சென்னை:இலங்கை விளையாட்டு வீரர்களை, நேரு விளையாட்டு அரங்கில், கால்பந்து விளையாட அனுமதி அளித்த அதிகாரியை, தற்காலிக பணி நீக்கம் செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும், தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து, இலங்கை மீது, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் மீது, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும், இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராணுவ பயிற்சி:
சமீபத்தில், இரு இலங்கை ராணுவ வீரர்களுக்கு, வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்து, அவர்களை உடனே இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று, நான் வலியுறுத்தினேன். ஒட்டு மொத்த தமிழகமும், இதே கோரிக்கையை விடுத்தது.ஆனால், மத்திய அரசு, அதற்கு மதிப்பளிக்கவில்லை. மாறாக, "இது போன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது' என, மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார்.இச்சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த, கால்பந்து விளையாட்டு வீரர்கள், கால்பந்து விளையாட்டில், தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள, நட்பு ரீதியிலான போட்டிகளில், பங்கேற்க தமிழகம் வர, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது, தமிழக மக்களை, அவமானப்படுத்தும் செயலாகும். இதற்கு, எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற, சென்னையில் உள்ள, பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை, "ராயல் காலேஜ் ஆப் கொலம்போ' நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன், நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட, ஏற்பாடு செய்யுமாறு, கேட்டுக் கொண்டுள்ளது.பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலர், அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். கடந்த மாதம், 30ம் தேதியன்று, தமிழகம் வந்த இலங்கை விளையாட்டு வீரர்கள், 31ம் தேதியன்று, சென்னை சுங்க இலாகா அணியுடன், நேரு விளையாட்டு அரங்கில், விளையாடி உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.
அதிகாரம் இல்லை :
இதை அறிந்த நான், இது குறித்து, முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டேன். அந்த விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர், நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்த, நேரு விளையாட்டு அரங்கின் பொறுப்பு அதிகாரியை அணுகி உள்ளார். அதன்படி, நேரு விளையாட்டு அரங்கின் பொறுப்பு அதிகாரி, விளையாட்டுப் போட்டிகளுக்கு, அரங்கத்தை பயன்படுத்த, வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது. நேரு விளையாட்டு அரங்கில், விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க, அரங்க அதிகாரிக்கு, எவ்வித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தான், இந்த அதிகாரம் உள்ளது. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை விளையாட்டு வீரர்களை, நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம், தமிழக மக்களின் உணர்வுகளை, அந்த அதிகாரி, கொச்சைப்படுத்தி உள்ளார்.
உடனே திருப்பி அனுப்ப...:
எனவே, இந்த அதிகாரியை, தற்காலிக பணிநீக்கம் செய்து, துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செய லருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக, எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என, நான் உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கால்பந்து வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் உத்தரவிட்டுள்ளேன்.இதேபோன்று, வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியுடன், கால்பந்து போட்டி விளையாட, சென்னை வந்த இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த, "ஹில்பர்ன் இன்டர்நேஷனல்' பள்ளியின் எட்டு மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரையும், திருப்பி அனுப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக முதல்வரின் நடவடிக்கை கேலிக்குறியது. அவருக்கு முடியுமானால் IPL சென்னை அணிக்காக விளையாடும் இலங்கை விரர்களை தடுத்து பார்க்கட்டும். பாக். விரர்களுகு IPL தடையுள்ளது போல் முடியுமானால் இலங்கை வீரர்களுக்கு சென்னை அணியிலாவது முதல்வரால் செய்யமுடிந்தால் அப்போது அவர் பாராட்டுக்குரியவர். அதைவிட்டு செத்த பாம்பினை அடித்த இச்செயல் அரசியல் நாடகத்தில் நகைப்புக்குறிய அத்தியாயம் மட்டுமே...
