மத்திய அரசுக்கு எதிராக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், நேற்று நிராகரிக்கப்பட்டது.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த பிரச்னையில், எதிர்க்கட்சிகள் மத்தியில், ஒற்றுமை இல்லாததாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்.பி.,க்கள், புதிய பிரச்னைகளை கிளப்பி, அமளியில் ஈடுபட்டதாலும், அரசுக்கு ஆபத்தில்லை என, பார்லிமென்டில் காங்கிரஸ் நேற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. முக்கிய பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் கிளப்பலாம் என்ற எதிர்பார்ப்பு பல நாட்களாக இருந்ததால், சபை பரபரப்புடன் கூடியது.கேள்வி நேரம் துவங்குவதற்கு முன், சபையில் பலத்த அமளி துவங்கியது. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்ததற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பலத்த கோஷமிட்டதோடு, இந்த பிரச்னை குறித்து, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டும் என, வலியுறுத்தின.
ஆனால், இவை அனைத்தையும், தவிடு பொடியாக்கும் வகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.,க்கள், ஆளுக்கொரு பிரச்னையை கிளப்பினர்."மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, 12 ஆக உயர்த்த வேண்டும்' என, சமாஜ்வாதி எம்.பி.,க்களும், "உ.பி.,யில் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது; அங்குள்ள முதல்வர் அகிலேஷ் அரசை கலைக்க வேண்டும்' என, பகுஜன் சமாஜ் எம்.பி.,க்களும் கோஷமிட்டனர்.
இரு கட்சியினரும், சபாநாயகர் இருக்கையையும் முற்றுகையிட்டதால், சபையில், கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. பார்லிமென்டின், இந்தக் கூட்டத் தொடரில், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டு பிரச்னையை பெரிய அளவில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் எல்லாம்
திட்டமிட்டிருந்தன.ஆனால், அரசை
ஆதரிக்கும் கட்சிகளான, சமாஜ்வாதியும்,
பகுஜன் சமாஜும், மிக முக்கியமான இந்தப் பிரச்னையை ஓரங்கட்டி விட்டு,
சபையில், வேறு பிரச்னைகளை எழுப்பி, திடீர் ஆதிக்கம் செலுத்தியது, திருப்பு
முனையை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து, மத்திய அமைச்சர்களும், காங்., -
எம்.பி.,க்களும் சந்தோஷம் அடைந்தனர்.
கூச்சல், குழப்பம்
அதிகரித்ததால், சபை, நண்பகல், 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும்
சபை கூடியபோது, பகுஜன் சமாஜ் எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகை
இட்டனர். அந்த நேரத்தில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் எழுந்து,
"நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும்' என,
கோஷமிட்டனர். அப்போது, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை,
பேசும்படி சபாநாயகர் அழைப்பு விடுத்தார். பலத்த அமளிக்கு மத்தியில், சுஷ்மா
சுவராஜ் பேசுகையில், ""சில்லரைவர்த்தகத்தில், அன்னிய முதலீடு தொடர்பாக, 2011 டிசம்பரில், அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப், சில உறுதி மொழிகளை அளித்தார்; அது மீறப்பட்டுள்ளது,'' என்றார்.
அந்த நேரத்தில், கடும் அமளி நிலவவே, சபை ஒத்திவைக்கப்பட்டது.மீண்டும், 12:30 மணிக்கு, சபை கூடியபோது, திரிணமுல் காங்கிரஸ் சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து பேச, அந்த கட்சியைச் சேர்ந்த சுதிப் பந்தோபாத்யாவை சபாநாயகர் அழைத்தார்.உடன் பேசிய பந்தோபாத்யாய், ""இந்த அரசு தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு, லட்சக்கணக்கான வர்த்தகர்களை பாதிக்கும். எனவே, இந்த அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம்,'' என்றார்.
இதை ஓட்டெடுப்புக்கு விடுவதாக சபாநாயகர் அறிவித்தவுடன், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள், 19 பேர் எழுந்து நின்றனர். ஒடிசா முதல்வர் நவீன்
பட்நாயக்கின் கட்சியான, பிஜு ஜனதா தள எம்.பி.,க்களில் ஒரு சிலரும் எழுந்து
நின்றனர். இதையடுத்து, ""நீங்கள் கோரும்
Advertisement
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, போதிய ஆதரவு இல்லை; எனவே, உங்கள் தீர்மானத்தை
நிராகரிக்கிறேன்,'' என, சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.
அதேநேரத்தில்,
"சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, சபையில் ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, சமாஜ்வாதி கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது;
அது என் பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவை அறிவிப்பேன்' என்றும்,
சபாநாயகர் மேலும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சபையில், எழுந்த கூச்சல், குழப்பம் காரணமாக, மதியம், 2:00 மணி வரை, சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், நாள் முழுவதற்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக முலாயம் சிங் இருக்கைக்கே சென்று, அவருக்கு சோனியா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க., மவுனம்: சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு பிரச்னைக்காக, லோக்சபாவில் நேற்று பெரும் கூச்சல், குழப்பம் நிலவிய போது, பெரும்பாலான கட்சிகளின் எம்.பி.,க்கள், சபைக்கு நடுவில் வந்தோ அல்லது இருக்கையிலிருந்து எழுந்து நின்றோ, எதிர்ப்பு தெரிவித்தனர்.அந்த நேரத்தில், தி.மு.க., - எம்.பி.,க்களான, டி.ஆர்.பாலு மற்றும் இளங்கோவன் ஆகியோர் சபையில் இருந்தனர். ஆனாலும், எதுவும் பேசவில்லை; அமைதி காத்தனர்.
அ.தி.மு.க., - எம்.பி.,யான தம்பித்துரை எழுந்து, "இந்த பிரச்னை தொடர்பாக, எங்கள் கட்சி கொடுத்த நோட்டீஸ் மீது, என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, சபாநாயகரிடம் கேட்டபடி நின்றிருந்தார். ராஜ்யசபாவிலும், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உட்பட, எதிர்க்கட்சிகள் இதே பிரச்னையை கிளப்பின.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு, பதவி உயர்வில், இடஒதுக்கீடு குறித்த பிரச்னையை, மாயாவதி கிளப்பினார்.
-நமது டில்லி நிருபர்-