர் குற்றவாளியாக உள்ள கேசை பிரதமர் என்ற முறையில் அவரே தலைமை எடுத்து நடத்தி நல்லவர் என்று அவரே சொல்லிக்கொள்வது கொஞ்சம் அபத்தமாக இல்லை???? மேலும் நாட்டின் சகலத்துக்கும் முதன்மையானவர் என்ற முறையில் சாட்சிகளை அளிப்பதும் பாலிசி மாற்றுவதும் மிக மிக சுலபம். - பா ஜ க கேட்பது முற்றிலும் நியாயமானது
காங்கிரசின் கூட்டணியில் இருக்கிற ஒவ்வொரு மாநில கட்சிகளும் அதன் தலைவர்கள், கூட்டணியில் உள்ள மந்திரிகள், எம்.பி.க்கள் என ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு ஊழல் செய்துவிட்டு கம்பி எண்ண வேண்டியவர்களை மந்திரி பதவி கொடுத்து கூட்டணியில் வைத்துக்கொண்டால் இப்படிதான் ஆகும். சில நாள் மிரட்டுவார்கள். பின்னர் கூடி பேசி நீங்கள் என்னை மிரட்டினால் நான் உங்கள் கேஸ்களை நோன்டவேண்டியது இருக்கும் என்று மிரட்டிய பிறகு பிரச்னைகள் சரியாகிவிடும். அப்பேற்பட்ட கருணாநிதியே பெட்டிப் பாம்பாக இருக்கும் போது முலாயம் எல்லாம் காங்கிரசுக்கு எம்மாத்திரம்? விரைவில் அறிக்கை வெளியாகும். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.