திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. இன்று 7 ஆம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 5.40 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு வீதி உலா வந்து காலை 8.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து 6.20மணிக்கு முருகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. மதியம் 3.10மணிக்கு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் 63அடி உயரமுள்ள மஹாரதத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் தி.மு.க, அமைச்சர் பிச்சாண்டி, முன்னாள் தி.மு.க., நகரமன்ற தலைவர் திருமகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து பெண்களே வடம் பிடித்து இழுத்து செல்லும் பராசக்தி அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் தனித்தனியாக வீதி உலா வந்தன. அப்போது மாட வீதியை சுற்றிலும் பக்தர்கள் தீபாராதனை கொடுத்தும், மண்டகப்படி செலுத்தியும் நேர்த்திகடனை செலுத்தி வழிபட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 27 ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு பரணி தீபமும், மாலை 6மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.