புதுக்கோட்டை:
கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியை தடுத்த தலித் சமுதாய மக்களை,
நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்த போலீஸாரை கண்டித்து, பெண்கள் உட்பட,
300க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட
சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை அடுத்த வாட்டாப்பட்டி
கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்துவருகின்றனர். ஊரின்
மையப்பகுதியில் அவர்களுக்கு சொந்தமான கருப்பர் கோவில் உள்ளது. இதன் அருகில்
ஒன்றரை ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில் தான் கோவில் திருவிழாவின்
போது நாடகம், கரகாட்டம், இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் ஆண்டாண்டு காலமாக
நடத்தப்பட்டு வருகிறது.வாட்டாப்பட்டி கிராமத்தில் தற்போது நிலத்தின்
மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால், கோவில் நிலத்தை ஆக்ரமித்து
வீட்டுமனைகளாக மாற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சிலர் முயற்சி
மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., மற்றும்
டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் ஏற்கனவே, இரண்டு முறை அமைதி பேச்சுவார்த்தை
நடந்தும் உடன்பாடு எட்டவில்லை.இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளதால், இடத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிடுமாறு அதிகாரிகள்
அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பவர் பத்திரம் மூலம்
பிரச்சனைக்குரிய இடத்தை கையகப்படுத்துவதற்காக, சிலர் அந்த இடத்தை சுற்றி
நடுகல் நட்டுள்ளனர். கோவில் இடத்தில் திடீரென்று நடுகல் நாட்டப்பட்டதால்
ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், இரவோடு இரவாக நடுகல்களை புடுங்கி
சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முத்துராமன் என்பவர் கொடுத்த
புகாரின் பேரில், கணேஷ்நகர் போலீஸார் நேற்றுமுன்தினம், நள்ளிரவு, ஒரு
மணிக்கு வாட்டாப்பட்டி கிராமத்துக்குள் சென்று, வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளனர்.நள்ளிரவு நேரத்தில், ஊருக்குள் புகுந்து
வீட்டின் கதவுகளை தட்டியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீஸாருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் சிலரை கைது செய்வதற்காக
வந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். எங்கள் கிராமத்தில் யாரும் கொலையோ,
கொள்ளையோ செய்யவில்லை. எனவே, நாளை காலை வந்து நடவடிக்கை எடுக்குமாறு
அவர்கள் கூறியுள்ளனர்.இதை ஏற்க மறுத்த போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட
இளைஞர்கள், 11 பேரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து
சென்றனர்.ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து ஏழு பேரை விடுவித்த போலீஸார், வேல், மூர்த்தி, ராஜா,
ஜெயக்குமார் ஆகியோரை விடுவிக்க மறுத்துவிட்டனர்.போலீஸாரின் இத்தகைய
நடவடிக்கைகளை கண்டித்தும், நள்ளிரவு வீடுபுகுந்து கைது செய்த, நான்கு
இளைஞர்களை விடுவிக்கக் கோரியும், வாட்டாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
பெண்கள் உட்பட, 300 பேர் நேற்று மதியம் எஸ்.பி., அலுவலகத்தை
முற்றுகையிட்டு, போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும் எஸ்.பி.,
அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடவும் முயன்றனர்.
அவர்களுடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் புரட்சிகவிதாசன், டி.எஸ்.பி.,
செல்லபாண்டியன் ஆகியோர் சமரசம் பேசியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
கிராம மக்களின் முற்றுகை போராட்டத்தால் எஸ்.பி., அலுவலகம்
பெரும்பரபரப்புக்கு உள்ளானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.