"காற்றை வில்லாக வளைப்போம்; மணலைக் கயிறாகத் திரிப்போம்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின் வெட்டை நீக்குவோம்' என்றெல்லாம், வாக்குறுதி அளித்து, அரியணையில் அமர்ந்தவர்களின் ஆட்சியில் தான், வரலாறு காணாத அளவுக்கு, 16 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது.இந்த வரலாறு காணாத மின் வெட்டுக்கு, இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் தான் காரணம் என்று, பழியை சுலபமாக அடுத்தவர்கள் மீது சுமத்தி, தப்பித்துக் கொள்ள பார்க்கின்றனர். பழியை முந்தைய ஆட்சியின் மீது போடுவதற்காகவா, மக்கள், ஆட்சிப் பொறுப்பை அளித்தனர்?சரி... மாநில அரசு தான் இப்படி எனில், மத்திய அரசு எப்படி?
"இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும், மின்சார வசதி செய்து தரப்படும்' என்கிறார் பிரதமர்; கொஞ்சம் கூட வெட்கப்படாமல்...! 65 ஆண்டுகளில் செய்ய முடியாததை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்து காட்டுவார்களாம்!"ஒரு விஷயத்தை ஆறப் போட வேண்டும் அல்லது மூடி மறைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் போடு' என, வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இப்போது நாட்டில் நிலவி வரும் மின் வெட்டு பிரச்னையைத் தீர்க்க, சமாளிக்க, அரசு ஒரு அற்புதமான உபாயத்தை, அரசு கையில் எடுத்திருக்கிறது.
சூரிய சக்தி மூலம், வீட்டுக்கு வீடு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தான் அது. சூரிய சக்தி மூலம், 3,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதோடு, அதற்காக, வீடுகளில் சூரியசக்தி அமைக்க, ஊக்கத் தொகையும் அளிக்கப் போகின்றனர்."ஜவகர்லால் சோலார் சிஸ்டம்' மூலம், மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, ஒவ்வொரு யூனிட்டுக்கும், மத்திய அரசு பணம் வழங்கி வருகிறது.ஆக, வீட்டில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து, அவரவர் வீட்டுத் தேவைகளை எதிர்கொள்ள முயன்றால், மாநில அரசு ஊக்கத் தொகை அளிக்கும். உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும், மத்திய அரசும், மானியத்தொகை வழங்கும்.
மேலோட்டமாக பார்த்தால், சூப்பர் திட்டமாகத் தான் தோன்றும். நெருங்கி வந்து, பார்த்தால் தான், இந்த சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் உள்ள கோளாறுகள் தென்படும்.சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய பயன்படும் உபகரணங்களைப் பொருத்த முதலில், "மொட்டை மாடி' வேண்டும். சொந்தமாக வீடின்றி, வாடகை வீட்டில் வசிப்பவர்களின் நிலைமை என்ன? நாட்டில் எத்தனை பேர்களுக்கு சொந்த வீடு உள்ளது?இப்போதெல்லாம், 30 - 40 மாடி என்று, "ப்ளாட்' கட்டப்படுகின்றன. மொத்தம், 10 ஆயிரம் சதுரடி நிலத்தில், ஒரு ப்ளாட்டுக்கு, 2,400 சதுரடி வீதம், ஒரு தளத்திற்கு, நான்கு ப்ளாட்டுகள் வீதம், 20 மாடியில், 80 ப்ளாட்கள் சர்வ சாதாரணமாக கட்டப்பட்டிருக்கும். அந்த, 2,400 சதுரடி ப்ளாட்டிற்கு, எத்தனை டியூப் லைட்கள், "ஏசி' மிஷின்கள், மின் விசிறிகள், எல்.சி.டி.,கள், வாட்டர் ஹீட்டர்கள், பிரிஜ் மற்றும் ஏனைய உபகரணங்கள் இருக்கும்... அவற்றிற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்!
அந்த ப்ளாட்டில், 9,600 சதுரடி மொட்டை மாடி தானே இருக்கும்; அந்த, 9,600 சதுரடி மொட்டை மாடியில், எத்தனை சதுரடி அளவில், சூரிய சக்தி மின் உற்பத்தி பேனல் அமைக்க முடியும்? அதிலிருந்து மொத்தமுள்ள, 80 ப்ளாட்களுக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமா?ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான நான்கு டியூப் லைட்கள், இரண்டு மின் விசிறிகள், ஒரு பிரிஜ், ஒரு வாஷிங் மிஷின், ஒரு, "டிவி' ஆகியவற்றை இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க, உபகரணங்களைப் பொருத்த, குறைந்த பட்சம், 1 லட்சம் ரூபாய் தேவைப்படுமாம். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு என்பது, ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்கு, "சுமை'யான விஷயம் அல்லவா?
சூரிய சக்தி மின் உபகரணங்களை அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்க முன் வந்தாலும், அந்தத் தொகையை வாங்குவதற்குள் ஒரு சாமானியனுக்கு, "தாவு' தீர்ந்து விடும் என்பது ஒரு புறம். அரசு இனாமாக வழங்கும் தொகைக்கு, அரசு அலுவலர்களுக்கு ஒரு தொகையை, கப்பமாக அல்லது அன்பளிப்பாக (லஞ்சமாக அல்ல) கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மறுபுறம்.ஊக்கத் தொகை வழங்குவதாக, அரசு சொல்லிவிட்டதே தவிர, அந்தத் தொகையை வழங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து, இதுவரை அரசு மூச்சு விடவில்லை.
மழைத் தண்ணீர் வீணாகி, விரயமாகி, மக்களையும் படுத்துவதைத் தவிர்க்க, "மழை நீர் சேகரிப்பு திட்டம்' என்றொரு புரட்சிகரமான திட்டத்தை, கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.அறிமுகப்படுத்தியதோடு விட்டு விடவில்லை. "மழை நீர் சேமிப்பு திட்டம்' என்ற, அத்திட்டத்தை கட்டாயமாக்கியதோடு, அரசு அலுவலகங்கள் உட்பட, அனைத்து வீடுகளும், கட்டடங்களும், அலுவலகங்களும், மருத்துவமனைகளும், ஓட்டல்களும், தொழிற்சாலைகளும், "இங்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்று, எழுதியும் வைக்கச் செய்தார்.
அரசு அலுவலர்கள் களத்தில் இறங்கி, சோதனை செய்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்தாத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு அபராதம் விதித்து, வசூலித்த காட்சிகளும் நன்றாகவே நடந்தேறின.மழைநீர் சேகரிப்பு திட்டம், நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. மக்கள் மழைநீர் சேகரிப்பு என்ற அத்திட்டத்தை முழு மனதோடு, நேர்மையாக, நாணயமாக, ஆர்வமாக செயல்படுத்தி இருந்தால், "சிரபுஞ்சி'யில் பெய்யும் அளவுக்கு மழை கொட்டினாலும் கூட, வீதிகளிலும், விளைநிலங்களிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது. அத்தனை நீரும் பூமியால் உறிஞ்சப்பட்டு, சேகரிக்கப்பட்டிருக்கும். நடந்ததா? அதே போன்றதொரு நிலைமை, இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்கு நேர்ந்து விடக் கூடாதே என்பது தான், நம் ஆதங்கம்.
எஸ்.ராமசுப்பிரமணியன்,எழுத்தாளர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலை நாடுகளில் பெரும்பாலும் குளிர் காலமாகவே இருக்கும் ,ஆனால் நமது நாட்டில் சூரிய ஒளி கிட்டத்தட்ட பத்து மாதங்கள் இருக்கும் ,எனவே நமது நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் மிகுந்த பயனைக்கொடுக்கும் என்பது என் கருத்து . அதிக அளவில் உற்பத்தி செய்தால் சூரிய உபகரணங்களின் விலையை வெகுவாக குறைக்கமுடியும் .ஒளி இலவசம் ,பொருள் மட்டும் தான் நாம் தயாரிக்க வேண்டும் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
கட்டுரை ஆசிரியர் அவர்கள் 40 மாடி கட்டிடத்தை பற்றி கூறும்போது அதற்கான வெட்டவேளிநிலம் அதாவது osr பற்றி கூறவேயில்லை .அந்த வெட்டவெளி நிலத்தில் மின்சார உற்பத்திக்கான உபகரங்களை நிறுவலாமே.அரசாங்கம் எடுக்கும் நல்ல திட்டங்களுக்கு ஒரு சில தடைகள் வரும் .trial and error மூலமாகவே எந்த ஒரு திட்டத்தையும் நிறை வேற்ற இயலும். அதேபோல் எல்லா திட்டங்களுமே நூறு சதவிகிதம் வெற்றி அடைய முயாது .நாற்பது சதவிகிதம் வெற்றி அடைந்தாலே வெற்றிதானே .சிறுதுளி பேரு வெள்ளம் என்பது போல் நல்ல திட்டங்கள் உடனே இல்லை என்றாலும் இன்னும் பத்து வருடங்கள் கழித்தாவது நமது தேவையில் ஒரு பங்கை அளிக்காதா. நல்லதே நினைப்போம்.
வெளிநாடுகளில்கூட இந்த சோலார் சிஸ்டம் ஆய்வு நிலைகளிலேயே உள்ளன,பேனலை தூசு தட்டுவதற்கே ஒரு ஆள் போடவேண்டும் இல்லையென்றல் அது சரியாக வேலைசெய்யாது மேலும் மழைக்காலங்கள் மற்றும் மேக மூட்டங்களில் அதன் உற்பத்தி சரியாக இருக்காது. சிறிய அளவில் உள்ள பேனல்களில் மட்டுமே ரோடேடிங் பண்ணும் மோட்டரை பொருத்தி காலையும் மாழையும் சூரியனுக்கு நேராக பேனலை திருப்ப முடியும். சோலார் எனர்ஜி நல்லதேன்றாலும் நம்முடைய யானை பசிக்கு சோளப்பெரியாகவே அமையும் என்பதுதான் தற்போதைய கசப்பான உண்மை
சோலார் சிஸ்டம் மூலமாக கிடைக்கும் மின்சாரம், நமது முழு தேவையினை கொடுக்காது. However it reduces the depency on energy from other means. அது போக இது கிராமங்களில் அதுவும் தனி வீடுகளுக்கு மிக சிறந்தது. Distribution loss கிடையாது. ஆகவே இந்த திட்டத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முடியாது. நகரங்களுக்கு வேண்டுமானால் இது தேவை இல்லாமல் இருக்கலாம்.
