DISTRICT NEWS | சீமாறு புல் பறிப்பதிலும் அரசியல் தலையீடுபர்கூர் பகுதி மலைவாழ் மக்கள் குமுறல்| Dinamalar

தமிழ்நாடு

சீமாறு புல் பறிப்பதிலும் அரசியல் தலையீடுபர்கூர் பகுதி மலைவாழ் மக்கள் குமுறல்

Added : அக் 28, 2012

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, பர்கூர் மலையில், சீமாறு புல் பறிப்பதிலும், அரசியல் தலையீடு இருப்பதாக, மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.
பவானி தாலுகா, பர்கூர் மலை, கடம்பூர் மலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மலைப்பகுதிகளில் சோளகா, ஊராளி, மலையாளி இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.மலைவாழ் மக்களின் நலன் கருதி, கடந்த, 2006ல் சிறு வனப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்திட, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால், பர்கூர், கடம்பூர், தாளவாடி வனப்பகுதியில் விளையும் கடுக்காய், நெல்லிக்காய், பூச்சிக்கெட்டிக்காய், சுண்டைக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.அரசின் நேரடி பார்வை, வனத்துறையின் போதிய கண்காணிப்பு இல்லாததால் பல்வேறு பிரச்னைகளால், மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பர்கூர் மலைப்பகுதியில் சீமாறு புல் பறிப்பதிலும், அரசியல் தலையீடு இருப்பதால், சீமாறு வியாபாரம் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

பர்கூர் மலைப்பகுதி மக்கள் கூறியதாவது:பவானி தாலுகாவில் உள்ள பர்கூர் மலையில், செங்காடை மலை, சோளகா மலை, செங்குளம் மலை, தாமரைக்கரை மலை, தேவர்மலை, வெள்ளிமலை, கத்தரி மலை உள்ளிட்ட மலைப்பகுதியில், 8,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.பர்கூர் மலையில் கிடைக்கும் சிறு வனப் பொருட்களை விற்பனை செய்து, மலைவாழ் மக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். காக்காயனூர், போலி வனப்பகுதியில், 2,000 ஏக்கரில் விளைந்துள்ள சீமாறு புல்லை பறித்து, அதனை ஒன்று சேர்த்து, ஈரோடு மற்றும் பவானி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், சீமாறு புல் பறிப்பதில் தலையிட்டு வருகின்றனர். மலைவாழ் மக்களை கொண்டே, சீமாறு புல்லை பிடுங்க வைத்து, அவர்களுக்கு குறைவான கூலியை கொடுத்து, எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சீமாறு வியாபாரம் செய்ய முடியாமல், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. அரசியல் பிரமுகர்களிடமிருந்து, மலைவாழ் மக்களை காக்க, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X