திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவராக ஜெயக்கொடி (அ.தி.மு.க.,) உள்ளார். இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க.,வில் சிலரும், தி.முக.,வினரும் முயற்சி எடுத்துள்ளனர். மொத்தம், அ.தி.மு.க., 12, தி.மு.க., ஆறு என, 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், ஏழு அ.தி.மு.க., கவுன்சிலர்களும், தி.மு.க,வைச் சேர்ந்த, ஆறு கவுன்சிலர்களும், தலைவர் ஜெயக்கொடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, டி.ஆர்.ஓ., மனோகரனிடம் மனு தந்தனர். பழனிச்சாமி தலைமையில்,
அ.தி.மு.க.,வினர் தந்த மனு: ஒன்றியத்தில் அரசு திட்டங்களில் முறைகேடு நடக்கிறது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
ராஜாமணி தலைமையில் தி.மு.க.,வினர் தந்த மனு: ஒன்றியத்திற்கு யார் தலைவர் என்று தெரியவில்லை. ஜெயக்கொடியின் கணவர், மகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜ்மோகன் தலைவர்களாக செயல்படுகின்றனர். மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.