நம்ம கால்பந்து அணி, பிரேசிலுக்கு அடுத்தபடியா ரெண்டாவதோ மூணாவதோ இடத்துல இருக்காங்க. உலகத்தரம் (??) வாய்ந்த நம்ம வசதிகளை பயன்படுத்தி லங்காக்காரனுங்க பிண்ணி எடுக்கப் போறானுங்க. சும்மா இருங்க மேடம். சாதாரண "துப்பட்டா" பசங்க வருகையை உலகுக்கெல்லாம் கூவி அறிவிக்கும் தேவையற்ற வேலையை, தலைவர் மாதிரி நீங்களும் செய்யாதீங்க. இது எதிரிக்கு செய்யும் தேவையற்ற விளம்பரம். இதனால் எதிரி மேலும் மேலும் வலுப்பெருவதாகவே எனக்குப் படுகிறது. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று தெரியாமல், மத்த தமிழ் காவலர்களைப் போல, நீங்களும் கண்ட இடத்திலும் அடிக்காதீங்க. முட்டியை உயர்த்தாமல் மூளையை உயர்த்துங்க. நீங்க சொன்னா அப்படியே நடக்கிற (??) காலம் வரும். அப்ப மாறாம, மறந்துடாம இப்ப சொல்றதுக்கும் மேல செய்யுங்க.
இது சரியானதுதான், ஆனால் ஈழம் விசயத்தில் admk நிலைப்பாடு தெளிவாக இல்லையே. dmk கும்பல் துரோகம் செய்துவிட்டு இப்போது நாடகம் போட்டு பார்க்கின்றார்கள். அதனால் ஜெயா அவர்கள் தெளிவு பட அதை அறிவிக்க வேண்டும். ஒன்று ஆதரிப்போம் அல்லது இல்லை என்று. அதுதான் இப்பொது முக்கியம். ஒருவேளை காங் admk 2014 தேர்தலுகுபின் பாராளுமன்றத்தில் கூட்டு வைக்க தேவை என்று நினைகிறாரா. தமிழ் மக்களை அதிகமாக ஆதரிக்க வேண்டும். அதைத்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள். இல்லாவிட்டால் கருணாவின் துரோகத்தின் தொடர்ச்சி ஆகிவிடும். எனவே தமிழ் ஈழத்தை வெளிபடையாக தீவிரமாக ஆதரித்து ஜெயா அவர்கள் செயல்படவேண்டும்.
இலங்கைத்தமிழர்களுக்கு நமது முழு ஆதரவு தர வேண்டும். ஆனால், தமிழகம் அந்த நாட்டுக்கு செய்யும் தடைகளை இலங்கைத்தமிழர்கள் ஆதரிக்கின்றார்களா ? நாமாக ஒரு முடிவு தனியாக எடுத்துக்கொண்டு அதை திணிப்பது யாருக்கும் நல்லதல்ல. இது, அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் மேலும் தீங்கும், பிரிவினையையும் தான் ஏற்படுத்தும். நாம் எந்த உதவியும் செய்ய விருப்பமற்று உதறினால் அவர்களுக்கு உதவிகள் வழங்க சீன நாடு எப்போ எப்போ என்று காத்திருக்கின்றது. சென்ற வாரம் சீன அயல்நாட்டு மந்திரி ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார். இதை சண்டை களத்திலேயே திரு ராஜபட்சேயும் "இந்தியா இல்லை என்றால் பாகிஸ்தானோ, சீனாவோ எங்களுக்கு உதவ தயாராக இருக்கின்றது" என்று கூறி வுள்ளார். நமது மிரட்டல் அவர்களை நம் காலில் விழவைக்கும் என்று நினைக்கின்றீர்களா ? நமது செயல், நாமே அந்த அண்டை நாட்டை நமது எதிரி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்பதை உணருவோம்...
அம்மா செய்தது முற்றிலும் சரியே, எங்களாலும் இதுவும் முடியும் என்பதற்கு இது ஒரு சாம்பிள். ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை தமிழர்கள் அத்துனை பேரும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும். புத்தம், சரணம், கச்சாமின்னு சொல்ல வேண்டியவன், யுத்தம், சரணம், கச்சாமின்னு சொன்னான். இதேயே தான் மியான்மரில் செய்து கொண்டு இருக்கிறார்கள். யுத்தத்துறவிகள்.
நாட்டின் சில சட்ட திட்டங்கள், இரு நாடுகளின் உடன்படிக்கைகள் கூடவா ஒரு முதல்வருக்கு தெரியாது ?... அந்த உடன்படிக்கையின்படி தான் வீரர்கள் வந்திருப்பார்கள் .....அதை வேண்டாம் என மறுக்க தமிழ் நாட்டிற்கு உரிமை உள்ளதே தவிர ,,,அதனால் இவருக்கு தண்டனை அளித்தது செல்லாது ....... வேறு வழி என்ன என்று யோசிங்க ...ஈழ தமிழனின் கண்ணீரை இப்படி துடைக்க நடிக்க வேண்டாம் .....மக்களிடம் கபட நாடகம் ஆடவேண்டாம் .....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.