லஞ்ச குற்றச்சாட்டின்படி பணி நீக்கம்: பெண் மாஜிஸ்திரேட் மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச குற்றச்சாட்டின்படி பணி நீக்கம்: பெண் மாஜிஸ்திரேட் மனு தள்ளுபடி

Added : ஆக 08, 2010 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.


பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்தார். அதை ஏற்காமல், குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த ஐகோர்ட் பதிவுத் துறை உத்தரவிட்டது. குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து, விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார். கடைசியில், பணியில் இருந்து கலாராணி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவு, 2007ம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் கலாராணி மனு தாக்கல் செய்தார். மனுவில், "பொய் வழக்கு போட்டதற்காக, போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். அதனால் போலீஸ், உதவி அரசு வக்கீல், புகார் கொடுத்தவரின் தந்தை, எனக்கு எதிராக பகைமை கொண்டிருந்தனர்.


"முதலில் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதாக புகாரில் கூறப்பட்டது. பின், இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாக மாற்றியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. புகார் கொடுத்தவரிடம் எனக்கு அறிமுகம் கிடையாது' என கூறியுள்ளார். மனுவை நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்காக வக்கீல் ஜீனசேனன், தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் தேசிங்கு ஆஜராகினர்.


"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தன்னிடம் நிலுவையில் உள்ள வழக்கு பற்றி மனுதாரருக்கு நன்கு தெரியும். புகார் கொடுத்தவரின் தந்தை தான் முதல் சாட்சி. ஒரு நாள் மட்டும் தற்காலிக விடுப்புக்கு மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். முந்தைய இரண்டு நாட்களும் விடுமுறை தினம். பணியை முடித்துக் கொண்டு, திண்டுக்கலில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, மதுரைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், மறுநாள் கொடைக்கானலுக்கு காரில் கணவர், குழந்தையுடன் சென்றுள்ளார். மறுநாள், குரியன் ஆபிரகாம் (கொடைக்கானல் நகராட்சி முன்னாள் தலைவர்) வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லஞ்ச நடவடிக்கையில் மனுதாரருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.


நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.


விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


Advertisement