Minibus accident in Kothagiri : 7 dead | மினி பஸ் விபத்தில் ஏழு பேர் பலி : காயமடைந்த 26 பேருக்கு சிகிச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி பஸ் விபத்தில் ஏழு பேர் பலி : காயமடைந்த 26 பேருக்கு சிகிச்சை

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மினி பஸ் விபத்தில் ஏழு பேர் பலி : காயமடைந்த 26 பேருக்கு சிகிச்சை

கோத்தகிரி அருகே கொட்டகம்பையில், தனியார் மினி பஸ் விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் பலியாயினர்; காயமடைந்தவர்கள், கோத்தகிரி, ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியிலிருந்து கொட்டக்கம்பைக்கு, நேற்று முன்தினம் இரவு, 7:20 மணியளவில், தனியார் மினி பஸ் சென்றது. 58 பேர் பயணித்தனர். கொட்டகம்பைக்கு இடைப்பட்ட, அண்ணாநகர் அருகே, எதிர்பாராதவிதமாக, 300 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது. பொதுமக்கள் மற்றும் போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில், ஏழு பேர் பலியாயினர். டிரைவர், நடத்துனர் உட்பட, காயமடைந்த, 26 பேர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வெங்கட்ராமன் கூறுகையில், ""எதிர்புறம் வந்த வாகனத்துக்கு இடம் கொடுத்த போது, விபத்து நடந்துள்ளது. வருங்காலங்களில், இந்த இடத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

அலுவலர் பற்றாக்குறை : ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாவுக்கு, இரண்டு, "பிரேக் இன்பெக்டர்கள்' இருக்க வேண்டும். சில ஆண்டுகளாக, ஒருவர் மட்டுமே உள்ளார். நான்கு தாலுகாக்களில் இயக்கப்படும், மினி பஸ் உட்பட, பிற வாகனங்களை கண்காணிப்பது, அலுவலகப் பணி என, அனைத்தையும் ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளதால், மினி பஸ்களின் கண்காணிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, காலியாக உள்ள, பிரேக் இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மினிபஸ் டிரைவர் கைது : அதிவேகத்தில் ஓட்டுவது, காயம் ஏற்படுத்துவது, இறப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை, விபத்தை ஏற்படுத்திய மின் பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆறுதல் : விபத்தில் உயிரிழந்த உறவினர்களுக்கு, அ.தி.மு.க. - தி.மு.க. - தே.மு.தி.க. - பா.ஜ., உட்பட, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், இந்து முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், ஆறுதல் கூறி, இரங்கல் கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவிகள் சோகம் : விபத்தில், கோத்தகிரி செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி நந்தினி, 17, பலியானார். இந்த துயர சம்பவத்தை அறிந்த பள்ளி ஆசிரியைகள், மாணவியர் துக்கமடைந்தனர். மாணவியின் இறுதி சடங்கு, மேல்தட்டபள்ளம் பகுதியில் நடந்த நிலையில், பள்ளி மாணவியர், மாணவி நந்தினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

முறைப்படுத்துவது அவசியம் : கோத்திகிரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு, 19 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு அறிவித்த வழித்தடங்களுக்கு மாறாக, மாற்று சாலையில் பஸ்கள் இயக்கப்படுவதோடு, 50 முதல், 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதுதவிர, மினி பஸ்களில் அதிக இரைச்சலுடன் பாடல்கள் ஒலிபரப்பு படுவதும், அவ்வப்போது, ஓட்டுனர்கள் மொபைல்போனில் பேசிக் கொண்டும், நண்பர்களை அழைத்து, "பேனட்டில்' உட்கார வைத்து, ஓட்டுனர்கள் பேசி கொண்டே செல்வது தொடர்கிறது. இதனால், ஓட்டுனர்களின் கவனம் சிதறி, விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது என, பொதுமக்களின் குற்றச்சாட்டு உள்ளது.

அஜாக்கிரதை காரணம்? : நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் கூறியதாவது: மினி பஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் தான் விபத்து நடந்துள்ளது; டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, வருகிறது. விபத்து நடந்த சாலையில், மேற்கொண்டு விபத்து எதுவும் நடக்காமல் இருக்க, தடுப்பு அமைக்க, நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர, மினி பஸ்களில், ஓவர் லோடு, அதிவேகம் உட்பட, மினி பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

விபத்துக்கு காரணம் "ஓவர் லோடு' - மாவட்ட கலெக்டர் திட்டவட்டம் : நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: மினி பஸ்சில், 58 பேர் பயணித்துள்ளனர். 25 பேர் பயணிக்கக் கூடிய பஸ்சில், கூடுதல் எண்ணிக்கையில் பயணித்தது தான், விபத்து நடக்க காரணம். பஸ்சின் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், எஸ்.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்த விரிவான அறிக்கை, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறுகிய சந்து, மலை இடுக்கு, தோட்டம் உட்பட இடங்களில், மீட்பு பணிகள் மேற்கொள்ள, பெரிய தீயணைப்பு வாகனங்களை, அந்த இடங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல முடிவதில்லை. சிறிய தீயணைப்பு வாகனங்களை, தீயணைப்பு நிலையங்களுக்கு வழங்க வேண்டும் என, மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் குழு -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை