"ரயில்களில் முன்பதிவு செய்து செல்லும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல தவறினால், அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் அடம் பிடிப்பதால், ரயில் பயணம் இனி எட்டாக்கனியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள், "பான்' அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் மத்திய, மாநில அரசுகள், பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள போன்றவற்றில், ஏதாவது ஒன்றின் அசல் ஆவணத்தை, தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை எனில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சிக்கல்:
இந்த உத்தரவு, ரயில் பயணிகளுக்கு, பெரும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இப்புதிய உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது, பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாது. காரணம், இதுகுறித்து போதிய விளம்பரம் செய்யப்படவில்லை. டிக்கெட்டில் மட்டும், விவரம் குறிப்பிடப் பட்டு உள்ளது.ஆனால், டிக்கெட் வாங்கும் பெரும்பாலான பயணிகள், டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களையும், பொதுவாக படித்து பார்ப்பது இல்லை. தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் பெயர், தேதி, வண்டியின் பெயர் போன்ற, ஒருசில விவரங்களை மட்டுமே பார்க்கின்றனர்.முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் கவுன்டரில் உள்ள ஊழியர்களும் இதுகுறித்து, பயணிகளுக்கு எடுத்துக் கூறுவது இல்லை. அறிவிப்பு விளம்பரங்களும், முன்பதிவு மையங்களில் வைக்கப்பட வில்லை.
குழப்பம்:
அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்லாத பயணிகளிடம், அபராதத் தொகை வசூலிக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு தொகை வசூலிக்கப்படும், குழந்தைகளுக்கும் அசல் அடையாள ஆவணங்கள் வேண்டுமா என்பன போன்ற விவரங்கள், தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால், பயணிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
பயணிகள் சிலர் கூறியதாவது:குழந்தைகளுக்கு அடையாள அட்டை ஏது? பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்; படிக்கும் பள்ளி, அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என, ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டையில் மாணவர்களின் பெயர், வகுப்பு, வரிசை எண் ஆகியவை மட்டுமே குறிப்பிடப் பட்டு இருக்கும். மற்றபடி, அந்தப் பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றதா என குறிப்பிடப் பட்டு இருக்காது. இதனால், ரயிலில் பரிசோதகர்கள் சோதனை செய்யும் போது, குறிப்பிட்ட மாணவருக்கு அபராதம் விதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அடையாள அட்டை பெறுவது குதிரைக் கொம்பு:
அரசு வழங்கும் அடையாள அட்டைகள் நாட்டில் உள்ள அத்தனை பேரிடமும் இருக்கும் என தெரியாது. அவர்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் எனில், புதிதாக விண்ணப்பித்து பெற வேண்டும். தற்போதைய நிலையில், அரசாங்கத்திடமிருந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெறுவது, குதிரைக் கொம்பாக உள்ளது.அப்படி வாங்கினாலும், அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் உள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில், ஆண் பெயருக்கு பெண் பெயரும், பெண் பெயருக்கு ஆண் பெயரும் இடம் பெற்றிருக்கும். சிலருக்கு, "இனிஷியல்' மாறி இருக்கும். இதுபோன்ற, அடையாள அட்டைகளை கொண்டு செல்லும் போதும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.ஏற்கனவே, "தட்கல்' டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வெளிப்படையாக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்த போதிலும், மறைமுகமாக கட்டணம் உயர்வுக்கு வழி வகுத்தது. அதேபோல், இந்த அபராத விதிப்பு முறையும் மறைமுக கட்டண உயர்வுக்கு வழி வகுத்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பல குழப்பங்ளைக் கொண்ட, ரயில்வேயின் இந்த அறிவிப்பால், ரயில் பயணம் எட்டாக்கனியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஜனநாயக நாடுய்யா அரசியல் வாதிங்களும் அதிகாரிங்களும் என்ன அழிச்சாட்டியம் பண்ணுனாலும் கேக்க முடியாதுய்யா.அவங்ககிட்ட அதிகாரம் இருக்குன்னு தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன்னு புது மந்திரி வந்தா ஒரு சட்டம் புது அதிகாரி வந்தா ஒரு சட்டம்னு மக்களை நிம்மதியா இருக்க விடமாட்டனுங்கய்யா.ஒருத்தன் பேருல பத்து பாஸ்போர்ட் வச்சிருக்கானுங்க அத ஒன்னும் பண்ண முடியல...வாக்காளர் அடையாள அட்டைக்கு பேரு குடுக்க போஹும்போது நாம சொல்றதுதான் பேரு விலாசம்...எல்லாம் காண்ட்ராக்டு ஆளுங்கள வெச்சு பண்ணுனா எப்பிடிய்யா உரப்படும்...நாம சொல்றதுதான் பேரு அட்ரசு...ஆம்பிளைக்கு பொம்பளன்னும் பொம்பளைக்கு ஆம்பளைன்னும் எழுதி அடையாள அட்டை குடுத்த கேசும் நெறைய உண்டுய்யா.ஒலகத்துக்கே கம்ப்யுடறு எஞ்சிநீயருங்கள சப்பளை பண்ற நம்ம நாட்டுல அவங்கள் வச்சு எல்லாத்துக்கும் அடயழ அட்டை குடுக்க முடியாதா...செய்ய மாட்டானுங்கய்யா செஞ்சா அவங்க தில்லாலங்கடி வேல பன்னமுடியாதுல்லா...ஆஊன்னா புதுசு புதிசா சட்டம் போடுரவனுங்க அது நடைமுறைக்கு ஒத்து வருமான்னு கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா...படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதுனவன் யேட்டக்கேடுத்தான்னு என்னன்னவோ பண்றாங்க..எதெதுக்குல்லாமோ போராட்டம் பண்றவங்க இதுக்கு த்ண்டவாழத்துல தலயக்குடுகனுமுய்யா...எல்லா ரயிலையும் மரிச்சாத்தான் அதிகாரிங்க முட்டாத்தனம் வேழிச்சத்துக்கு வரும்...
மக்களை நிம்மதியாகவே வாழவிடாதீர்கள் ஒருபக்கம் சிலின்டர் .,மின்சாரம் .,போக்குவரத்துக்கு .,விலைவாசி .,என்று எந்த பக்கம் போனாலும் எந்த துறை பக்கம் போனாலும் மக்களுக்கு இடிதான் .,யாரோசெய்த ., செய்யும் ,தவறுகளுக்கு ஆளும் மத்திய அரசும் ,.மாநில அரசும் முடிந்தவரை , மக்கள் எதனையும் அனுபவிபதற்குள் பாதுகாப்பு ,கட்டமைப்பு .,இல்லாமை என்கின்ற பெயரில் எவ்வளவு சோதனைகள் தரமுடியுமோ தந்து கொண்டுதான் உள்ளன இதில் அதிகம் பாதிக்க படுவது சாமானிய நடுத்தர மக்கள் மட்டுமே இதையும் மீறி இன்று மக்கள் குடும்பம் நடத்துவது ...??

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.