ஈரோடு:டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய, முக்கிய புள்ளியான பாலனிடம் இருந்து, பல்வேறு நபர்களின், ஹால் டிக்கெட் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், முந்தைய தேர்வுகள் ரத்தாகுமோ என, தேர்வு எழுதியவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12ம் தேதி நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில், ஈரோடு, அரூர் மையங்களில், வினாத்தாள் வெளியானது. ஈரோடு போலீசார் விசாரித்து, 10 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான, பாலன் என்ற ஸ்ரீதர்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் தியாகராஜனிடம், 14 லட்சம் ரூபாய் கொடுத்து, வினாத்தாள் நகல் வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். தியாகராஜனிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த ராவ் என்பவரிடம் இருந்து, நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து, வினாத்தாள் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தனிப்படை போலீசார், ஒரு வாரத்துக்கும் மேலாக, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் முகாமிட்டு, அவரைப் பிடிக்க, தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வின் போது, கடலூர் மாவட்டத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம் விடைகள் பரவியதாக, புகார் கூறப்பட்டது. தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால், தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அதன் பின் நடந்த குரூப்-4 தேர்வின் போதும், வினாத்தாள் வெளியானதற்கு ஆதாரங்கள் எதுவும் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றொருவரான சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர், எஸ்.எஸ்.எல்.சி., வரை மட்டுமே படித்துள்ளார். குரூப்-4 தேர்வுக்கான, வினாத்தாளுக்காக பாலனிடம், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். வினாத்தாள் கிடைக்காததால், அவர் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். பணம் திருப்பித் தராமல், குரூப்-2 தேர்வு எழுதும் யாராவது ஒருவரை, இணைத்து விட்டு, பணத்தை வாங்கிக் கொள்ளும்படி பாலன் தெரிவித்துள்ளார். தற்போது, பாலனிடம் இருந்து, பலரது ஹால் டிக்கெட்டுகள், சான்றிதழ் என, 10க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால், முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். குரூப்-2 தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள், தேர்வு ரத்தாகுமா என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த, 2011ல் நடந்த வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வுகளில் தான், அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிந்து வருகின்றனர். குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத்தேர்வு முடிந்து, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டு, பணி நியமன ஆணைக்காக காத்திருந்தாலும், ஏற்கனவே பணியில் சேர்ந்திருந்தாலும், அவர்கள் மீது, டி.என்.பி.எஸ்.சி., கடுமையான நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மாநில அளவில் ஐந்தாமிடம்:
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் வெளியான முறைகேட்டில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பாலன், கடந்த ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வை எழுதி, அதில் மாநில அளவில் ஐந்தாமிடம் பெற்றுள்ளார். அதன் பின் நேர்முகத்தேர்வையும் அவர் முடித்துள்ள விவரம், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மற்றவர்களுக்கு வினாத்தாளை விற்பனை செய்தது போக, தானே அரசு பதவியில் அமர வேண்டும் என்பதற்காக, பாலன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வை எழுதியுள்ளது, போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.