சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்னை வரும் 2013ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மின்வெட்டு பிரச்னை குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரிவான பதில் அளித்து பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த தி.மு.க., ஆட்சியும், மத்திய அரசுமே காரணம் என்று கூறினார். தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மின்திட்டங்கள் மூலம் வரும் 2013ம் ஆண்டு இறுதிக்குள் 4300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வல்லூர், வடசென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டு வரும் மின் திட்டங்கள் செயல்படத்துவங்கும் போது மின் பிரச்னை குறையத் துவங்கும் என்று தெரிவித்துள்ள அவர், கூடங்குளத்தில் 925 மெகாவாட் மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையம் மூ,லம் 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, தமிழகத்தின் மின்பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் கூறினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் மிகக்குறைந்த அளவே மின்சார உற்பத்திக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டதாகவும், மத்திய அரசும் தமிழகத்தின் மின் பிரச்னையை தீர்க்க தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.