நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில், மத்திய அரசுக்கு அளித்து வரும் நெருக்கடியை, கொஞ்சமும் குறைத்துக் கொள்ள, எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து எட்டாவது நாளாக, பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. சில மசோதாக்களை கொண்டு வர, அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், எதிர்க்கட்சிகள் முறியடித்து
விட்டன.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்தது முதல், சில நாட்கள் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றன. நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,), அறிக்கை தாக்கல் செய்த நாள் முதல், நிலைமை முற்றிலும் மாறி விட்டது."நிலக்கரி சுரங்க முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்; சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.இந்நிலையில், நேற்று காலை, சபை துவங்குவதற்கு முன், 10 மணியளவில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் தலைமையில், சில எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தின.பார்லிமென்டின் நுழைவு வாயிலில் நடைபெற்ற, இந்த தர்ணா போராட்டத்தில், பாசுதேவ் ஆச்சார்யா, குருதாஸ்தாஸ் குப்தா, ராஜா, ரங்கராஜன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்களும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும், ரத்து செய்ய வேண்டும்' என்று, கோஷங்கள் எழுப்பினர். போஸ்டர்களை பிடித்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பின், அனைவரும் பார்லிமென்டிற்கு சென்றனர். லோக்சபாவில், 11 மணிக்கு அலுவல்கள் துவங்கியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும், நிலக்கரி சுரங்க ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடத் துவங்கினர். அந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,யான லிங்கம், ஒரு போஸ்டரை பிடித்தபடி, சபாநாயகர் இருக்கை அருகே வந்து, கோஷங்கள் எழுப்பினார்.
அந்த போஸ்டரில், "சபையை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி, புன்முறுவல் பூத்தார்.அமளி கடுமையாக இருக்கவே, வேறுவழியின்றி, சபையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். அதன்பின், மீண்டும் சபை கூடுவதற்கு முன்பாக, இடைப்பட்ட நேரத்தில், முலாயம் சிங் இடத்திற்கு சோனியா சென்றார். அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பேசினார்.அமர்ந்த நிலையிலேயே இருந்த முலாயம் சிங்குடன், இரண்டு நிமிடங்கள் வரை, சோனியா நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பின், சோனியா கிளம்பிச் சென்றார்.
காலை, 10 மணிக்கு, காங்கிரசை எதிர்த்து தர்ணா செய்து, அமர்ந்திருக்கும் முலாயமிடம் போய் சோனியா பேசி, நன்றி சொல்லிவிட்டு வந்த சம்பவம், பிற எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியது.
மீண்டும் நண்பகல், 12 மணிக்கு, சபை கூடிய போது, பா.ஜ., - எம்.பி.,க்கள் மறுபடியும் கோஷங்கள் எழுப்பியதால், கூச்சல் குழப்பமாக இருந்தது. நேற்று முன்தினம் இரண்டு மசோதாக்களை, அமளிக்கு மத்தியிலும் அரசு நிறைவேற்றியிருந்தது. அதேபோல, நேற்றும் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தரப்பினர் முயற்சித்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, அரசு தரப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நாள் முழுவதற்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது; ராஜ்யசபாவும் இதே கதிக்கு ஆளானது.நேற்றைய அமளியில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டபடி நின்றனர். தமிழகத்தில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து கோஷமிட்டனர்.