மழை நீர் சேகரிப்பைக் கட்டாயப் படுத்தியதால் வந்த வினை ஜெயா பதவியை இழந்ததே.அதனால்தான் மின்சார சிக்கனத்தை எந்த அரசியல்வாதியும் வலியுறுத்துவதில்லை ஹெல்மெட் உடபட எந்த நல்ல விசயத்தையும் காட்டாயப்படுத்தவே கோருவதில்லை. தனக்கு நன்மை செய்தாரை கசப்பு மருந்து கொடுத்த எதிரியைப் போல பார்த்தது யார் குற்றம்? வாக்கு வங்கி அரசியல் பொது மக்கள் தன்மைக்குத் தாமே வைத்துக்கொள்ளும் வேட்டு.
கட்டுரையாளர் தொழிநுட்ப பின்னணி இல்லாமல் எழுதி இருக்கலாம்......இருந்தாலும் அவர் கூறிய விஷயம் பாமரன் கூட அறிந்து கொண்டு திட்டம் எவ்வளவு நன்றாக அமைய பெரும் என்கிற அவரின் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.......ஏற்கனவே பல முறை குறிப்பிட்டது போல் இதை அரசே நேரிடையாக இறங்கி செயல்படுத்த வேண்டும்.....அதாவது மாவட்டத்திற்கு நூறு மெகாவாட் என்கிற முறையில் இத்திட்டத்தை ஒதிக்கீடு செய்து அணைத்து மாவட்டத்திலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்து முடிக்கும் வகையில் செயல் படுத்தவேண்டும்.....இது சாத்தியம் தான்... இந்த நூறு மெகாவாட்டை உதாரணதிற்கு ஒரு மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்கள் வாரியாக பிரித்து அங்குள்ள அணைத்து அரசு அலுவலகங்கள்,அரசு கட்டிடங்கள் ,அரசு பள்ளிகள் என்று அணைத்து அரசு சார்ந்த கட்டிடங்களில் நிறுவலாம்.... இதுவும் சாத்தியம் தான்....இந்த கட்டிடங்களில் பாதுகாப்புகேன்று எப்போதுமே வாட்ச்மேன் இருப்பதால் திருட்டு பயமோ அல்லது வேறு வகையிலான ஆபத்தோ தவிர்க்கப்படும்.....அதே போல் உள்ளூரிலேயே அமையபெறுவதால் இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உள்ளூரில் துணை மின் நிலையத்தோடு இணைத்து பின் பகிர்ந்து அளிக்கலாம்...இதன் மூலம் வெகு தூரம் மின்சாரத்தை எடுத்து செல்ல வேண்டிய அவசியமோ,அதனால் ஏற்படும் மின் இழப்போ முற்றிலும் தடுக்கப்படும்... இதை தொழில்மாவட்டங்களான கோவை, திருப்பூரில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பின் மற்ற மாவடடத்திற்கு விரிவு படுத்தலாம்.....இந்த பிரச்சனையை அரசு களையும் போது மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்து பின் அவர்களாகவே அவரவர் வீட்டில் இதை செய்து கொள்ள முன் வருவர்....
அரசுகட்டிடங்களில் செய்வது சரியாகத்தெரியவில்லை.. சென்றவார தினமலரில் (கடலூரில் விளையாட்டு திடலில் என்று நினைக்கின்றேன்) பல லட்சத்தில் செயப்பட்ட இதே திட்டம் உபயோகம் இல்லாமல் கிடப்பதை போட்டோவுடன் பார்த்தோம்... அவர்களுக்கு அரசின் பணம் நமது பணமாக தெரிவதில்லை...தனியார் வசம் உள்ளது நல்லது... நீங்கள் கூறுவது போல மாவட்ட வாரியாக நூறு மெகாவாட் என்கிற முறையில் இத்திட்டத்தை அமுல் படுத்தலாம்.......
அடேங்கப்பா உங்க சிந்தனை ஓட்டம் மிக அருமை. யாரு சார், இப்படி இல்லாம் சிந்திக்கிறாங்க. உங்க சிந்தனை எவ்வளவு சீக்கிரம் பரவுகிறதுண்ணுட்டு ஒரு நடை டாஸ்மாக் பக்கம் போய் பாருங்க. காலையிலே ஏழு மணிக்கே வரிசையிலே நிற்கும் கூட்டத்தை என்னே என்று சொல்ல? இருந்தாலும் கொஞ்ச நேராமவது உங்கள் சிந்தனை சிந்திக்க வேண்டியர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும். மிகவும் அருமை உங்கள் கட்டுரை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.