சென்னை:கடலுக்குள் போகும் வழியை அடைத்து, நில அபகரிப்பு செய்துள்ளதாக, நளினி சிதம்பரம் மீது, கமிஷனர் அலுவலகத்தில், மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர். "20 ஆண்டுகளாக, நிலத்தை பயன்பாட்டில் வைத்துள்ளோம்; நிலத்திற்கான ஆவணங்கள் இருக்கின்றன' என, நளினி சிதம்பரம் தரப்பில், போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு கிராம ஊராட்சி, கரிக்காட்டுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆர்ப்பாட்டம்:
நில அபகரிப்பில் ஈடுபட்ட, மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.போலீசார், மீனவர்களை சமாதானப்படுத்தினர். நில அபகரிப்பு தொடர்பான புகார் மனு ஒன்றை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
தென்னிந்திய மீனவர் பேரவையின் தலைவர், ஜெயபாளையன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம், கரிக்காட்டுக்குப்பத்தில், மீனவர்கள் கடலுக்குள் போகும் வழியை அடைத்து, கடலுக்குள் செல்ல விடாமல், நளினி சிதரம்பரம், கார்த்தி சிதம்பரம் காம்பவுண்ட் கட்டி வருகின்றனர்.தென்னிந்திய மீனவர் பேரவையின் சார்பில், மீனவர்களுக்கான பிரச்னைகளை தீர்க்கக் கோரி, காஞ்சிபுரம் கலெக்டரிடம், கடந்த மாதம், 24ம் தேதி மனு கொடுத்தோம். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முதல்வர் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பிய புகார் மனுவில், "கடற்கரையை ஒட்டி, காம்பவுண்ட் சுவர் கட்டக் கூடாது' என்ற விதியை சுட்டிக் காட்டி, மனு அனுப்பியுள்ளோம்.பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த புறம்போக்கு, மேய்ச்சல் நிலம், கிராம நத்தம் போன்றவற்றையும் ஆக்கிரமித்துள் ளனர். இது தவிர, யாரும் உரிமை கோராத, மூன்று ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.
ஆற்றோரத்தில் மண்ணை கொட்டி வைத்துள்ளனர். இதனால், மீனவர்கள் வலை மற்றும் மீன்களை காய வைக்க முடியவில்லை. கடற்கரையை ஒட்டி, 3 கி.மீ., தூரத்திற்கு, சிறிய இடைவெளியில் காம்பவுண்ட் சுவர் கட்டுகின்றனர்.இதனால், கடற்கரையோரம் படகுகளை நிறுத்த இடமில்லை. சுனாமி போன்ற அசம்பாவிதம் ஏற்படும் போது, மீனவர்கள் தப்பி ஓடுவதற்கு, இடமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.ஆக்கிரமிப்பு நிலத்தை, தனியார் ஓட்டலுக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயபாளையன் கூறினார்.
நளினி சிதம்பரத்தின் வழக்கறிஞர், என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் மனு அளித்தார்.
அவர், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:மீனவர்கள் புகார் கூறிய நிலத்திற்கான ஆவணங்கள், எங்களிடம் உள்ளன. அந்நிலம், கடந்த, 20 ஆண்டுகளாக, நளினி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.சுனாமி பாதிப்பிற்கு பிறகு, மீனவர்களுக்கு, சிறிய வீடுகளை அரசு கட்டிக் கொடுத்தது. அதில், மீனவர்களின் வீடுகளில் உள்ள கழிப்பறை தண்ணீரை தேக்கி வைக்க, கான்கிரீட் தொட்டிகள் கட்டப்படவில்லை.எங்களது நிலத்தில், ஒரு பெரிய குழி தோண்டி, அதில் கழிவு நீரை தேக்கினர். அது தவிர, எங்கள் நிலத்தில், திறந்த வெளியில் மனித கழிவுகளை கொட்டினர். இதனால், சுற்றுப்புற சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
பொதுநல வழக்கு
இது குறித்து, ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தோம். இந்த விவகாரத்தில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எங்கள் நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை, மீனவர்கள் சிலர், பள்ளம் தோண்டி சேதப்படுத்தினர். இது குறித்து, கானாத்தூர் போலீசில், எங்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு பதிவாகியுள்ளது.நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான நில அபகரிப்பு புகாரின் பின்னணியில் உள்ள நிலத்திற்கான ஆவணங்களை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம்.அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை, சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.இவ்வாறு, என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் கூறினார்.