"நம்பகமான தலைவர் இல்லை':
முலாயம் சிங்கும், மற்ற தலைவர்களும் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து, பிஜூ ஜனதா தளம் தலைவர் ஒருவர் கூறியதாவது:முலாயம் சிங் எப்போதும் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தது இல்லை. அதனால் தான், அவரது அழைப்பை ஏற்று, தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை. எங்களைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கும் ஆதரவில்லை; பா.ஜ.,வுக்கும் ஆதரவில்லை.ஒடிசா மாநிலத்தின் நலன்களுக்கு மட்டுமே, ஆதரவானவர்கள் நாங்கள். ஐந்து சுரங்கங்களை, ஒடிசா மாநில அரசு சிபாரிசு செய்துள்ளது. ஒடிசா மாநில வளர்ச்சியின் கண்ணோட்டத்தில், இந்த சிபாரிசு செய்யப்பட்டது. எனவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க மாட்டோம்.அதே நேரத்தில், பார்லிமென்ட் நடக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், மத்திய அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டும்; இதுவே எங்களது நோக்கம்.இவ்வாறு அந்தத் தலைவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்றைய நிலையில் பிஜேபி கட்சியில் ஒருவர் கூட பார்லிமென்ட் விவாதத்தில் பங்கேற்று பேசும் திறமை இல்லாமல் இருப்பது பெரிய துரதிருஷ்டம். சோம்நாத் சட்டர்ஜி -க்கு அப்புறம் இதுவரை எந்த கம்யூனிஸ்ட் -ம் சரி, எந்த காவியும் சரி ஒருத்தனுக்குக் கூட நேருக்கு நேராக நின்று வாதாடும் திறமை இல்லாமல், "வச்சா குடுமி, சிறைச்சா மொட்டை" என்பது போல விவாதத் திறமை இல்லாமல், பேச்சுத் திறமை என்பதே இல்லாத ஹசாரே கும்ப மாதிரி, "எனக்குக் குச்சி முட்டாய் தான் வேண்டும்" என்று கூமுட்டைத் தனமாய் அடம் பிடிப்பது வறுத்தெடுத்த மொள்ளமாறிகள் பதவிக்காக செய்யும் வேலை.
இந்திய சுரங்க தொழில் அதிகம் விதி மீறல் என இந்திய சட்டங்களால் நசுக்கபடுகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் இந்திய investers அனைவரும் வெளிநாடுகளில், குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் முதலிடு செய்ய நேரிடும். இந்திய பொருளாதாரம் பின்னடைந்து விட இது வழிவகுக்கும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3000 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஆபிரிக்க நாடுகளிலில் நமது இந்திய investers இதுவரை இன்வெஸ்ட்மென்ட் செய்யது இருகிறார்கள். Be Alert Indians , Politicians & officials ............. Save India & Serve India
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்றால் தன்னிச்சையாக எதுவும் செய்வது நல்ல ஜன நாயக மரபாகாது. மேலும் இப்பொழுது இருக்கும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை எதிர்கட்சியாக இருப்பதால் முடிந்த அளவிற்கு அதன் ஆதரவுடன் தான் மசோதாக்கள் இயற்ற வேண்டும். அப்படி செய்தால் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவே நல்ல ஜனநாயகமாக இருக்கும் என்பது எனது கருத்து. ப. மாதவன்.
