திருநெல்வேலி:நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் பட்டப்பகலில், வெட்டிக் கொல்லப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே, ராவுத்தபேரியை சேர்ந்த சங்கரன் மகன் ஆனந்த், 37. பாளை., ஜோதிபுரத்தில் வசித்து வந்த இவர், வட்டார முன்னாள் இளைஞர் காங்., தலைவர். "சி.டி' விற்பனை கடையை நடத்தியதுடன், சினிமா தியேட்டரின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
நெல்லை - திருச்செந்தூர் சாலையில், முருகன்குறிச்சி பகுதியில் கான்ட்ராக்ட் எடுத்திருந்த, சிமென்ட் வாறுகால் அமைக்கும் பணியை, நேற்று காலை, 11 மணியளவில், குவாலிஸ் காரை மெதுவாக ஓட்டியபடி, ஆனந்த் பார்வையிட்டார். அப்போது, அங்கு ஓடி வந்த, எட்டு பேர் கும்பலில் ஒருவன், கார் கதவை பிடித்துக்கொண்டிருந்த, ஆனந்தின் கையில் அரிவாளால் வெட்டினான். இதில் அவரது விரல்கள் துண்டாகின.உயிர்தப்ப, காரில் இடதுபுற கதவை திறந்து, கீழே குதித்து அவர் ஓட முயன்றார். அப்போது ஆயுதங்களுடன் வந்த, ஏழுபேர், ஆனந்தின் பின்பக்க தலையில் வெட்டினர். இதில் அவர், கார் அருகிலேயே இறந்தார்.
அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.பட்டப்பகலில் மார்க்கெட் அருகே, நடந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு துணைகமிஷனர் மணிவண்ணன் உட்பட, அதிகாரிகள் வந்தனர். ஆனந்தின் உடல், பரிசோதனைக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.கொலையுண்ட ஆனந்திற்கு, வாணிஸ்ரீ, 32 என்ற மனைவியும், லோகேஷ் கண்ணன், 10, நிவேதா, 5, என்ற குழந்தைகளும் உள்ளனர். வாணிஸ்ரீ, மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றவர்.
கான்ட்ராக்ட் தகராறு:முருகன்குறிச்சியில், மாநகராட்சி வாறுகால் அமைப்பதே, அவரது முதல் கான்ட்ராக்ட் பணி . இக்கொலைக்கு கான்ட்ராக்டர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பு, தனிப்பட்ட விரோதம், ஜாதி ரீதியிலான மோதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம், என, போலீசார் தெரிவித்தனர்.கொலை குற்றவாளிகளை, உடனே கைது செய்ய வலியுறுத்தி, காங்கிரசார், வண்ணார்பேட்டை கட்சி அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடலை வாங்க, உறவினர்கள், காங்கிரசார் மறுத்ததால், உடல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.