சென்னை:தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீதான, "செக்' மோசடி புகாரை பதிவு செய்யாதது குறித்து, உரிய விளக்கம் அளிக்க, சென்னை துறைமுகம், போலீஸ் துணை கமிஷனருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த, முகன்சந்த் போத்ரா என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா, என்னிடம், 65 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். இதற்காக அவர், இந்த ஆண்டு, ஜூலை 13ம் தேதியிட்ட கடிதத்தை எனக்கு அளித்தார். அதில், "தனக்கு கடனை திரும்ப செலுத்தும் அந்தஸ்து உள்ளது' என, தெரிவித்திருந்தார். அவரது பேச்சை நம்பி, 65 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன்.
பலமுறை கடனை திரும்பி கேட்டதையடுத்து, 40 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு, "செக்'குகளை அளித்தார். வங்கிகளில் செலுத்தப்பட்ட இரு, "செக்'குகளும், பணம் இல்லாமல் திரும்ப வந்தது."செக்' மோசடி செய்த, தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது, அக்., 17ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். அப்புகார், சென்னை துறைமுகம், போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. அப்புகாரை பதிவுசெய்து, உரிய விசாரணை நடத்தப்படவில்லை.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி ஆறுமுகசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், "இதுகுறித்து, சென்னை துறைமுகம், போலீஸ் துணை கமிஷனர், இரண்டு வாரத்திற்குள், உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.