திருப்பூர்:திருப்பூரில்,
ரேஷன் கடைகள் அருகே அமர்ந்திருக்கும் இடைத்தரகர்கள், கேபிள் "டிவி'
கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க, பொதுமக்களிடம் ரூ.10 முதல்
20 வரை வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரித்த குடிமைப்பொருள் வழங்கல்
துறை அதிகாரி, "எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, தன்னார்வ தொண்டர்கள்
உதவி செய்ய வேண்டுமே தவிர, எக் காரணம் கொண்டும் பணம் வசூலிக்கக் கூடாது,'
என, எச்சரித்துள்ளார்.கேபிள் "டிவி' ஆபரேட்டர்களில் பலர், இணைப்பு
விவரங்களை முழுமையாக காட்டாமல், பொய் கணக்கு காண்பித்து, அரசுக்கு, குறைவாக
பணம் செலுத்துவதாகவும், இதனால், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படுகிறது என்றும் தொடர்ந்து பல புகார்கள் சென்றன. அதனால், ரேஷன் கடைகள்
மூலம், விண்ணப்பங்கள் வினியோகித்து, உண்மையான இணைப்புகளை கண்டறிய முடிவு
செய்யப்பட்டது,அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், கேபிள் "டிவி'
கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு பொருள் வாங்க வரும் நுகர்வோருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு,
உடனே பூர்த்தி செய்து திரும்பத் தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த
சில நாட்களாக, ரேஷன் கடைகளில் விண்ணப்பமும் வழங்கப்படுகிறது.கடைகளுக்கு
அருகில், அமர்ந்திருக்கும் இடைத்தரகர்கள், ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி
செய்ய ரூ.10 முதல் 20 வரை கறாராக வசூலித்து வருகின்றனர்.
பொருள் வாங்க
வரும் பெண்களிடம், "விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே
பொருள் வழங்குவர்,' என்றும் அளந்து விடுகின்றனர். அதை உண்மையென்று நம்பும்
பெண்கள், பணம் கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கி,
விற்பனையாளரிடம் கொடுக்கின்றனர்.அப்படிவத்தில், குடும்ப தலைவர் பெயர்,
முகவரி, வீட்டில் "டிவி' உள்ளதா, கேபிள் இணைப்பு உள்ளதா, ஆபரேட்டரின்
பெயர், முகவரி, டி.டி.எச்., உள்ளதா, கேபிள் இணைப்புக்கு மாத கட்டணமாக
வழங்கும் தொகை எவ்வளவு, எத்தனை சேனல்கள் தெரிகின்றன, தெளிவாக தெரியும்
சேனல்களின் எண்ணிக்கை போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இக்கேள்விகளுக்கு
பதில ளிக்க, இடைத்தரகர்கள், காசு பார்க்கின்றனர்.சில ரேஷன் கடைகளில்,
கேபிள் "டிவி' கணக்கெடுப்பு படிவம் வினியோகம் காரணமாக, பொருட்கள் வழங்க
விற்பனையாளர்கள் மறுக்கின்றனர். காரணம் கேட்டால், "டி.எஸ்.ஓ., சொல்லி
விட்டார். கேபிள் "டிவி' விண்ணப்பங்களை கொடுத்து, பூர்த்தி செய்து வாங்கும்
வேலை முடிந்தபின், பொருட்கள் வழங்குங்கள்,' என்று விளக்கம் அளிக்கின்றனர்.
இப்பிரச்னைகள்
குறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரியிடம் கேட்டபோது, "கேபிள்
கணக்கெடுப்பு படிவத்தை, சம்பந்தப்பட்ட நுகர்வோரே பூர்த்தி செய்து கொடுக்க
வேண்டும். எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் உதவி
செய்யலாம் என்று கூறியுள்ளோம். அதற்கு பணம் வசூலிக்கக் கூடாது என்று
கடுமையாக அறிவுறுத்தி உள்ளோம். அதை மீறி வசூலிப்பவர்கள் மீதும்,
சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'
என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.