திருத்துறைப்பூண்டி:
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை
காப்பதற்கு மழை வேண்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் வார
விழாவில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி கிளையில் வாடிக்கையாளர் இருவார விழா, கிளை மேலாளர் ஸ்ரீதரன்
தலைமையில் நடந்தது. மண்டல முதன்மை மேலாளர் கதிர்வேல் பங்கேற்றார்.
விழாவில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முத்தரசன்,
நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவர்
வையாபுரி, தலைமையாசிரியர் நாகராஜன், கவுன்சிலர் எழிலரசன், பஞ்சாயத்து
தலைவர் விஜயா, முன்னாள் தலைவர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில்
மண்டல முதன்மை மேலாளர் கதிர்வேல் பேசியதாவது:வங்கியில் கல்வி கடன்
வழங்குவதுக்கான மதிப்பெண் சதவீதம், 65லிருந்து குறைக்கப்பட்டு வருகிறது.
இதில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. வங்கியில் பணியாளர் குறைவு என்பது
கடந்து, இருபது ஆண்டுகளாக பணிக்கு பணியாளர்கள் நியமிக்காதது தான் காரணம்.
தற்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் குறைகள்
நீக்கப்படும்.விவசாயம் இயற்கை சீற்றதால் பாதிக்கப்படும் போது, ரிசர்வ்
வங்கி சில வரைவு முறைகளை வைத்துள்ளது. குறுகிய கால கடன்கள் நீண்ட காலமாக
மாற்றுவதுக்கு வாய்ப்புள்ளது. வேளாண்மை இல்லை என்றால், காவிரி டெல்டா
பகுதியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏ.டி.எம்.,களில் உள்ள குறைபாடுகள்,
இரு மாதங்களில் சரி செய்யப்பட்டு விடும். காவிரி பகுதி விவாசயிகளை
காப்பதுக்கு மழை வேண்டி, அனைவரும் கூட்டு பிரார்த்தனை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவரும், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.