புதுடில்லி: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு, பகத் சிங் போல ஹீரோ மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள எரவாடா சிறையில் மிகவும் ரகசியமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யோகா குரு பாபா ராம்தேவ் கசாப் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது தெரிகிறது. அஜ்மல் கசாப் ஒரு ஹீரோ போல் சித்தரிக்கப்பட்டுள்ளார். லாகூர் சிறையில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது போல, எரவாடா சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார். இதை விடுத்து கசாப் பொதுமக்கள் முன்னிலையில், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, சுவாமி விவேகானந்தரின் அறிவுத்திறனையும், தாவூத் இப்ராகிமின் அறிவுத்திறனையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ராம்தேவின் இந்த ஒப்பீடு அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் இது சிறந்த ஒப்பீடு இல்லை. இதை ராம்தேவ் தவிர்த்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.