மதுரை:மதுரை ரிங்ரோடு மற்றும் "டோல்கேட்'களை சீரமைக்க, ரூ.8 கோடிக்கு "டெண்டர்' விடப்பட்டும், "பேரம்' நடப்பதால் பணிகள் இன்னும் துவங்கவில்லை.உத்தங்குடி - கப்பலூர் வரை உள்ள ரிங்ரோட்டில், பல இடங்களில், "மெகா' பள்ளங்கள் ஏற்பட்டு, வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரவில் விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டை சீரமைக்கவும், விபத்து பகுதிகளில் ரோட்டை அகலப்படுத்தவும், ஐந்து "டோல் கேட்'டுகளில் "பேவர் பிளாக்' மற்றும் வசதிகள் மேற்கொள்ளவும், மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான "டெண்டர்' அக்டோபரில் விடப்பட்டு, பணி உத்தரவும் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் ஆகியும் பணிகள் இன்னும் துவங்கவில்லை.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: குறிப்பிட்ட ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பணிக்கான "கமிஷன்' போய் சேர வேண்டியவர்களுக்கு சென்றுவிட்டது. அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடக்கும் சில பணிகளுக்கும், அதே
ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க பேச்சு நடக்கிறது. அதற்கான "கமிஷன்' பேரமும் நடப்பதால், ஏற்கனவே எடுக்கப்பட்ட "ரிங்ரோடு' பணிகளை துவக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது, என்றார்.