திருப்பூர்:திருப்பூரில், கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர், போலீஸ் காவலில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, நாள் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், 60 அடி ரோடு, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி,61. கடந்த, 31ம் தேதி, "வாக்கிங்' சென்று, காலை 7.30 மணிக்கு, வீட்டுக்குள் நுழைந்தபோது, அடையாளம் தெரியாத சிலர், அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்து தப்பினர்.
திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்துக்குரிய, ஆறு பேரிடம், மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.பழனிச்சாமி வீட்டில் குடியிருந்த மோகன்ராஜ்,31, என்பவர், நேற்று முன்தினம் இரவு, போலீஸ் விசாரணையின் போது இறந்தார். அவர் உடல், அன்றிரவு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இறந்த மோகன்ராஜ், கொலைச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே, பழனிச்சாமி வீட்டிலிருந்து காலி செய்துள்ளார். செல்வலட்சுமி நகரில், "செகண்ட்ஸ்' பனியன் வியாபாரம் செய்து வந்தார்; அவருக்கு, கீதா,27, என்ற மனைவியும், ரேணுகா,1, என்ற குழந்தையும் உள்ளனர். மோகன்ராஜ் இறந்த தகவல், அவர் குடும்பத்தாருக்கு, நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
இத்தகவல், அப்பகுதி முழுவதும் பரவியது. "செகண்ட்ஸ்' பனியன் வியாபாரிகள், தேவாங்க சமூக சங்கத்தினர், பொதுமக்கள் திரண்டனர். பி.என்., ரோடு, நெசவாளர் காலனி அருகே, பிளக்ஸ் பேனர்களுடன், நேற்று காலை, 9.00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். உதவி எஸ்.பி., மற்றும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். திருப்பூர் தாசில்தார் மோகன் உட்பட அதிகாரிகள், பேச்சு நடத்தினர்.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசாரை, "சஸ்பெண்ட்' செய்வதாகவும், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு வழக்கை மாற்றுவதாகவும், உறுதி அளித்தனர்.
இருப்பினும், மோகன்ராஜ் மரணம் குறித்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்; தொடர்புடைய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும்; மோகன்ராஜ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வழக்கு தொடர்பாக போலீசார் அழைத்துச் சென்ற, மேலும் ஐந்து பேரை விடுவிக்க வேண்டும் என, மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பதற்ற சூழல் உருவானதால், அதிரடி படை, ஆயுத படை போலீசார் நிறுத்தப்பட்டனர். சுற்றுப் பகுதி கடைகள் அடைக்கப்பட்டன; வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.
போலீசார் கூறுகையில், "வாலிபர் இறப்பு குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் இரண்டு போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர். வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்படும்,'' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.