கரூர்: "அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை சொல்லி, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்தும் கட்ட பஞ்சாயத்தால், வரும் லோக்சபா தேர்தலில், கரூர் மாவட்டத்தில் தோல்வியை தழுவும் நிலை ஏற்படும்' என, கரூர் மாவட்ட, அ.தி.மு.க.,வினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
கரூர் மாவட்ட முன்னாள், அ.தி.மு.க., செயலர் சின்னசாமி மூலம், செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் இணைந்தார். மாணவரணி மாநில செயலர் கலைராஜன் மூலம், மாவட்ட மாணவரணி செயலர் பதவியை பெற்றார். தி.மு.க., ஆட்சியின் போது, அரசுக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தி, கட்சி தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இதனால், சின்னசாமியை மாவட்ட செயலர் பதவியிலிருந்து நீக்கி, செந்தில் பாலாஜியை நியமித்தனர். அதன்பின், அவருக்கு ஏறுமுகமாகவே அமைந்தது.
எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற அவருக்கு, கொங்கு வெள்ளாள கவுண்டர் என்ற ஜாதி அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
"அமைச்சரானதிலிருந்து கட்சியினரை கண்டு கொள்வதில்லை. தன் சொந்த, பந்தங்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார். அமைச்சர் பெயரை சொல்லி, அவர் தம்பி அசோக் ஆதரவாளர்கள் நடத்தும் கட்ட பஞ்சாயத்துக்கு அளவேயில்லை. இதனால், வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என, கரூர் மாவட்ட, அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, கரூர் அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர் கூறியதாவது:செந்தில் பாலாஜி கட்சியில் வளரத் துவங்கியதிலிருந்தே, மூத்த நிர்வாகிகள் பலரை ஓரம் கட்டினார். அவரது நெருக்கடியால் தான், முன்னாள் மாவட்ட செயலர் சின்னசாமி, தி.மு.க.,வுக்கு தாவினார். முன்னாள் மாவட்ட செயலர்கள் வடிவேலு, சாகுல் அமீது, ராஜா பழனிசாமி, ஜெ., பேரவை மாவட்ட செயலர் நாகராஜன் போன்றோர் ஓரம் கட்டப்பட்டனர்.
நகராட்சி துணை தலைவராக உள்ள காளியப்பன், அமைச்சருக்கு தேவையான அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார். நகராட்சி, பொதுப்பணித் துறை என, அனைத்து அரசுத் துறையிலும் டெண்டர் எடுப்பதாக இருந்தால், முன்தொகையாக, 7.5 சதவீதம் அமைச்சர் தம்பி தரப்புக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
அதே போல, கரூர் மாவட்டத்தில் பஸ் பாடிகட்டும் தொழில் பிரபலம். அரசு பஸ்களுக்கு பாடி கட்டுவதாக இருந்தால், அதற்கு தேவையான மரச்சாமான்கள், கரூர் காமராஜர் ரோட்டிலுள்ள, ஒரு குறிப்பிட்ட பிளைவுட்ஸ் கடையில் தான் வாங்க வேண்டும் என, வாய்மொழி உத்தரவு உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் கட்டணக் கழிப்பிடம், காமராஜர் காய்கறி மார்க்கெட், டாஸ்மாக் பார் என, அனைத்தும், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கையில் தான் உள்ளது. அமைச்சர் பெயரை சொல்லி, போலீஸ் ஸ்டேஷனிலும், அரசு அலுவலகங் களிலும் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அளவேயில்லை. அதேபோல, நிலம் தொடர்பான பிரச்னைகளில், அதிகளவு தலையீடு உள்ளது.
அனைத்தையும் அமைச்சரின் தம்பி அசோக் கவனித்துக் கொள்கிறார். கடந்த தி.மு.க., ஆட்சியில் அந்தந்த மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக செயல்பட்டதால் தான், அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது; அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினர் போலவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி நடவடிக்கை அமைந்துள்ளது. இதேநிலை நீடித்தால், வரும் லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது சந்தேகம் தான். அதற்கு முன், கரூர் மாவட்ட அ.தி.மு.க.,வில் மாற்றம் நிகழ்ந்தால் தான், தொகுதியை கைப்பற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
"சின்ன ராமஜெயம்': திருச்சி மாவட்ட, தி.மு.க., செயலர் நேருவின் தம்பி ராமஜெயம், மறைமுக மாவட்ட செயலராகவே இயங்கி வந்தார். தொழில், அரசியல் அனைத்து விஷயங்களிலும், அவரது தலையீடு இருந்தது. கட்சி தலைமையிடம், அதிக செல்வாக்கோடு இருந்தார். அதே போல் தான், தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் செயல்படுகிறார் என்று கூறும் கரூர் வாசிகள், அவரை, "சின்ன ராமஜெயம், கரூர் ராமஜெயம்' என அழைக்கின்றனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை சொல்லி, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்தும் கட்ட பஞ்சாயத்தால், வரும் லோக்சபா தேர்தலில், கரூர் மாவட்டத்தில் தோல்வியை தழுவும் நிலை ஏற்படும்' என்று கூறியுள்ளீர்கள். கொங்கு மண்டல மாவட்டங்களில் விசைத்தறிதான் முக்கிய தொழிலாகும். ஆனால், மின்வெட்டினால் இன்று அந்தப் பகுதிகள் முழுவதும் தொழில் பாதிக்கப்பட்டு விசைத்தறி முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் லோக் சபா தேர்தலில் கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறுவது கடினம்.
ஓராண்டை தாண்டிய இந்த இருண்ட ஆட்சி இன்று வரை மின்சாரத்திற்காக ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை.. தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்பதே தெரியவில்லை.. மேலும், செந்தில் பாலாஜி தம்பி அசோக் அடிக்கும் கொள்ளையில் பாட்டிக்கும் பங்கு கொடுக்காமல் இல்லை,,, அதனால் இப்போதைக்கு இப்படிதான் போகும், ராம ஜெயத்துக்கு கெடச்ச சம்பளம் அசோக்குக்கு கெடக்க நேரம் ஆகாது,, சேத்த பணத்துல ஒரு வாய் சோறுகூட சாப்பிடமுடியாம போகும்போது புரிய வரும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.