முன்னோர்களின் வாழ்க்கை முறையையும், கட்டடத் திறனையும், உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், காஞ்சிபுரம் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில், வைகுண்டப் பெருமாள் காவில், மாதங்கீஸ்வரர் கோவில், சுரகரேஸ்வரர் கோவில், முத்தீஸ்வரர் கோவில், பிறவாஸ்தானேஸ்வரர் கோவில், இறவாஸ்தானேஸ்வரர் கோவில், ஆகியவை இந்திய தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.ஆக்கிரமிப்புஇக்கோவில்களில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோவில் முறையாக பராமரிக்கப்படுகிறது. கோவில் நுழைவு வாயிலில், இக்கோவில் இந்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிலை சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு, கட்டடம் எதுவும் கட்டக்கூடாது, என்ற விதி, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கோவில்களை சுற்றி ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளன. இறவாஸ்தானேஸ்வரர் கோவில் மதில் சுவர் மீதே வீடு கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனை சாலையில் உள்ள, முத்தீஸ்வரர் கோவிலை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. இந்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட, மணல் சிற்பங்கள் காண்போரை கொள்ளை கொள்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவிலில் உள்ள சிற்பங்களில், ஆட்சி முறை, போர் முறை, மக்களின் வாழ்க்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல்கள் இல்லை இக்கோவில்களின் பெருமையை புத்தகங்களில் படித்து, அவற்றை காண்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் வரைபடம் உதவியுடன், கோவிலை கண்டுபிடித்து செல்கின்றனர். ஆனால், கோவிலில் அதன் வரலாறு குறித்த விவரங்கள் எதுவும் இல்லாததால், அங்கு வருவோர் ஏமாற்றமடைகின்றனர். அதேபோல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், கோவில் வரலாறு குறித்த தகவல் இல்லை. சில கோவில்களில் தல வரலாறு புத்தகம் கூட கிடைப்பதில்லை. இதனால் இளைய தலைமுறையினருக்கு, கோவில் கட்டப்பட்ட காலம், அதை கட்டியவர்கள் குறித்த விவரம் எதுவும் தெரிவதில்லை. கோவிலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்கள் உணர்வதில்லை. இதுவும் ஆக்கிரமிப்புக்கு முக்கியக் காரணம். பாதுகாப்பது கடமை கோவில்கள் நமது வரலாற்று பொக்கிஷங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது, நமது கடமை. பல தலைமுறையினர் நடமாடியப் பகுதி. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை, அறிய உதவும் அருங்காட்சியகம், என்பதை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக, கோவில்களில் அவற்றின் புராண வரலாறு, கட்டட வரலாறு, போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதி வைக்க, இந்திய தொல்பொருள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள், காஞ்சிபுரம் கோவில்களின் பெருமையை அறிந்து கொள்ள முடியும். செய்வார்களா?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.