வால்பாறை:வால்பாறையில்,
பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி பூங்கா பூட்டிக்கிடப்பதால்,
சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வால்பாறை மலைப்பகுதியில்
பொதுமக்களுக்கு எந்தவித பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. குறிப்பாக ஒரு
சினிமா தியேட்டர் கூட இல்லை. இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து
செல்வதால், நகராட்சி சார்பில் "பூங்கா' ஏற்படுத்த வேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நகராட்சி சார்பில் அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்20 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2010ல் பூங்கா
கட்டப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள, இந்த பூங்காவை
காண காலை 6.30 மணியிலிருந்து 11.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல்
இரவு 7.00 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நுழைவு
கட்டணமும் இல்லாததால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கண்டு
மகிழ்ந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூங்கா களையிழந்து,
பூட்டியே
கிடக்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட இந்த பூங்காவை பராமரிக்க,
நகராட்சி சார்பில் யாரையும் நியமிக்காததால், விளக்கு, அழகு பொருட்கள்
திருட்டு போய்விட்டன.
மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கும் நகராட்சி
நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலத்திடம் கேட்ட போது, ""பூங்காவை
பராமரிக்க போதிய ஆள் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக பூங்கா திறக்க
முடியவில்லை. இங்கு போடப்பட்ட விளக்குகள் காணாமல் போய் விடுகின்றன. இதை
சரி செய்யும் வகையில், ஓரிரு நாளில் பூங்காவை சுத்தம் செய்து, ஒளிரும் மின்
விளக்குகளை போட்ட பின்னர் வழக்கம் போல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
திறந்துவிடப்படும்,'' என்றார்.காதலர் பூங்காவாக
மாறுகிறது?வால்பாறை
பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நகராட்சி சார்பில் இந்த நவீன
பூங்கா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
குழந்தைகளுக்காக
கட்டப்பட்ட இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சலில் கல்லூரி, மாணவ, மாணவியர்
பயன்படுத்துகின்றனர். பூங்காவிற்கு அருகிலேயே கல்லூரி இருப்பதால், மாலை
நேரத்தில் கல்லூரி மாணவர்கள்
பூங்காவை பயன்படுத்துகின்றனர்.பூங்காவை
பராமரிக்க நகராட்சி சார்பில் யாரும் நியமிக்கப்படாததால் நகராட்சி பூங்கா
"காதலர் பூங்கா' வாக மாறி வருகிறது. இதனால் குழந்தைகள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.