விசாரணை
இரு தரப்பு புகார் மனுக்களும், மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, தென் சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டன. பிரச்னைக்குரிய நிலத்தை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் சுதாகர், நேற்று மாலை பார்வையிட்டு, மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"20 ஆண்டுகளாக, நிலத்தை பயன்பாட்டில் வைத்துள்ளோம் நிலத்திற்கான ஆவணங்கள் இருக்கின்றன" - அப்படி என்றால் புறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டு வரி செலுத்தி உள்ளாரா? யாரிடமும் வாங்கவில்லையா? ஒரு மெத்தப்படித்த மேதாவியே புறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டுள்ளாரா? மண்ணாசை மனிதனுக்கு வேண்டும் - ஆனால் இந்த அளவுக்கு வரக்கூடாது.
இந்த வழக்கின் தன்மையை பார்க்கும் போது தவறான வழக்கு போலவே தெரிகிறது... மீனவ குப்பங்கள் அவ்வளவு ஈசியாக எதையும் அனுமதிக்க மாட்டார்கள்...அப்படியிர்க்கும் போது இவ்வளவு வருடம் எப்படி சும்மா இருந்தார்கள் என்பது கேள்விகுறி ? என்றாலும் வழக்கு என்ற ஓன்று வந்து விட்டால் சிதம்பரம் என்ன? திருப்பதியானாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும்... தவறு சிதம்பரம் தரப்பு செய்திருந்தால் நளினி / கார்த்திக் உள்ளே ... சிதம்பரம் மந்திரிசபைக்கு வெளியே.... ஆனால் ஸ்டாலின் போல , கோர்டுக்கு வெளியே சமரசம் ஆகிவிட்டோம் என்று , மக்களை கடைசியில் முட்டாளாக்க கூடாது...
நளினி அம்மாவுக்கு பொன் மேல மண் மேல ஆசை. சீமானுக்கு இந்த பொண்ணு மேல ஆசை. மகனும் இந்த வாழ்க்கை முறைக்கு மாறுபட்டவன் இல்லை. சீமானிடம் பதவி அதிகாரம், நளினி அம்மாவிடம் சட்டத்தை இருட்டறை ஆக்கும் திறமை உள்ளது, மகனிடம் என்ன இந்த இரு சக்திய வச்சு எப்படி குளிர் காயணும் என்கிற வித்தை தெரிஞ்சவன். ஆதலால் இந்த கேசுல ஒன்னும் பெரிய சிதம்பர ரகசியம் இல்லை. மக்களுக்கு என்ன இது ஒரு புதிய பயாஸ்கோப் படம். கொஞ்ச நாளைக்கு ஓட்டலாம். மெத்த படிச்சவன் இந்த மாதிரி போனால் அவனுக்கு பெயரு தான் Intelectual crook. இந்த குடும்பமும் அப்படி தான்.
ஜெயலலிதா நல்ல ஆட்சி கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் எதிரிகளை பழி வாங்க நில அபகரிப்பு வழக்குகளை கையில் எடுப்பது நில அபகரிப்பில் இது வரை எடுத்த நடவடிக்கைகள் மீது சந்தேகம் வரச்செய்யும். சசிகலா குடும்பம் பல தவறுகளை செய்தாலும், அவர்களை நில அபகரிப்பில் உள்ளே தள்ளியது மிகத்தவறாகும். அரசியல் உள் நோக்கத்துடம் அவர்களை அடக்க செய்யப்பட்ட ஒன்று. அதே போல், சிதம்பரம் மீது, சுவாமி, பி.ஜே.பி, அம்மாவின் கட்சிகள் எதாவது செய்து மாட்டி விடப்பார்க்கின்றன. இப்பத்தான் சுவாமி முகத்தில் கரியை பூசிக்கொண்டார். அம்மாவுக்கு அது வேண்டாமே?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.