ஆத்தூர் : தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க., மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன் உட்பட, 10 பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், கடந்த மாதம், 26ம் தேதி, அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக அரசையும், முதல்வர் ஜெ.,வையும் கடுமையாக விமர்சித்து பேசியதாக, தலைவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதையடுத்து, தே.மு.தி.க.,வின், கெங்கவல்லி, எம்.எல்.ஏ., சுபா, மாநில துணைச் செயலர் இளங்கோவன் உட்பட, எட்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஒன்றிய பொருளாளர் துரை.கருப்பழகியை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த மாதம், 28ம் தேதி, தலைவாசல் எஸ்.ஐ., முருகேசன் அளித்த புகாரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேட்டூர் பார்த்திபன், கெங்கவல்லி சுபா, சேலம் வடக்கு அழகாபுரம் மோகன்ராஜ் உட்பட, 117 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், சேலம் மாநகர் மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட, ஏழு பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இதுவரை, தே.மு.தி.க., நிர்வாகிகள் மொத்தம், 11 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ந்நிலையில், எம்.எல்.ஏ., பார்த்திபன் உட்பட, எட்டு பேருக்கு, ஜாமின் வழங்கக்கோரி, ஆத்தூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, கடந்த மாதம், 30ம் தேதி, நீதிபதி முகமது அன்சாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், எம்.எல்.ஏ., பார்த்திபன் உட்பட மூன்று பேரின் ஜாமின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், மனுவை டிச., 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார். எம்.எல்.ஏ., பார்த்திபன் உள்ளிட்ட , எட்டு பேருக்கு ஜாமின் வழங்கக்கோரி, நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:30 மணியளவில், நீதிபதி முகமது அன்சாரி முன்னிலையில், ஜாமின் மனு மீது விசாரணை நடந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி முகமது அன்சாரி, "மேட்டூர் எம்.எல்.ஏ., பார்திபன், சேலம் மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் சுல்தான்பாஷா, மாவட்ட துணைச் செயலர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் சங்கர், முருகேசன், அண்ணாதுரை, தங்கதுரை, பொன்னுசாமி ஆகிய, 10 பேருக்கு, ஜாமின் வழங்கப்படுகிறது. இவர்கள், மறு உத்தரவு வரும் வரை, தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தினமும் கையெழுத்திட வேண்டும்' என, உத்தரவிட்டார்.