சென்னை: "தமிழக சட்டசபை வைரவிழா அழைப்பிதழிலும், அதன் கவரிலும் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகைப்படம் தான் இருக்கிறதே தவிர, ஜனாதிபதி, கவர்னரின் படம் இடம் பெறவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக சட்டசபையின் வைரவிழா சீரோடும், சிறப்போடும் நடந்திட என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். வைரவிழாவில், அவை முன்னவருக்கோ, எதிர்கட்சித் தலைவருக்கோ உரையாற்றும் வாய்ப்பு இருப்பதாக அழைப்பிதழில் இல்லை.இன்று விழா நடைபெறப்போகிறது. இரு நாள் முன்பாக, 27ம்தேதி தேதிதான் ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு சில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தவிர, மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கோ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கோ அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.வைரவிழா வளைவுக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை, ஜனாதிபதி பங்கேற்கும் விழாவிலே இணைக்காமல், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் முன் கூட்டியே வைத்துக் கொண்டு, அந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை, முதல்வரே நடத்தி முடித்து விட்டார்.
விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான ஜனாதிபதியின் படமோ, கவர்னரின் படமோ இடம் பெறவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வைரவிழாவை : புறக்கணிக்கிறது தி.மு.க.,
இன்று நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை வைர விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழக சட்டசபை வைரவிழா, இன்று மாலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.இந்த விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தி.மு.க., பொருளாளரும், சட்டசபை தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் உட்பட தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள் அனைவரும், வைரவிழாவில் பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.