சென்னை: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க., ஆதரவு அளிக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் மத்திய அரசு கவிழாமல் இருக்கவே இந்த கசப்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் இம்மாதம், 22ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கிய முதல்நாளில் இருந்தே, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பார்லிமென்டில் கடும் அமளி ஏற்பட்டது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இந்தக் கூட்டத்தொடரை, சுமுகமாக நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு, பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, விவாதத்துடன் கூடிய, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற நோட்டீசை, இடதுசாரி கட்சிகள் அளித்துள்ளன. ஏற்கனவே கருணாநிதி, "சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்காது' என, திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் காங்., தலைவர் தங்கபாலு ஆகியோர் அவருடன் சுமார் 1.20 மணி நேரம் பேசினர். அப்போது, ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும் உடனிருந்தார். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் கொண்டு வரப்பட்டால், மத்திய அரசுக்கு ஆதரவாக தி.மு.க., ஓட்டு அளிக்க வேண்டும் என, குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டார். அப்போது அதற்கு கருணாநிதி, எந்த உத்தரவாதமும், உறுதியும் அளிக்கவில்லை. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளில், தி.மு.க.,விடம் கலந்தாலோசிக்கவில்லை என்ற வருத்தத்தை, குலாம் நபி ஆசாத்திடம், கருணாநிதி வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை தி.மு.க., ஏற்கவில்லை. அதை எதிர்க்கிறது. இந்நிலையில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோருவது போல, விதி எண் 184ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தால் அதன் காரணமாக மத்திய அரசு கவிழக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அதன் விளைவாக மத்தியில் பா.ஜ.,வோ அல்லது அதன் ஆதரவு பெற்ற கட்சியோ ஆட்சிக்கு வருமானால், இன்னும் எத்தனை ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்கள், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்கள் என மதவாத பயங்கரங்கள் ஏற்படும் என்பதை எண்ணிப்பார்த்து, அத்தகைய மதவாத அரசோ, ஊழல் பீதிகளை கிளப்பி வஞ்சக வலையில் மக்களை சிக்க வைக்கும் அரசோ வந்து விடக்கூடாது என்பதற்காக மத்தியில் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எத்தகைய இடையூறும் வராது என்ற நம்பிக்கையில் இவ்விஷயத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய அரசுக்கு தி.மு.க., ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.