பார்லிமென்ட்டை தொடர்ந்து முடக்குவது ஒன்றே பாஜக எதிர் கட்சியாக இருந்து செய்து வரும் சாதனை. எந்த விஷயங்களிலும் விவாதங்கள் இல்லை. ஆணித்தரமான கருத்துகள் பதிவு செய்யபடுவது இல்லை. தொடர்ந்து சுமார் 3 1/2 ஆண்டுகள் கூச்சலிடுவது மட்டுமே பாஜக செய்கிறது. இது பாஜக இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம். காங்கிரசின் ஊழல்களை ஆதாரத்தோடு பதிவு செய்யாமல் வெறும் கூச்சலிட்டு இப்படி முடக்குவார்கள் அப்புறம் கூட்ட தொடரின் கடைசி நாளில் எவ்வித விவாதமும் இன்றி சுமார் 50 அல்லது 60 சட்ட மசோதாக்கள் நிறைவேற்ற படும். ஜனநாயக பாராளுமன்ற அமைப்பே பாஜகவால் அவமான படுத்த படுகிறது. உருப்படியான எதிர் கட்சியாக தங்கள் கடமையை ஆற்ற தெரியாதவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்கிறார்கள். CAG அறிக்கை வந்ததும் மட்டுமே தாண்டி குதிக்கும் இந்த எதிர்கட்சியினர் இதுநாள் வரை ஏலம் விடாமல் இலவசமாக நிலக்கரி சுரங்கங்களை கோயில் சுண்டல் போல கொடுத்த காங்கிரஸ் அரசையோ மாநில அரசுகளையோ எதிர்த்து ஒரு வார்த்தையாவது இதற்கு முன்னால் பேசியிருக்கிறார்களா ? இல்லை. இவர்களுக்கு அரசியல் செய்ய பாய்ண்ட்டுகளை கூட CAG இடம் பிச்சையாக பெறுகிறார்கள் இதுதான் இவர்களின் எதிர் கட்சி செயல்பாட்டின் லட்சணம். வெறும் CAG அறிக்கையின் படி பதவி விலக வேண்டும் என்றால் இவர்கள் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் முதலில் பதவி விலக வேண்டும். அதை செய்யாமல் வெறும் கூச்சலும் அநாகரிக போக்கும் தான் பாராளுமன்றத்தில் பாஜக கடைபிடிக்கிறது. இது நல்லதற்கில்லை. இந்த போக்கினால் மக்களின் வெறுப்பை தான் சம்பாதிக்கின்றனர். இந்த வெறுப்பால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காமல் கோட்டை விடவும் வாய்ப்புள்ளது. இதைத்தான் திரு அத்வானி அவர்கள் காங்கிரஸ் அல்லது பிஜேபி அல்லாத ஒரு பிரதமர் தான் ஆட்சியில் அமர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
முலாயம் என்கிற "நரி"..இப்போது குறிவைத்திருப்பது..பிரதமர் பதவி மீது. தனது மகனை பதவியில் அமர்த்தி அழகு பார்க்க..கட்சியின் முக்கிய தலைவராக..முலாயமின் ஒட்டிப்பிறந்த சகோதரன் போல இருந்த "அமர்சிங்கை" கழற்றிவிட்ட "தந்திரம்" பின்னர் மக்களுக்கு புரிந்துபோனது. தனது மகனை மாநிலத்திற்கு முதல்வர் பதவிக்கும்..தன்னை இந்திய அரசியலில் முன்னிலை படுத்தி..இப்போது ஆண்டிகளை ஒன்று சேர்த்து மடம் கட்ட முயல்கின்றார். மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் விசாரணையிலிருந்து தப்பிக்க..காங்கிரசோடு தற்காலிக "தேனிலவு" பயணத்தை மேற்கொண்டார். எதிரும் புதிருமாய் இருக்கும் மாயாவோடு கூட காங்கிரசை ஆதரித்தார்..வெட்கம் துளியுமின்றி.இப்போது மெல்ல மெல்ல பிரதமர் பதவியை நோக்கி அடியெடுத்து வைக்கின்றார். மாநிலத்தில் செல்வாக்கை திசை திருப்பி..பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரசின் தயவு வேண்டி..இப்போதிருந்தே..காய் நகர்த்த துவங்குகின்றார். ஆனால் பா.ஜ.காவின் வெற்றியை இவர் அறியாமல் காங்கிரசின் கேவலமான தோல்வியை அறியாமல் அரிவாளோடும்..தெ தேச நாயுடுவோடும் உறவாடுகின்றார். ஆசைதான்..ஆனாலும் திறமை இல்லையே..திமுக தலைவரை போல பதவி ஆசையில் அலைகின்றார். பாவம் இவரையும் திண்ணையில் உட்காரவைப்பது அறியாமல்..முலாயம்..நரி தந்திரம்..வாலறுபட்டு ஓடிப்போகும் நரிபோலவே இருப்பார். வடநாட்டு கருணா இவர்..மகனை முன்னிறுத்துவதிலும்..ஊழல் செய்வதிலேயும்..இறுதியில்..திண்ணை பதவிதான்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.